இனவாத கிளர்ந்தெழுகை சாதகமானதா…? - Sri Lanka Muslim
Contributors

இன்று கோத்தா அரசுக்கு ஆதரவான பேரணி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் வழக்கம் போன்று முஸ்லிம்களை நோக்கி இனவாத அம்புகள் வீசப்பட்டிருந்தன. இந்த அம்புகளை கண்டதும், மீண்டும் இனவாதம் துளிர்விடுகிறதா என்ற அச்சம் முஸ்லிம்கள் சிலரிடயே ஏற்பட்டுள்ளதை அவதானிக்க முடிகிறது. இந்த அச்சத்தில் நியாயம் இல்லாமலுமில்லை.

எல்லா நேரமும் ஒரே பருப்பு மக்களிடம் வேகாது. தற்போது முழு இலங்கை மக்களும் ஆளும் அரசோடு மிக கடும் கோபத்தில் உள்ளனர். முஸ்லிம்கள் மீதான இனவாதத்தை விதைத்து, எம்மை ஏமாற்றிவிட்டார்கள் என்ற அவர்களது கோபத்தையும் பல இடங்களில் அவதானிக்க முடிகிறது. இச் சந்தர்ப்பத்தில் இப் பேரணியில் கூறப்பட்ட எமக்கெதிரான கருத்துக்கள், எம் மீது கடந்த காலங்களில் முன் வைக்கப்பட்ட குற்றச் சாட்டுக்களை ஐயமுற நியாயப்படுத்தும் வகையிலேயே அமைந்துள்ளன.

இன்றைய அரசுக்கு ஆதரவான குறித்த பேரணியில் கடந்த காலங்களில் இனவாதத்தை விதைத்த பாடகர் இராஜ், டான் பிரசாத் உட்பட சில இனவாதிகள் கலந்துகொண்டிருந்தனர். குறித்த காலி முகத்திடல் ஆர்ப்பாட்டத்தை முஸ்லிம்களே திட்டமிட்டு செய்கிறார்கள் போன்ற பல இனவாத விசம் பீச்சப்பட்டிருந்தது. இதில் வழமை போன்று சில டம்மி பீசுகள் கொக்கரித்தன. காலி முகத்திடல் ஆர்ப்பாட்ட களத்தில் இலட்ச கணக்கான மக்கள் உள்ளனர். இவ் ஆர்ப்பாட்டத்தை பொது மக்கள், அதிலும் குறிப்பாக இளைஞர்கள், தானாக முன் வந்து நடத்துவது யாவரும் அறிந்ததே! இதனை யாராவது ஒருவர் முஸ்லிம்கள் நடத்துவதாக கூறினால், கூறும் நபரை அனைவரும் எவ்வித சிறு சந்தேகமுமின்றி அனைவரும் ” பொய்யன் ” என பெயர் சூட்டி அழைப்பர்.

இன்றைய அரசுக்கு ஆதரவான பேரணியில் கூறப்பட்ட இனவாத கருத்தின் மூலம் பாடகர் இராஜ், டான் பிரசாத் உட்பட பல இனவாதிகளின் உண்மை முகங்கள் தோலுறிக்கப்பட்டுள்ளன என்பதே உண்மை. இவர்கள் கடந்த காலங்களில் விதைத்த இனவாத கருத்துக்களும் பொய்யாகியுள்ளன. முஸ்லிம்கள் மீது இனவாதத்தை விதைத்து மக்களை திருப்பலாம் என்ற இனவாதிகளின் திட்டத்தை சாதாரண சிங்கள மக்களும் இதன் மூலம் அறிந்திருப்பர். இனி இவர்களின் ஆட்டமெல்லாம் செல்லாது. இதுவே முஸ்லிம்களுக்கு அவசியமானது.

இன்று தூவப்பட்ட இனவாத பிரச்சாரத்தில் முஸ்லிம்கள் அச்சப்பட ஏதுமில்லை. அது எமக்கு சாதகமான நிலையிலேயே உள்ளது. இவர்களது இனவாத கருத்துக்களை யாரும் கணக்கில் கொண்டதாக தெரியவில்லை. தற்போதைய ஆளும் அரசுக்கு கடைக்கு சென்ற இராஜை மக்கள் தேடி, சமூக வலைத்தளங்களில் நையாண்டிக்குட்படுத்தி கொண்டிருந்த வேளை, அவர் இவ் வேலையை செய்திருப்பது, அவர் மீதான மக்கள் கோபத்தை மேலும் அதிகரிக்க காரணமாகியுள்ளது. இவர் பொத்துவில் முகுது மஹா விஹாரை பிரச்சினைக்கு பாட்டு பாடி இனவாதத்தை தூண்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது. மக்கள் இனவாதிகளை விளங்கி கொள்ள இது ஒரு அழகிய சந்தர்ப்பமாகியுள்ளது.

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்,
சம்மாந்துறை.

Web Design by Srilanka Muslims Web Team