இலங்கையின் வீடமைப்பு மற்றும் கட்டுமானங்களுக்கான நிலைபேறான பாதை வரைப்படம் வெளியீடு! - Sri Lanka Muslim

இலங்கையின் வீடமைப்பு மற்றும் கட்டுமானங்களுக்கான நிலைபேறான பாதை வரைப்படம் வெளியீடு!

Contributors

“இலங்கையின் வீடமைப்பு மற்றும் கட்டுமானங்களுக்கான நிலைபேறான பாதை வரை படம்” (Sri Lanka Sustainable Housing and Construction Roadmap) வெளியிடுதல் கடந்த வெள்ளிக்கிழமை (28) பத்தரமுல்ல, தலவத்துகொட கிராண்ட் மொனாஜ் ஹோட்டலில் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளர் பிரதீப் ரத்நாயக்க தலைமையில் இடம்பெற்றது.

நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் தலைமையின் கீழ் ஐக்கிய நாடுகளின் மக்கள் குடியேற்றத் திட்டம் (UN HABITAT), ஐக்கிய நாடுகளின் திட்ட சேவைகள் அலுவலகம் (UNOPS) மற்றும் ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டம் (UNEP) ஆகியவற்றின் தொழில்நுட்ப உதவியுடன் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

நிலைபேறான வீடமைப்பு மற்றும் கட்டுமானத் துறை தொடர்பான ஆராய்ச்சி மற்றும் உற்பத்தியை மேற்கொள்ளும் தனியார் மற்றும் பொது நிறுவனங்களின் பங்களிப்புகள் “இலங்கையின் வீடமைப்பு மற்றும் கட்டுமானங்களுக்கான நிலைபேறான பாதை வரைபடத்திற்கு” பயன்படுத்தப்பட்டுள்ளன.
சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் மற்றும் நிலைபேறான வகையில் இலங்கையின் வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறையை முன்னேற்றுவதே இதன் நோக்கமாகும்.

இலங்கையின் ஐக்கிய நாடுகளின் மக்கள் குடியேற்றத் திட்டத்தின் தலைவர் லக்‌ஷ்மன் பெரேரா இணையத் தளத்தினூடாக இது சம்பந்தமாக உரையாற்றினார்.
வீடமைப்பு மற்றும் கட்டுமானத் துறையின் நிலைபேறான அபிவிருத்தி பற்றிய புரிதலை வழங்கும் நோக்கில் சிறிய மற்றும் நடுத்தர தனியார் நிறுவனங்கள் மற்றும் அரச நிறுவனங்களால் உற்பத்தி செய்யப்படும் கட்டுமானப் பொருட்கள் மற்றும் புதிய தொழில்நுட்பம் பற்றிய குறுகிய கண்காட்சியும் இங்கு நடைபெற்றது.

உலக வனவிலங்கு நிதியத்தின் பிரதம ஆலோசகர் மிஸ்ஸக ஹெட்டியாராச்சி, ஐக்கிய நாடுகளின் மனித குடியேற்றத் திட்டத்தின் இலங்கை திட்ட முகாமையாளர் எம்.எஸ்.எம்.அலீம், நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் (வீடமைப்பு) டபிள்யூ. எம். ஆனந்த, மொரட்டுவ பல்கலைக்கழக புகழ்பெற்ற பேராசிரியர் பிரியன் டயஸ் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Web Design by Srilanka Muslims Web Team