இலங்கைக்கு போர்க்கப்பல் விற்க தமிழக அரசு எதிர்ப்பு! - மத்திய அரசின் நிலைப்பாட்டை கோருகிறது நீதிமன்றம். - Sri Lanka Muslim

இலங்கைக்கு போர்க்கப்பல் விற்க தமிழக அரசு எதிர்ப்பு! – மத்திய அரசின் நிலைப்பாட்டை கோருகிறது நீதிமன்றம்.

Contributors

மதுரை எட்டிமங்கலத்தை சேர்ந்த வக்கீல் பி.ஸ்டாலின், ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், இலங்கை அரசுக்கு 2 போர் கப்பல்களை மத்திய அரசு விற்க திட்டமிட்டுள்ளது. இலங்கை அரசுக்கு போர் கப்பல்கள் விற்பனை செய்வது, தமிழக மக்கள் மத்தியில் நிலவும் இலங்கை அரசுக்கு எதிரான உணர்வுகளை அலட்சியப்படுத்துவதாகும். இலங்கையை இந்தியாவின் நட்பு நாடாக கருதக்கூடாது என தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழக மீனவர்கள் 97 பேர், இலங்கை ராணுவத்தால் சிறை பிடிக்கப்பட்டு இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த சூழ்நிலையில் இலங்கைக்கு போர் கப்பல்கள் வழங்குவது, இலங்கையின் செயல்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவது போல் ஆகும். எனவே, இலங்கைக்கு போர் கப்பல்களை விற்கும் திட்டத்தை கைவிடக்கோரி மத்திய, மாநில அரசுகளுக்கு மனு அனுப்பினேன். மனு மீது நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, இலங்கைக்கு போர் கப்பல்கள் விற்க இந்தியாவுக்கு தடை விதிக்க வேண்டும். போர் கப்பல்கள் விற்பனை திட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும்.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

இந்த மனு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசிடம் விவரம் கேட்டு தெரிவிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.இந்த வழக்கு நீதிபதிகள் ஜெய்சந்திரன், வேணுகோபால் ஆகியோர் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் செல்லப்பாண்டியன் ஆஜராகி, இலங்கைக்கு மத்திய அரசு போர் கப்பல் விற்பனை செய்வதில் தமிழக அரசுக்கு உடன்பாடு இல்லை. இதுதொடர்பாக பிரதமருக்கு தமிழக முதல்வர் கடிதம் அனுப்பியுள்ளார். இதற்கு பிரதமர் பதில் அளிக்கவில்லை என்றார்.

இதையடுத்து, இலங்கைக்கு போர் கப்பல் விற்கும் விவகாரத்தில் தமிழக முதல்வர் அனுப்பிய கடிதத்தின் மீது மத்திய அரசின் நிலைப்பாடு என்ன என்பதை கேட்டு கோர்ட்டுக்கு தெரிவிக்க மத்திய அரசு வக்கீலுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். அடுத்த விசாரணையை அக். 29க்கு தள்ளிவைக்கப்பட்டது.

Web Design by Srilanka Muslims Web Team