இலங்கை வை.எம்.எம்.ஏ பேரவையின் 72 ஆவது தேசிய மாநாடு! - Sri Lanka Muslim

இலங்கை வை.எம்.எம்.ஏ பேரவையின் 72 ஆவது தேசிய மாநாடு!

Contributors

இலங்கையில் சமூகங்களுக்கிடையே நல்லிணக்கத்தையும் சகவாழ்வையும் மனித வள மேம்பாட்டையும் விருத்தி செய்ய அகில இலங்கை வை.எம்.எம்.ஏ பேரவைக்கு அமெரிக்க உயர்ஸ்தானிகராலயம் தொடர்ந்து ஒத்துழைப்பையும் நல்லாதரவையும் வழங்கும்  என்று  அமெரிக்க  உயர்ஸ்தானிகர் ஜுலி ஜே.சங் தெரிவித்தார்.

அகில இலங்கை வை.எம்.எம்.ஏ. பேரவையின் 72ஆவது தேசிய மாநாடு, கொழும்பு இலங்கை மன்றக் கல்லூரி மண்டபத்தில், அகில இலங்கை வை.எம்.எம்.ஏ. பேரவையின் தேசியத் தலைவர் சஹீட். எம். ரிஸ்மி தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்ட அமெரிக்க  உயர்ஸ்தானிகர் ஜுலி ஜே.சங் இவ்வாறு தெரிவித்தார்.

இந்நிகழ்வில் துருக்கி நாட்டின் உயர்ஸ்தானிகர் மற்றும் இந்தியா உயர்ஸ்தானிகராலயத்தின் அரசியல் பிரமுகர் பானு பிரகாஸ், இந்தோநேசியா, சீன, மலேசியா உள்ளிட்ட பல நாடுகளின் உயர்ஸ்தானிகராலயத்தின் உயர் அதிகாரிகள் என பெரும் எண்ணிக்கையான பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

அமெரிக்க  உயர்ஸ்தானிகர் மேலும் உரையாற்றும் போது,..

இலங்கையின் பொருளாதார நெருக்கடியை கருத்திற் கொண்டு இலங்கையின் விவசாயத் துறையை மேம்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்றோம். அண்மையில் 1.9மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கைக்கு வழங்கியுள்ளோம்.கண்டியிலுள்ள பெண்கள் நிறுவனம் ஒன்றின் ஊடாக விவசாயச் செய்கை, உரம் போன்றவற்றை ஊக்குவிப்பதற்காக இந்த நிதி உதவிகளை வழங்கியுள்ளோம்  அதே போன்று வை.எம்.எம்.ஏ இனரின் இளம்  தலைமைத்துவ முயற்சிகளுக்கும் தொடர்ந்து பங்களிப்பு நல்கவுள்ளோம் என்றார்.

இதன் போது கௌரவ அதிதியாக அகில இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான  சாலிய பீரிஸ், முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம். பௌசி,  போசகர்களான ரஸ்ஸான் மௌலானா,  நம்பிக்கை பொறுப்பாளர் சபையின் தலைவர் காதர். எம். அலி,  பொதுச் செயலாளர் ஹாசிப் சுக்ரி,  பொருளாளர் யூ.எல். பாசில் ஆகியோரும் பங்கேற்றனர்.

இம்மாநாட்டில் நாட்டுக்காக அர்ப்பணிப்போடு சேவை செய்த இருவர்  ‘வை பேசனாலிட்டி’ என்ற பெயரில்   தேசிய விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர். ‘எக்ஸ் போ லங்கா ஹோல்ட்டிங்’ குழுமத்தின் தலைவரும் நிறைவேற்றுப் பணிப்பாளருமான   ஹனீப் யூசுப். தேர்தல் காண்காணிப்புகளில் ஈடுபட்டு வரும் ‘பெப்ரல்’ அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர்  ரோஹண ஹெட்டியாராய்ச்சி ஆகிய இருவர் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

சமூக சேவைப் பணிகளில் ஈடுபடுகின்ற என்ற வகையில் ஜே.ஜே. பவுண்டேசன் பணிப்பாளர் டாக்டர் ஐ. வை. எம். ஹனீப் அவர்களுக்கு விசேட விருது வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் அகில இலங்கை வை. எம்.எம்.ஏ. பேரவையின் சஹீட் எம். ரிஸ்மி  தலைமை உரையாற்றும் போது,…

அமெரிக்க உயர்ஸ்தானிகராலயத்திற்கும் அகில இலங்கை வை.எம்.எம்.ஏ பேரவைக்குமிடையிலான நட்புறவு இருந்து கொண்டிருக்கிறது. அவர்களுடைய நிதி ஒதுக்கீட்டின் மூலம் எதிர்கால இளம் தலைமைத்துவங்கள் உருவாக்குவதற்கான  பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த வேலைத் திட்டத்தில் நாடளாவிய ரீதியில் தெரிவு செய்யப்பட்ட பல்கலைக்கழக பட்டதாரி மாணவர்கள் இதில் கலந்து பயன்பெற்றார்கள். இவை  மூன்று தடவைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அத்துடன் சர்வதேச மட்டத்திலுள்ள பிரபல்யமான வளவாளர்கள் இந்தச் செயலமர்வுகளில் கலந்து கொண்டனர். இதன் மூலம் நிறைய மாணவர்கள் பயன்பெற்றுள்ளார்கள். இந்த செயலமர்வின் மூலம் இரு வாலிபர்கள் அமெரிக்காவுக்கு பயிற்சிக்கும் சென்றுள்ளனர்.

அவை மட்டுமல்ல இந்நாட்டில் சிறுபான்மையின மக்களுக்கு இடையூறுகள் ஏற்படும் போதெல்லாம் எமது பிரச்சினைகளை தொடர்பில் அவர்களிடம் முறையீடுகளை முன்வைத்த போது அவர்கள் எங்களோடு நெருங்கிப் பழகி எமது பிரச்சினைகள் தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தினார்கள்.அவற்றுக்கு வை. எம். எம். ஏ. பேரவை நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளது.

2014இல் அமெரிக்கா உயர்ஸ்தானிகர் மீச்சல் சிசன் கண்டியிலுள்ள ‘வை’ இல் ஆரம்பிக்கின்ற இளைஞர் அமைப்புக்களை ஒரு பொதுவான அமைப்பொன்றாக உருவாக்கினார்.இதற்கு  ‘6வை 6  வை’ என்ற பெயர் இடம்பெற்றது.

வை.எம்.சி.ஏ., வை.எம்.பி.ஏ, வை. எம்.எம்.ஏ.,  வை.எம்.எச்.ஏ., வை. டப்ளியு. பி.ஏ, வை.டப்ளியுசி.ஏ. முதலிய இளம் பெண்கள் வாலிய சங்கங்களைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். அதேவேளையில்  அவர் கண்டி வை.எம்.எம்.ஏ. கிளை அலுவலகத்தில் ‘டெபோடின்ஸ்’  என்ற  ஒரு மாற்றுத் திறனாளி நிலையத்தையும் திறந்து வைத்தார். இன நல்லிணக்க செயற்பாடுகளுக்கு உந்து சக்தியாக செயற்பட்டார். அக்கால கட்டத்தில் நான் மாவட்டப் பணிப்பாளராக கடமையாற்றினேன். அவை மட்டுமல்ல என்னுடைய அபிவிருத்தி செயற்றிட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்ட பணியாகும்.

எதிர்காலத்திலும் கல்வி, கலாசார,சமூக மேம்பாடுகளுக்காக பல்வேறு பங்களிப்புச் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையினையும் விடுப்பதாக அவர் அன்று தெரிவித்தார்.

எமது சமூகத்தின் பிரச்சினைகளை பற்றி கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளோம். அந்தக் கலந்துரையாடல்களில் அகில இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான சாலிய பீரிஸ் கலந்து கொண்டு நல்ல வழிகாட்டல்களையும் ஆலோசனைகளையும் வழங்கி வரும் ஒருவர். அவர் இந்த நிகழ்வில் கலந்து கொள்ளுவதில் நாம் பெருமிதம் அடைகிறோம்.

வை. எம். எம். ஏ. பேரவையின் 72மாநாட்டில் நாம் அனைவரும் கலந்து கொண்டிருக்கிறோம்.  இவ்வமைப்பின் தலைமைப் பொறுப்பை ஏற்ற காலத்தில் முதலில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்,  கொரோனா தொற்று நோய், பின்பு இந்நாட்டில் பொருளாதார நெருக்கடி நிலைமைகள் போன்ற சவால்களை எதிர் கொண்டோம். இத்தகைய கால கட்டத்திலும் எமது செயற்றிட்ட நடவடிக்கைகளை எந்தப் பின்னடைவுகளும் இல்லாமல் செய்யக் கூடியதாக இருந்தது.

என்னுடைய காலத்தில் 150க்கும் மேற்பட்ட கிளைகளை மேலும் விஸ்தரித்து இவ்வியக்கத்தின் பால் இளைஞர்களை ஈர்க்கச் செய்யும் வகையில் நடவடிக்கை எடுத்துள்ளோம். குறிப்பாக இவ்வமைப்பின் எல்லா கிளைகளும் ஒரு சுயமாகச் செயற்படக் கூடிய நிலையை உருவாக்கியுள்ளேன். அதேவேளையில் களுத்துறை மாவட்டத்தில் எமது அமைப்பின் ஊடாக இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை உருவாக்கியுள்ளோம். மாவட்டப் பணிப்பாளர்களும் பலப்படுத்தப்பட்டுள்ளார்கள். அவர்களுக்கான விருது இந்த மேடையில் வழங்கப்பட்டன இந்தச் சந்தர்ப்பத்தில் என்னுடைய பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கிய மாவட்டப் பணிப்பாளர் அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்ளுகின்றேன்.

இந்நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடியான கால கட்டத்தில் இருந்து நாடும் நாட்டு மக்களும் வெளியே வருவதற்காக நாம் எல்லோரும் ஒத்துழைப்பும் நல்லாதரவும் பங்களிப்பும் நல்க வேண்டும். குறிப்பாக இங்கு பல்வேறு  நாடுகளின் உயர்ஸ்தானிகரகத்தின் பிரதிநிதிகள் வந்துள்ளார்கள். அவர்கள் எமது நாடு பொருளாதார நெருக்கடியான நிலையில் இருந்து விடுபடுவதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கோரிக்கையொன்றை விடுக்கின்றேன் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இதன் போது வருடா வருடம் சிறப்பாக செயலாற்றிய வை.எம்.எம்.ஏ. கிளைகளுக்கிடையே விண்ணப்பம் கோரப்பட்டு  தெரிவு செய்யப்பட்ட கிளைகளுக்கு  அமெரிக்க உயர்ஸ்தானிகரால் விசேட விருதுகள் வழங்கி வைக்கப்பட்டன.

சிறந்த இளைஞராகத் தெரிவு செய்யப்பட்டவர் முப்தி முயீன், (களுத்துறை வை.எம்.எம்.ஏ)  நாட்டை கட்டி எழுப்பும் செயற்றிட்டத்தின் கீழ் இரத்ததானம் வழங்குதல், மரம் நடுதல், சிரமதானம் போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டமைக்கான சிறந்த விருது வை. எம்.எம்.ஏ. மடவளை,  சமூக மற்றும் தேசிய விவகாரங்களுக்கு பங்களிப்புச் செய்த சிறந்த கிளை வை.எம்.எம்.ஏ. கொழும்பு மத்தி.

போதைப் பொருள் மற்றும் புகைத்தல் தடுப்பு செயற்றிட்டத்திற்கான சிறப்பு விருது வை.எம்.எம்.ஏ கல்ஹின்னை, சிறந்த பொருளாளர் இல்ஹாம் அலி வை.எம்.எம்.ஏ. பதுளை, சிறந்த செயலாளர் எம்.எஸ்.ஏ. நூர்தீன் கட்டுக்கலை வை.எம்.எம்.ஏ.,  சிறந்த தலைவர் ராயிஸ் முஸ்தபா கட்டுக்கலை வை. எம்.எம்.ஏ., சிறந்த விளையாட்டுத் துறை விருது மஹிய்யாவ வை.எம். எம்.ஏ., சிறந்த முன்பள்ளிப் பாடசாலைக்கான விருது  மடவளை வை.எம். எம்.ஏ., விசேட செயற்றிட்டத்திற்கான விருது கட்டுக்கலை வை.எம்.எம்.ஏ.,  சிறந்த மாவட்டப் பணிப்பாளருக்கான விருது முஹமட் ஹுஸைன்டீன் இஹ்திசான் கண்டி மாவட்டம், சிறந்த கிளைகளுக்கான விருது  பதுளை வை.எம். எம்.ஏ. ஆகிய கிளைகளுக்கும் இந்த விருதுகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் இக்கால கட்டத்தில் ஏனைய காலங்களை விட திறம்படச் செயலாற்றியமைக்கான பல்வேறு விருதுகள், பல கிளை அமைப்புக்களினால் சஹீட் எம். ரிஸ்மி விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

நிதி சேகரிப்பு விடயத்தில் பங்களிப்புச் செய்த முன்னாள் தலைவரான ஜிப்ரி ஹனிபா,  கே. என். டீன் ஆகிய இருவரும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

அதேவேளை இருவருடம் அகில இலங்கை வை.எம்.எம்.ஏ. பேரவையின் தேசியத் தலைவராக  குறித்த காலம் வரையிலும் கடமையாற்றி விட்டு ஓய்வு பெற்றுச் செல்லும் சஹீட் எம். ரிஸ்மிக்கு மாவட்ட மட்டத்திலுள்ள ஏ வை. எம்.எம்.ஏ. கிளைகளின் பிரதிநிதிகளினால் வேறு எந்தத் தலைவர்களுக்கும் இல்லாதவாறு பாராட்டுக்களும், விருதுகளும் வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் வை.எம்.எம்.ஏ அங்கத்தவர்கள், மாவட்டப் பணிப்பாளர்கள், வை. டப்ளியூ. எம்.ஏ உறுப்பினர்கள்,  ஏனைய சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பெரு எண்ணிக்கையிலானவர்கள் கலந்து கொண்டனர்.

இதன் போது நடப்பு வருட நிர்வாகிகளாக இஹ்சான் ஹமீட் தலைவராகவும்  பொதுச் செயலாளராக பர்ஹாஸ் பாரூக், பொருளாளராக என்.எம். நிவ்ராஸ்,  உப தலைவராக எஸ் தஸ்தகீர், யூ.எல். பாசில் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.

இதில் ஒவ்வொரு மாநாட்டிலும் வெளியிடப்படும்  ‘சுப்பான்’ எனும்  மலர் வெளியிடப்பட்டது.  அதில்  லேக்ஹவுஸ் வெளியீடான  தினகரன் பத்திகையின் அனுசரணையுடன் இக்பால் அலி எழுதிய ‘ இளம் தலைமைத்துவ ஆளுமையும் சஹீட் எம். ரிஸ்மியுடனான நேர்காணலும்’ நூல் பற்றிய அறிமுகம், வை.எம்.எம்.ஏ செயற்பாடுகள் தொடர்பிலான மலர் இங்கு வெளியிடப்பட்டது.

 

இக்பால் அலி

Web Design by Srilanka Muslims Web Team