
இயற்பியல் நோபல் பரிசு சர்ச்சையில் சிக்கியது!
கடவுள் துகள் கண்டுபிடிப்புக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டிருப்பதில் சர்ச்சை எழுந்துள்ளது. இந்தப் பரிசு ஸ்விட்சர்லாந்தில் உள்ள சிஇஆர்என் பரிசோதனைக்கூடத்திற்கும் வழங்கப்பட்டிருக்க வேண்டும் என்று நோபல் பரிசுக்கான நடுவர் குழு உறுப்பினர் தெரிவித்துள்ளார். கடவுள் துகள் குறித்த இயற்பியல் கோட்பாட்டை உருவாக்கிய பிரிட்டனைச் சேர்ந்த பீட்டர் ஹிக்ஸுக்கும், பெல்ஜியத்தைச் சேர்ந்த ஃப்ரங்காய் எங்லர்ட்டுக்கும் இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சிஇஆர்என் பரிசோதனைக்கூடத்திற்கு நோபல் பரிசு வழங்கப்படாதது குறித்து சர்ச்சை எழுந்துள்ளது. இது குறித்து நோபல் பரிசு தேர்வுக் குழுவான ராயல் ஸ்வீடிஷ் அகாதெமியின் உறுப்பினர் ஆண்டர்ஸ் பரானி கூறியதாவது: நான் இதை ஒரு தவறான முடிவாகக் கருதுகிறேன். ஸ்விட்சர்லாந்தில் உள்ள சிஇஆர்என் பரிசோதனைக்கூடத்தில் கடந்த பத்தாண்டுகளாக நடைபெற்ற ஆய்வின் பயனாகவே கடந்த வருடம் கடவுளின் துகள் கோட்பாடு முழுமை பெற்றது. அந்த ஆராய்ச்சியாளர்களின் சோதனை முயற்சி அற்புதமான, பாராட்டப்பட வேண்டிய ஒன்றுதான்.
இருப்பினும் அத்தகைய ஆராய்ச்சி நடந்த பரிசோதனைக்கூடத்திற்கும் நோபல் பரிசு கிடைக்கும் என்று பலரும் எதிர்பார்த்திருந்தனர்.முடிவு அறிவிப்பின் போது அந்த பரிசோதனைக்கூடம் பற்றி குறிப்பிடப்பட்டது. இதுவே அந்த பரிசோதனைக்கூடத்திற்கான நன்மதிப்பாகும். இருப்பினும் அந்த பரிசோதனைக்கூடத்திற்கும் நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்பட்டிருக்கலாம் என்று கருதுகிறேன் என்றார்.