இரண்டு அமைச்சர்கள் குறித்து C.I.D. விசாரணை ..!! பொதுநலவாய மாநாடு – 55,௦௦௦ படையினர் 845 சொகுசு வாகனங்கள்! - Sri Lanka Muslim

இரண்டு அமைச்சர்கள் குறித்து C.I.D. விசாரணை ..!! பொதுநலவாய மாநாடு – 55,௦௦௦ படையினர் 845 சொகுசு வாகனங்கள்!

Contributors

*pmt*

இரண்டு அமைச்சர்கள் குறித்து புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இலங்கை சுங்கத் திணைக்களத்தின் சட்டங்களுக்குப் புறம்பான வகையில் பொருட்களை இறக்குமதி செய்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

பொருட்களை இறக்குமதி செய்வதற்கான வரித் தொகையை செலுத்தாது பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.

சுங்கத் திணைக்கள அதிகாரிகளுக்கு லஞ்சமும் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த இரண்டு அமைச்சர்களினால் தருவிக்கப்பட்ட 12 கொள்கலன்கள் இன்னமும் துறைமுகத்தில் தேங்கிக் கிடப்பதாக புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் விரிவான விசாரணைகள் நடத்தப்பட உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளனர்.

வரும் நவம்பரில் கொழும்பில் நடைபெறவுள்ள பொதுநலவாய மகாநாட்டில் கலந்து கொள்ளும் அமைப்பு நாடுகளின் தலைவர்கள், இராஜதந்திரிகளின் பாதுகாப்புக்கென அதிநவீன உபகரணங்களுடன் சுமார் 14676 பாதுகாப்பு படையினரும், இதற்கு மேலாக அவசர தேவையின் பொருட்டு 40,000 படையினரும் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர் என செய்திகள் வெளிவந்துள்ளன.

இந்த மகாநாட்டில் கலந்து கொள்ளும் வெளிநாட்டுத் தலைவர்கள் அவர்களது துணைவிமார், அதிகாரிகளின் தேவைகளுக்குப் பயன்படுத்தும் வகையில் 845 வாகனங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இவற்றில் மெரிசிடிஸ் பென்ஸ் ரக கார்கள் 54 மற்றும் நிஸான் ரக கார்கள் 110 என்பனவும் அடங்குகின்றன.

இவர்களுக்குப் பாதுகாப்பு வழங்குவதற்காக 200 டிபெண்டர் ரக வாகனங்கள் தயார்படுத்தப்பட்டுள்ளன.

இவை ஒவ்வொன்றிலும் எட்டு பாதுகாப்புப் படை வீர்ர்கள் கடமையிலிருப்பர் என்றும் அந்தச் செய்திகளில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளன.

நாடு தொடர்பில் பொதுநலவாய நாடுகளின் தலைவர்களுக்கு விளக்கம்

பொதுநலவாய நாடுகளின் மாநாட்டுக்காக வரும் சர்வதேச தலைவர்களிடம் நாட்டின் நிலைமை குறித்து விளக்கமளிக்கப் போவதாக ஐக்கிய தேசியக்கட்சி தெரிவித்துள்ளது.

ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் அமரதுங்க இதனை குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் மனித உரிமை மீறல்கள் மற்றும் ஜனநாயக விரோத செயல்கள் குறித்து தாம் பொதுநலவாய நாடுகளின் தலைவர்களுக்கு விளக்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே நாடாளுமன்ற உறுப்பினர் மங்கல சமரவீரவின் கைது, முன்னாள் பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றவியல் பிரேரணை மற்றும் கொலைகள் போன்றவற்றை காரணம் காட்டி பொதுநலவாய மாநாட்டை புறக்கணிக்க ஐக்கிய தேசியக்கட்சி கடந்த வாரத்தில் முடிவெடுத்தமை குறிப்பிடத்தக்கது.

பொதுநலவாய நாடுகள் மாநாடு நடைபெறும் தினம் பொது விடுமுறை

பொதுநலவய நாடுகள் மாநாடு ஆரம்பமாகும் தினம் பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் நவம்பர் மாதம் 15ம் திகதி பொதுநலவாய நாடுகள் அரச தலைவர்கள் மாநாடு ஆரம்பமாகவுள்ளது. குறித்த தினத்தை பொது விடுமுறையாக அறிவிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது,
பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்வதற்கு இவ்வாறு பொது விடுமுறை அறிவிப்பது இலகுவாகும் என பாதுகாப்புத் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

மாநாடு நடைபெறும் பகுதியில் அரச தனியார் நிறுவனங்கள் பல காணப்படுவதனால் அதில் கடமையாற்றுவோர் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்க நேரிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைக் கருத்திற்கொண்டு உத்தியோகபூர்வமாக பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Web Design by Srilanka Muslims Web Team