இலங்கையில் சிவில் விவகாரங்களுக்கு ஓய்வுபெற்ற படை அதிகாரிகள் நியமனம்! இராணுவ ஆட்சியின் அடையாளமே! - Sri Lanka Muslim

இலங்கையில் சிவில் விவகாரங்களுக்கு ஓய்வுபெற்ற படை அதிகாரிகள் நியமனம்! இராணுவ ஆட்சியின் அடையாளமே!

Contributors

வடக்கு கிழக்கு நிர்வாகங்களுக்கு முன்னாள் படை அதிகாரிகளை ஆளுநர்களாக நியமித்துள்ளமை உட்பட நாட்டின் பல்வேறு சிவில் விவகாரங்களுக்கு ஓய்வுபெற்ற மற்றும் பொறுப்பிலுள்ள படை அதிகாரிகள் நியமிக்கப்படுகின்றமை இராணுவ ஆட்சியின் அடையாளமே என்று ட்ரான்ஸ்பேரன்ஸி இண்டர்நேஷனல் நிறுவனத்தின் இலங்கைக்கான தலைவர் ஜே.சி. வெலியமுன கூறினார்.

இலங்கையில் 2009-ம் ஆண்டு முடிவுக்கு வந்த உள்நாட்டுப் போருக்குப் பின்னர், அங்கு சிவில் நிர்வாகங்களுக்குள் இராணுவ மயமாக்கலைக் குறைத்துக்கொள்ள வேண்டும் என்று ஐநாவின் மனித உரிமைகள் ஆணையம் ஏற்கனவே வலியுறுத்தியிருக்கிறது.

ஆனால், வடக்கு கிழக்கு உட்பட நாட்டின் பல பாகங்களிலும் பாதுகாப்பு அமைச்சின் கீழ் இயங்குகின்ற இராணுவ நிறுவனங்களின் கீழ் பல்வேறு சிவில் விவகாரங்களும் உள்வாங்கப்பட்டிருப்பதாக மனித உரிமை அமைப்புகள் தொடர்ச்சியாக குற்றஞ்சாட்டியே வருகின்றன.

இராணுவ தலையீட்டைக் குறைக்குமாறு இருக்கின்ற சர்வதேச அழுத்தங்களுக்கு மத்தியிலும் வரவுசெலவுத் திட்டத்தில் பாதுகாப்பு அமைச்சிக்காக அதிகளவு நிதி, அதாவது சுமார் 25 ஆயிரத்து 300 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளமையை எதிர்க்கட்சிகள் கண்டிக்கின்றன.

அதேவேளை, இலங்கையில் அரச நிறுவனமான இலங்கைக் கப்பல் கூட்டுத்தாபனத்தின் தலைவராக கடற்படையின் தளபதி நியமிக்கப்பட்டுள்ளமை நாட்டில் மேலோங்கிவரும் இராணுவமயமாக்கலின் இன்னொரு சமிக்ஞை என்று எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.

கடற்படையின் தளபதியாக இருந்துகொண்டே இலங்கைக் கப்பல் கூட்டுத்தாபனத்தின் தலைவராகவும் வைஸ் அட்மிரல் ஜயனாத் கொலொம்பகே நேற்று முன்தினம் புதன்கிழமை பதவியேற்றார்.

கப்பல்துறையின் அவருக்கு இருக்கின்ற அறிவும் தொழில்சார் அனுபவமும் கருதியே நாட்டின் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இந்தப் பதவியைக் கொடுத்துள்ளதாக இலங்கைக் கடற்படையின் பேச்சாளர் கோசல வர்ணகுலசூரிய பிபிசியிடம் கூறினார்.

ஆனால் இரண்டு அரச பதவிகளையும் ஒரே நேரத்தில் வகிப்பது தங்களின் தொழில்சார் அக்கறைகளில் முரண்பாடுகளை ஏற்படுத்தும் என்று கூறியுள்ள ட்ரான்ஸ்பேரன்ஸி இண்டர்நேஷனல் நிறுவனம், இது நாட்டின் வணிகத்திலும் அதிகரிக்கும் இராணுவத் தலையீடுகளையே காட்டுவதாக தெரிவித்துள்ளது.

மற்ற அமைச்சுகளின் கீழ் வருகின்ற பொதுமக்களின் சிவில் விவகாரங்களையும் பாதுகாப்பு அமைச்சின் அதிகாரத்தின் கீழ் கையகப்படுத்தும் நடவடிக்கை இதுவென்று ட்ரான்ஸ்பேரன்ஸி இண்டர்நேஷனல் நிறுவனத்தின் இலங்கைக்கான தலைவர் ஜே.சி. வெலியமுன பிபிசியிடம் கூறினார்.

கடல் போக்குவரத்தில் ஈடுபடும் பல நிறுவனங்களுடன் இலங்கைக் கப்பல் கூட்டுத்தாபனம் வணிகரீதியான போட்டியில் உள்ளது. அதேநேரம் கடல் போக்குவரத்து சட்ட ஒழுங்குகளை நிலைநாட்டுவது நாட்டின் கடற்படையின் கடமை.

பாதுகாப்பு அமைச்சின் கீழ் சிவில் விவகாரங்கள்

இந்த சூழ்நிலையில் கடற்படைத் தளபதியையே கப்பல் கூட்டுத்தாபனத்துக்கும் தலைவராக நியமிப்பது இரண்டு பதவிகளுக்குமான அக்கறைகளில் முரண்பாடுகளைத் தோற்றுவிக்கும் என்று ஜே.சி. வெலியமுன சுட்டிக்காட்டினார்.

கடற்படையின் புலனாய்வுக் கட்டமைப்பை நேரடியாகக் கட்டுப்படுத்தக்கூடிய கடற்படைத் தளபதியின் செயற்பாடுகள் வணிக கப்பல்களின் நடவடிக்கைகளை பாதிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

வடக்கு கிழக்கு நிர்வாகங்களுக்கு முன்னாள் படை அதிகாரிகளை ஆளுநர்களாக நியமித்துள்ளமை உட்பட நாட்டின் பல்வேறு சிவில் விவகாரங்களுக்கு ஓய்வுபெற்ற மற்றும் பொறுப்பிலுள்ள படையதிகாரிகள் நியமிக்கப்படுகின்றமை இராணுவ ஆட்சியின் அடையாளமே என்றும் வெலியமுன கூறினார்.

இலங்கைக் கப்பல் கூட்டுத்தாபனம் அடுத்த இரண்டு ஆண்டுகளில் 64 ஆயிரம் தொன் எடையை சுமக்கக்கூடிய இரண்டு பெரிய கப்பல்களை சீனாவிடமிருந்து வாங்க இருப்பதாகவும் ஏப்பி கூறுகின்றது குறிப்பிடத்தக்கது.lw

Web Design by Srilanka Muslims Web Team