'இலங்கை - துருக்கி நட்புறவை மேலும் பலப்படுத்துவது அவசியம்' - துருக்கி வெளிவிவகார அமைச்சர்! - Sri Lanka Muslim

‘இலங்கை – துருக்கி நட்புறவை மேலும் பலப்படுத்துவது அவசியம்’ – துருக்கி வெளிவிவகார அமைச்சர்!

Contributors

துருக்கியும் இலங்கையும் பூகோள ரீதியாக தூரத்தில் இருந்த போதிலும், பல அம்சங்களில் ஒத்த இயல்பைக் கொண்டு காணப்படுகின்றன. துருக்கியானது ஐரோப்பா, ஆசியா, மத்திய கிழக்கு அத்தோடு ஆபிரிக்க நாடுகளுக்கான வர்த்தகப் போக்குவரத்துப் பாதைக்கு அருகில் அமைந்துள்ள ஓர் வளர்ந்து வரும் பொருளாதார கேந்திரமாகும். 1948 இல் இலங்கையின் சுதந்திரத்தை முதலில் அங்கீகரித்த நாடுகளில் துருக்கியும் ஒன்றாகும்.

சுனாமி அர்த்தத்தின் பின்னர் 2005 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் துருக்கிய ஜனாதிபதி ரிசெப் தயிப் எர்தோகான் இலங்கைக்கு மேற்கொண்ட விஜயமும், தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்தவேளை 2008 ஆம் ஆண்டு துருக்கிக்கு மேற்கொண்ட விஜயமும் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளின் முக்கிய மைல்கற்களாக காணப்படுகின்றன.

பின்னர் 2012 மற்றும் 2013 ஆம் ஆண்டுகளில் தொடர்ச்சியாக தமது தூதரகங்களை இரு நாடுகளும் அமைத்துக் கொண்டன. இது பல துறைகளிலும் இரு நாடுகளுக்கும் இடையில் பரஸ்பர ஒத்துழைப்பை உருவாக்க வழிவகுத்தது. பரஸ்பர உயர்மட்ட வருகைகள் உறவுகளை வலுப்படுத்த பங்களிப்பு நல்கின.

துருக்கிய வெளிவிவகார அமைச்சர் முதல் முறையாக 2016 ஆம் ஆண்டு ஜூன் மாதம் இலங்கைக்கு விஜயம் செய்தார். துருக்கிய பிரதி வெளிவிவகார அமைச்சர் மற்றும் இலங்கை தரப்பில் வெளிவிவகார செயலாளர் மட்டத்தில் 2019ஆம் ஆண்டு கொழும்பில் நடைபெற்ற முதலாவது அரசியல் ஆலோசனைக் கூட்டம் இரு நாடுகளுக்குமிடையிலான உறவுகளை மேலும் பலப்படுத்தியுள்ளது. அது இலங்கைக்கும் துருக்கிக்கும் இடையிலான ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையிலும் அமைந்தது. இரு நாடுகளுக்கு இடையிலான நட்புறவுக் கூட்டுப் பங்காண்மையின் அடையாளமாக, பாராளுமன்றங்களுக்கு இடையேயான நட்புக் குழுக்களை உருவாக்க முடிவு செய்யப்பட்டது.

எதிர்வரும் காலங்களில் பாராளுமன்ற உறவுகளை மேலும் வளர்ச்சியடையச் செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டம் என்பது ஒத்துழைப்பை வளர்க்கும் ஓர் முக்கியமான பகுதியாகும். பயங்கரவாதத்தின் கோரத்தாண்டவத்தால் இரு நாடுகளும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பயங்கரவாதத்திற்கு எதிரான சர்வதேச ஒத்துழைப்பை அதன் அனைத்து வடிவங்களிலும் வெளிப்பாடுகளிலும் ஊக்குவிப்பதில் துருக்கியும் இலங்கையும் முன்னணியில் உள்ளன.

இலங்கையுடன் வெற்றி- எனப்படும் கூட்டுப் பங்காண்மையை இலங்கையுடன் உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம். இருநாட்டு வர்த்தக அளவு 2021 இல் 175 மில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டியிருந்தது.

முடியுமான வரையில் பொருளாதார உறவுகளின் உண்மையான திறனை நாம் கூடிய விரைவில் பயன்படுத்த வேண்டும். வர்த்தகப் பொருட்களை பல்வகைப்படுத்துவதற்கும் இடமிருக்கிறது. கடைசியாக 2021 ஜூன் மாதம் நடைபெற்ற கூட்டுப் பொருளாதார ஆணைக்குழுவின் இரண்டாவது கூட்டத்தின் போது, ​​இரு நாடுகளும் இருதரப்பு வர்த்தக அளவை 500 மில்லியன் அமெரிக்க ​ெடாலராக உயர்த்த உறுதியளிக்கப்பட்டது. இந்த முக்கியமான இலக்கை அடைவதில் கவனம் செலுத்த வேண்டும்.

மக்களுக்கிடையிலான உறவுகளைப் பொறுத்த வரையில், துருக்கிய தேசியக் கொடி பொறிக்கப்பட்ட துருக்கிய விமான சேவை இஸ்தான்புலிற்கும் கொழும்பிற்கும் இடையில் இயங்கும் வாராந்த விமான சேவையை 11 ஆக உயர்த்தியுள்ளது.தொற்றுநோயின் போது துருக்கிய விமான சேவை இலங்கையின் பொருளாதாரத்திற்கு பெரும் பங்களிப்பை வழங்கியுள்ளது. பல விமான நிறுவனங்கள் இலங்கைக்கான நடவடிக்கைகளை நிறுத்திய அதேவேளையில், துருக்கிய விமான சேவை தனது சரக்கு விமானங்களைத் தொடர்ந்தது. இலங்கை ஏற்றுமதி உற்பத்திகளை உலக சந்தைகளுக்கு சென்றடைய சேவையில் ஈடுபடுத்தியது.

1992 ஆம் ஆண்டு தெடக்கம் இலங்கை மாணவர்கள் துருக்கியப் பல்கலைக்கழகங்களில் துருக்கிய புலமைப்பரிசில்கள் திட்டத்தின் ஒரு பகுதியாக கல்வி கற்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளனர். துருக்கியில் உயர் கல்வி கற்கும் இலங்கை மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது இந்த உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கு பங்களிக்கும்.

துருக்கி இலங்கையில் உள்ள பல்வேறு சமூகங்களுக்கு உதவிக்கரம் நீட்டியுள்ளதுடன், நாட்டின் பல்வேறு பகுதிகளில் 20 உதவித் திட்டங்களை மேற்கொண்டுள்ளது. சுனாமி மற்றும் உள்நாட்டுப் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக 2006 ஆம் ஆண்டு மிதிகமவிலும், 2015 ஆம் ஆண்டு மன்னாரிலும் நிர்மாணிக்கப்பட்ட கிராமங்கள் முதன்மையான திட்டங்களாகும்.

உலகெங்கிலும் உள்ள துருக்கியின் கொவிட்-19 உதவித் திட்டங்களின் ஒரு பகுதியாக, இலங்கையின் சுகாதார அதிகாரிகளுக்கு மருத்துவ உபகரணங்களையும் தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களையும் துருக்கி வழங்கியுள்ளது. 2016 இல் என்னை மிகவும் கவர்ந்த நாடான – இலங்கைக்கு மீண்டும் விஜயம் செய்வதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். எங்களுடைய தற்போதைய உறவுகளை வலுப்படுத்து வதையும் ஒத்துழைப்பிற்கான புதிய வழிகளை ஆராய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளோம்.

இன்று, எமது கடந்த காலத்தை அடிப்படையாகக் கொண்டு, எமது பொதுவான எதிர்காலத்தை பிரகாசமாக்க முடியும். கொழும்பில் உள்ள எனது தொடர்புகள் இந்த இலக்கை அடைய எங்களுக்கு உதவும் என்று நான் நம்புகிறேன்.

எச்.இ.மெல்விட் கோவ்சொக்ளு

துருக்கி குடியரசின் வெளிவிவகார அமைச்சர்

Web Design by Srilanka Muslims Web Team