இலங்கையில் பீதியை ஏற்படுத்தும் சிலிண்டர் வெடிப்புக்கள்! அச்சத்தில் மக்கள்..! - Sri Lanka Muslim

இலங்கையில் பீதியை ஏற்படுத்தும் சிலிண்டர் வெடிப்புக்கள்! அச்சத்தில் மக்கள்..!

Contributors
author image

Editorial Team

அண்மை காலங்களில்  நாட்டில் பல பகுதிகளில் வெடிப்புச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

இந்நிலையில் இன்று கொட்டாவ பன்னிபிட்டிய பிரதேசத்தில் வீடொன்றில் வெடிப்புச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக கொட்டாவ காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இன்று அதிகாலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் எரிவாயு கசிவு காரணமாக இந்த வெடிப்பு ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாகவும்  வீடு பலத்த சேதங்களுக்கு உள்ளாகியுள்ளதுடன் வீட்டில் இருந்த எவருக்கும் காயம் ஏற்படவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த மாதத்தில் இது  4  ஆவது வெடிப்புச் சம்பவம் எனபது குறிப்பிடத்தக்கது.

இதேபோன்று கடந்த 4 ஆம் திகதி வெலிகம, கப்பரதொட்ட பிரதேசத்தில் அமைந்துள்ள உணவகம் ஒன்றில் எரிவாயு கொள்கலனில் கசிவு ஏற்பட்டு வெடித்ததன் காரணமாக இருவர் காயமடைந்தனர்.

அத்துடன், கடந்த 16 ஆம் திகதி இரத்தினபுரி பகுதியில் உள்ள உணவகம் ஒன்றிலும், எரிவாயு கொள்கலன் வெடித்தது. கடந்த 20 ஆம் திகதி கொழும்பில் உள்ள உணவகம் ஒன்றில் எரிவாயு கொள்கலன் வெடித்ததில் இருவர் காயமடைந்தமையும் குறிப்பிடத்தக்கது.

அமைச்சர்களான பந்துல குணவர்தன மற்றும் லசந்த அழகியவண்ண ஆகியோருக்கு இது பாரிய விபத்து என அறிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என  நுகர்வோர் விவகார அதிகார சபையின் முன்னாள் பணிப்பாளர் துஷான் குணவர்தன தெரிவித்துள்ளார்.

 

அண்மையில் பல இடங்களில் வீட்டு எரிவாயு சிலிண்டர்கள் வெடித்துச் சிதறியமைக்கு அவற்றின் கலவையில் ஏற்பட்ட மாற்றமே காரணம் என அரச பகுப்பாய்வாளர் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ள அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

லிட்ரோ மற்றும் லாஃப்ஸ் எரிவாயுக் கலவையை முறையான அனுமதியின்றி மாற்றியதாகவும் அறிக்கை கூறுகிறது.

இலங்கை ஒரு வெப்ப மண்டல நாடாக இருப்பதால், வாயுக் கலவையில் குறைந்த சதவீத புரொப்பேன் மற்றும் அதிக சதவீத பியூட்டேன் இருக்க வேண்டும்.

எரிவாயு கசிவு தொடர்பில் பொது மக்களிடம் இருந்து கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளுக்கு இலங்கை தர நிர்ணய நிறுவனம் நடவடிக்கை எடுக்கவில்லை என விமர்சனம் எழுந்துள்ளது.

Web Design by Srilanka Muslims Web Team