இலங்கை பௌத்த கோயில்களில் நடக்கும் சிறுவர் துஷ்பிரயோகம் - Sri Lanka Muslim

இலங்கை பௌத்த கோயில்களில் நடக்கும் சிறுவர் துஷ்பிரயோகம்

Contributors

 

 

இலங்கையில், 2009 ம் ஆண்டு ஈழப்போர் முடிந்த அடுத்த வருடம், அரசு ஒரு முக்கியமான சட்டத்தை பிறப்பித்திருந்தது. சிங்கள-பௌத்த பெரும்பான்மை மக்கள் வாழும் பிரதேசங்களில், சுமார் 2600 இளம் பிக்குகளை சேர்ப்பதற்கான தீர்மானம் அது. அந்த ஆட்சேர்ப்பு பல இடங்களில் கட்டாயமாக்கப் பட்டிருந்தது. புலிகள் சிறுவர்களை பலவந்தமாக படையணிகளில் சேர்த்து, மூளைச் சலவை செய்வதாக குற்றஞ் சாட்டி வந்த ஸ்ரீலங்கா அரசு, ஏறக்குறைய அதே மாதிரியான நடவடிக்கை ஒன்றை எடுத்திருந்தது. இலங்கையில் பௌத்த மடாலயங்களில் சிறுவர்களை சேர்க்கும் வழக்கம், பண்டைய காலம் தொட்டு நிலவி வருகின்றது. ஆனால், இன்றைய இலங்கையில் அது சமூகப் பிரச்சினைகளின் வடிகாலாக பயன்படுத்தப் படுகின்றது என்பதே வித்தியாசம்.

 

“சிங்கள-பௌத்த இனவாதம்” பற்றி, நிறையத் தமிழர்கள் நாட் கணக்காக பேசத் தெரிந்திருக்கிறார்கள். ஆனால், அதன் உட் பரிமாணங்களை, சமூகப் பின்புலங்களை அலசுவோர் மிகக் குறைவு. தமிழ் எழுத்தாளர்களும், ஊடகங்களும், அது குறித்து ஆழமாக ஆராய வேண்டுமென்று அக்கறை காட்டுவதில்லை. “எல்லா சிங்களவர்களும் இனவாதிகள் தான்” என்று மேலெழுந்தவாரியாக கூறி விட்டுச் செல்வார்கள். “சிங்கள பௌத்த பேரினவாதம் என்ற அரசியல் கொள்கை,” அரசினாலும், சில பௌத்த சங்கங்களினாலும் திட்டமிட்டு வளர்க்கப் படுகின்றது. அது சரி. ஆனால், என்ன நோக்கத்திற்காக?

 

“எங்கள் ஊரில் தறுதலையாக திரியும் பையன்களை திருத்த முடியாத பெற்றோர், புத்த மடாலயம் ஒன்றில் பிக்குவாக சேர்த்து விடுவார்கள்.” என்று பல சிங்கள நண்பர்கள் கூறியிருப்பார்கள். தறுதலையாக ஊர் சுற்றும் பிள்ளைகள் மட்டும், எதிர்காலத்தில் புத்த பிக்குகளாக வருவதில்லை. வறுமையில் வாடும் குடும்பங்களும், பிள்ளைகளை வளர்க்க முடியாமல் புத்த கோயில்களில் சேர்த்து விடுவது வழக்கம். இந்த தடவையும், 2600 புதிய இளம் துறவிகளை சேர்க்கும் அரசின் திட்டம், ஏழைகளை மட்டுமே குறி வைக்கின்றது. இது வரை காலத்தில், எந்தவொரு பணக்கார குடும்பமும் தனது பிள்ளைகளை புத்த பிக்குவாக சேர்த்து விட்டதாக தகவல் இல்லை. (எங்காவது விதிவிலக்காக நடந்திருக்கலாம்.) சுருக்கமாக, இழப்பதற்கு எதுவுமற்ற பாட்டாளி வர்க்கத்தை சேர்ந்த பிள்ளைகளே, அதிகளவில் புத்த பிக்குகள் ஆகிறார்கள்.

 

இலங்கை ஒரு “பௌத்த – சிங்கள தேசம்” என்று அரசு அடிக்கடி கூறிக் கொள்கின்றது. பௌத்த மதம் அரச மதமாக உள்ளது. பௌத்த மடாலயங்கள் அரசின் உதவியை தாராளமாக பெற்று வருகின்றன. பௌத்த மத மேம்பாட்டுக்காக அரசு பெருமளவு நிதியை ஒதுக்கி வருகின்றது. எதற்காக? “மதம் மக்களின் அபின்”, என்றார் கார்ல் மார்க்ஸ். பௌத்த மத நிறுவனங்களை பலப் படுத்துவதன் மூலம், அரசு ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களை வீழ்த்துகின்றது.

 

இலங்கையில் பௌத்த மத நிறுவனங்கள், தமிழர்கள், முஸ்லிம்களுக்கு எதிரான இனவெறியை பரப்பி வருவது மட்டுமே நமக்குத் தெரியும். ஆனால், சிங்களப் பாட்டாளிகளின் வர்க்க உணர்வுகளை மழுங்கடித்து, அவர்கள் மனதில் மதவாத, இனவாத சிந்தனைகளை திணிப்பதும், அவற்றின் முக்கிய நோக்கமாக உள்ளது. இந்தக் கூற்று தவறென்றால், எதற்காக ஏழைச் சிங்கள சிறார்கள் மட்டுமே பிக்குகள் ஆகிறார்கள்? எதற்காக, சிங்கள மேட்டுக் குடியினர், தங்களது பிள்ளைகளை புத்த பிக்குகளாக்க விரும்புவதில்லை?

 

பத்து வயதிலேயே, சிங்கள ஏழைச் சிறுவர்கள், புத்த துறவிகளாக சேர்த்து விடப் படுகின்றனர். ஆனால், அதெல்லாம் பெற்றோரின் ஒப்புதலின் பெயரில் தான் நடக்கிறது என்று சொல்ல முடியாது. சிறுவர்களை துறவிகளாக சேர்ப்பதற்கு எதிராக, சிங்களப் பிரதேசங்களில் பலர் தமது அதிருப்திகளை வெளியிட்டு வருகின்றனர். சில தன்னார்வ தொண்டர்கள்,  தம்மாலான எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர். சிங்களப் பொது மக்கள் மத்தியில் இந்தளவு எதிர்ப்புணர்வு நிலவுவதற்கு காரணம், பௌத்த மடாலயங்களில் நடக்கும் சிறுவர் துஷ்பிரயோக குற்றச்சாட்டுகள்.

 

புத்த கோயில்களில், தலைமைப் பிக்குகளுக்கு பணிவிடை செய்வதற்காக, இளம் கிராமப்புற சிறுவர்கள் ஈடுபடுத்தப் படுகின்றனர். அதனை சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் சில பிக்குகள், சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்து வருகின்றனர். பௌத்த பிக்குகள் இல்லற வாழ்வை துறந்தவர்களாக வாழ வேண்டியவர்கள். ஆனால், பல இடங்களில் பருவ வயது சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சம்பவங்கள் நடந்துள்ளன. ஏழைக் குடும்பங்களை சேர்ந்த அப்பாவி சிறுவர்கள், சிறுமிகள், துஷ்பிரயோகம் செய்யப் படுவதற்கு எதிராக, அவர்களது பெற்றோரே குரல் கொடுக்க முடியாதுள்ளது. அதற்குக் காரணம் தலைமைப் பிக்குகளின் அரசியல் செல்வாக்கு மட்டுமல்ல. இலங்கையில் எந்தவொரு ஊடகமும், அந்தக் குற்றச் சாட்டுகளை கண்டு கொள்வதில்லை. ஏழை சொல் அம்பலம் ஏறாது என்பது ஒரு பழமொழி.

 

இலங்கை அரசின், குழந்தைகள் நலன் பேணும் அரசு நிறுவனமான, National Child Protection Authority (NCPA)  பாலியல் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டின் கீழ் பல பிக்குகளை கைது செய்தது. ஆனால், இன்று வரையில் மூன்று பேருக்கு எதிராக மட்டுமே வழக்குப் பதிவு செய்யப் பட்டது. 13 வயது சிறுமியை பலாத்காரம் செய்த பிக்கு ஒருவர், வழக்கை எதிர்கொள்ளப் பயந்து நஞ்சருந்தி தற்கொலை செய்து கொண்டார். இன்னொருவர், “குற்றம் நிரூபிக்கப் படாமல்” விடுதலை செய்யப் பட்டார். இலங்கை அரசின் நீதி வழங்கும் நடைமுறை அந்தளவு மோசமாக உள்ளது. ஸ்ரீலங்கா அரசு தமிழர்களை மட்டும் பாரபட்சமாக நடத்தவில்லை. ஏழைச் சிங்களவர்களும் அரசிடம் நீதியை எதிர்பார்க்க முடியாது.

 

KALAIYARASAN THA

 

 

Web Design by Srilanka Muslims Web Team