இன்னும் 6 மாதத்திற்காகவது மீராசாஹிப், மேயர் பதவியில் நீடிக்க அனுமதிக்க முடியுமா..? - Sri Lanka Muslim

இன்னும் 6 மாதத்திற்காகவது மீராசாஹிப், மேயர் பதவியில் நீடிக்க அனுமதிக்க முடியுமா..?

Contributors

இம்மாதம் முதலாம் திகதியிலிருந்து சிராஸ் மீராசாஹிபை கல்முனை மாநகரசபை மேயராக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஏற்றுக்கொள்ளாது என்ற தமது நிலைப்பாட்டில் திட்டவட்டமாக எந்த மாற்றமும் இல்லை என கட்சியின் தலைவரும், நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம், ஞாயிற்றுக்கிழமை (3) முற்பகல் தம்மைத் தனித்தனியாக சந்தித்து அந்த விவகாரம் தொடர்பில் கலந்துரையாடிய சாய்ந்தமருது ஜும்ஆ பள்ளிவாசல் மரைக்காயர்கள் (நம்பிக்கையாளர் சபையினர்) மற்றும் அவ்வூர் முஸ்லிம் காங்கிரஸ் மத்திய குழு உறுப்பினர்கள் ஆகியோரிடம் மிகவும் ஆணித்தரமாகத் தெரிவித்துள்ளார்.

குறைந்த பட்சம் இன்னும் ஆறு மாதத்திற்காகவது மீராசாஹிப் மேயர் பதவியில் நீடிப்பதற்கு அனுமதிக்க முடியுமா என சாய்ந்தமருது ஜும்ஆ பள்ளிவாசல் மரைக்காயர்கள் சார்பிலும், ஊர் மக்கள் சார்பிலும் தலைவர் வை.எம். ஹனிபா ஹாஜியார் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ஹக்கீமிடம் வேண்டுகோள் ஒன்றை விடுத்தபோது, ஆறு மாதங்களுக்கு அல்ல, இன்னும் ஆறு மணித்தியாலங்களுக்குக் கூட தமது கட்சி அவரை மேயராகவோ, கட்சிக்காரராகவோ அறவே அங்கீகரிக்காது என்று அவர் உறுதியாகக் கூறிவிட்டார்.

சிராஸ் மீராசாஹிப், கட்திச் தலைவர் ஹக்கீமை மீண்டுமொரு விடுத்தம் சந்திப்பதற்கு வாய்ப்பு ஏற்படுத்தித் தரலாமா என்றும், கட்சியின் கட்டுப்பாட்டை அவர் மீறி நடந்துகொண்டதாகக் கூறப்படுவதற்கு மன்னிப்பு வழங்கலாமா என்றும் கேட்டதற்கு, கடந்த மாதம் 31ஆம் திகதியிட்ட இராஜிநாமா கடிதத்துடன் வந்தால் மட்டுமே அவர் தம்மைச் சந்திக்க முடியுமென்றும், அப்படியானால் நடந்தவற்றையெல்லாம் மறந்து அவர் கட்சியின் கட்டுக்கோப்பை மீறிச் செயல்பட்டதை மன்னிக்க முடியுமென்றும் அமைச்சர் ஹக்கீம் பதிலளித்தார்.

பிரஸ்தாபச் சந்திப்புக்கள் ஞாயிற்றக்கிழமை முற்பகல் 9 மணிக்கும், 11 மணிக்கும் தனித்தனியாக அமைச்சர் ஹக்கீமின் கொழும்பு, கொள்ளுப்பிட்டி இல்லத்தில் இடம்பெற்றன.

கட்சியின் மறைந்த ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரபின் காலத்திலிருந்தே தொடர்ச்சியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு முழுமையான ஆதரவு அளித்துவரும் சாய்ந்தமருது மக்களின் சார்பில் பள்ளிவாசல் நம்பிக்கையாளர்கள் என்ற அடிப்படையில் சிராஸ் மீராசாஹிப்பின் மேயர் பதவியின் காலத்தை நீடிப்பதற்கு இணக்கம் தெரிவிக்குமாறு மரைக்காயர்கள் கூட்டாக அமைச்சரிடம் வேண்டுகோள் விடுத்து, தமது தரப்பு நியாயங்களை முன் வைத்தனர்.

அவற்றை மிகவும் அமைதியாகச் செவிமடுத்த கட்சித் தலைவர் அமைச்சர் ஹக்கீம் கூறியதாவது,

பள்ளிவாசல் மரைக்காயர்களான உங்களையும், சாய்ந்தமருது மக்களையும் நாம் கண்ணியப்படுத்துகின்றோம், பெரிதும் மதிக்கின்றோம்.

ஆனால், சிராஸ் மீராசாஹிப் கட்சியினதும் தலைமைத்துவத்தினதும் கட்டுப்பாட்டை மீறிச் செயல்படுவது மட்டுமல்ல, கட்சித் தலைமைத்துவத்திற்கு சூளுரைத்து, சவால்விடவும் ஆரம்பித்துவிட்டார். அவர் அமானிதம், பைஅத் என்பவற்றிற்கு மாறு செய்துவிட்டார்.

ஊர் சென்றுவிட்டுவந்து இராஜிநாமா செய்வதற்கு அவகாசம் கேட்ட அவர், கடந்த ஒரு வார காலத்திற்குள் யார், யாருடன் சந்திப்புக்களை ஏற்படுத்தியிருந்தார் என்பதும், அதற்கு முன்னரும் எவர்களுடன் தொடர்புகளை வைத்திருந்தார் என்பதும் நன்கு கண்காணிக்கப்பட்டுள்ளது. வேறு வேறு தோணிகளில் அவர் கால்களை வைத்துள்ளார். உண்மையான முஸ்லிம் காங்கிரஸ்காரர் ஒருவர் ஒரு காலை முஸ்லிம் காங்கிரஸிலும் மற்றக் காலை வேறெங்கும் ஊன்ற முடியாது. அவரை ஓர் ஆயுதமாகப் பாவித்து கட்சியை கருவறுக்க சிலர் எத்தனிப்பது தெரியவந்துள்ளது.

அவர் இப்பொழுது கட்சியினதும், தலைமைத்துவத்தினதும் நம்பிக்கையை முற்றாகவே இழந்துவிட்டார். புற்று நோய்க்கு பிளாஸ்டர் ஒட்டி அதனை குணப்படுத்த முடியாது. புற்றுநோய் கலத்தை அடையாளம் கண்டு அப்புறப்படுத்தாது விட்டு விட்டால் ஆபத்தாகும்.

இறக்காமம் பிரதேசசபை முன்னாள் தலைவர் நைசர் தமது பதவியை இராஜிநாமா செய்து அவரது பெருந்தன்மையை வெளிக்காட்டியுள்ளார். அதனால் அவரது அந்தஸ்து கட்சித் தொண்டர்கள் மத்தியில் மிகவும் உயர்ந்துவிட்டது. அவரைக்கூட தமது சுயநலத்துக்காக தவிசாளர் பதவியை இராஜநாமா செய்ய விடாது, சிராஸ் தாமதப்படுத்தி வந்துள்ளார் என்ற தகவலும் இப்பொழுது வெளியாகியுள்ளது.

சிராஸ் ஒரு தவறான முன்னுதாரணமாக இருக்கின்றார். இவரைப் பின்பற்றி ஏனைய சிலரும் கட்சிக்கு துரோகமிழைக்க முற்படலாம். தனது சுயநலத்திற்காகவே அவர் பிரதேச வாதத்திற்கு தூபமிட்டு வருகின்றார்.

ஓவ்வொரு காலகட்டத்திலும் உள்ளுர் அரசியல் வாதிகளின் தேவைக்கேற்ப சாய்ந்தமருதுக்கான தனியான பிரதேச சபை கோரிக்கை முன்வைக்கப்படுகின்றது. அதிலுள்ள சாதக, பாதகங்களை நாம் நன்றாக அறிந்து வைத்துள்ளோம்.

கட்சியின் கட்டுப்பாட்டை மீறி சிராஸ் தொடர்ந்தும் எவ்வாறு மேயராகச் செயற்படப் போகின்றார் என்பதைப் பார்ப்போம். கல்முனை மாநகர சபை முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் எவரும் அவருக்கு எந்தவிதத்திலும் ஒத்துழைப்பு வழங்கவே கூடாது என்ற மிகவும் கண்டிப்பான உத்தரவை நான் பிறப்பித்துள்ளேன். அதனை மீறி எந்த உறுப்பினராவது செயல்பட்டால் அவர்களுக்கு எதிராகவும் கட்சி உரிய நடவடிக்கை எடுக்கும்.

தலைமைத்துவத்தை செல்லக்காசாகவும், சேற்றில் நாட்டிய கம்பாகவும் ஆக்குவதற்கு இடமளிக்க முடியாது. ஏற்கனவே அறிவிக்கப்பட்ட முடிவில் எந்த மாற்றமும் இல்லை, பள்ளிவாசல் மரைக்காயர்களை கண்ணியப்படுத்துகின்றேன். என்னை வந்து சந்தித்து கோரிக்கைகளை முன்வைத்ததற்கு நன்றி செலுத்துகின்றேன். இதில் வேறு விட்டுக்கொடுப்புகளுக்கு இடமேயில்லை. இந்த முடிவை ஏற்றுக் கொள்ளுங்கள் என்றார்.

அமைச்சருடனான இந்த முக்கிய சந்திப்பில் சாய்ந்தமருது ஜும்ஆ பள்ளிவாசல் மரைக்காயர்களான வை.எம். ஹனிபா (தலைவர்), எம்.ஐ. மஜீத் (உப தலைவர்), எம்.ஏ.ஏ. ஹமீத் (செயலாளர்), எம்.ஐ.எம்.இஸ்மாயில், எம்.ஐ. உதுமாலெப்பை, எம்.ஐ.ஏ. மஜீத், ஏ. ஜெமீஸ் சாலி, எம்.எம். மிஃலார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து நடந்த முஸ்லிம் காங்கிரஸ் சாய்ந்தமருது மத்திய குழுவுடனான சந்திப்பில் கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான பிர்தௌஸ், நிசார்தீன் ஆகியோருடன் ஏனைய சிலரும் பங்குபற்றினர். அவர்களிடமும் கட்சியின் தலைவர் அமைச்சர் இதே முடிவையே தெரிவித்தார்.

டாக்டர் ஏ.ஆர்.ஏ. ஹபீஸ்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்

தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களின்

ஊடக ஆலோசகர்

Web Design by Srilanka Muslims Web Team