வாழைச்சேனை- முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கும் சவால்கள் (video) » Sri Lanka Muslim

வாழைச்சேனை- முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கும் சவால்கள் (video)

r66

Contributors
author image

ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்

(வீடியோ)

 

மட்டக்களப்பு மாவட்டம் கல்குடா தொகுதியில் அமைந்துள்ள மிகவும் பிரபல்யமான பிரதேசமான வாழைச்சேனை முஸ்லிம் பிரதேசத்தில் 1960 ஆண்டைய பிந்திய காலப்பகுதியிலிருந்து ஐக்கிய தேசியக் கட்சியானது வாழைச்சேனை பிரதேசத்தில் மட்டுமல்லாது கல்குடா பிரதேசத்திலே வேரூண்டி நிலைத்து நின்று அரசியல் செய்வதற்கு முக்கிய காரண கர்த்தாவாக திகழ்ந்தவர்தான் வாழைச்சேனையில் வசிக்கின்ற முக்கிய அரசியல் சமூக சிந்தனைமிக்க மெம்பர்ஸ் மீராமுஹைதீன் ஹாஜியாகும்.

இவர் கல்குடா தொகுதியில் 1970 காலப்பகுதியில் ஐக்கிய தேசியக் கட்சியின் மூலம் அரசியல் ஜாம்பவானாக திகழ்ந்த முன்னாள் நீதி, உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் தேவநாயகத்தின் வெற்றிக்கு அரும் பாடு பட்டவர்களில் முக்கியமான ஒருவராகவும் செயற்பட்டுள்ளார்.

அது மட்டுமல்லாமல் கல்குடா தொகுதி ஐக்கிய தேசிய கட்சி அமைப்பாளராகவும், கோறளைப்பறு பிரதேச சபையின் நீண்ட கால உறுப்பினராகவும், மாவட்ட அபிவிருத்தி சபை தேர்தல் நடை பெற்ற பொழுது அதில் வேட்பாளராகவும் போட்டியிட்டமையும் குறிப்பிடதக்க விடயங்களாகும்.

அதனோடு சேர்த்து 1988 மற்றும்1989ம் ஆண்டு காலப்பகுதியில் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தோற்றப்பாட்டிற்கு பிற்பாடு பாராளுமன்ற பிரதி நிதித்துவத்தினை கல்குடா முஸ்லிம் பிரதேசம் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசோடு இணைந்து செயற்பட தொடங்கிய மெம்பர்ஸ் மீரா மொஹைடீன் இன்று வரைக்கும் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தீவிர செயற்பாட்டாளராகவும் வாழைச்சேனை பிரதேசத்து முஸ்லிம் காங்கிரசின் அரசியல் இயக்குனராகவும் இருந்து வருகின்றார்.

அந்த வகையிலே வாழைச்சேனை முஸ்லிம் சமூகம் எதிர் நோக்கும் சவால்களும் தீர்வுகளை நோக்கிய பார்வைகளும் என்ற வகையில் எவ்வாறான நடவடிக்கைகளை அரசியல்வாதிகளும் , புத்திஜீவிகளும் தமிழ் சமூகத்துடன் ஒருங்கிணைந்து செயற்படுவதன் மூலம் பெற்றுக்கொள்ள முடியும் என்ற பார்வையில் பல கோணங்களில் கேட்கப்பட்ட கேள்விகளான….

01- வாழைச்சேனை பிரதேசத்தில் கல்குடா முஸ்லிம் சமூகம் உங்களை மெம்பர்ஸ் மீராமுஹைதீன் என அழைப்பதற்கான பின்னணி என்ன?

02- கல்குடா பிரதேசத்தில் ஆரம்பகாலத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் முக்கிய ஆதரவாளராக இருந்து கல்குடா பிரதேசத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றியது சம்பந்தமாக உங்களினுடைய கருத்தென்ன?

03- சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசானது 1987 மற்றும் 1988ம் ஆண்டைய காலப்பகுதியில் கல்குடா பிரதேசத்தில் வேரூண்டிய பொழுது நீங்கள் யாருக்கு ஆதரவாக செயற்பட்டீர்கள்?

04- 1988ம் ஆண்டு இணைந்த வடகிழக்கு மாகாண சபையில் கல்குடா பிரதேசத்திலிருந்து உங்களைதான் முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக வேட்பாளராக களமிறக்குவதற்கு முஸ்லிம் காங்கிரஸ் உயர்மட்டம் முன்மொழிந்த வேளையில் நீங்கள்தான் அதனை மர்ஹும் மொஹைதீன் அப்துல் காதருக்கு விட்டுக்கொடுப்பு செய்தீர்கள் என பேசப்படுவதன் உண்மையான கருத்தென்ன?

05- 1989ம் ஆண்டைய பாராளுமன்ற தேர்தலில் நீங்கள ஐக்கிய தேசிய கட்சியிலிருந்து விலகி மர்ஹும் மொஹைதீன் அப்துல் காதருக்கா ஆதரவளித்தீர்கள்?

06- கல்குடாவின் அரசியல் ஜாம்பவானாக திகழ்ந்த முன்னாள் அமைச்சர் தேவநாயகம் 1989ம் ஆண்டைய தேர்தல் பிரச்சாரத்திற்காக ஓட்டமாவடி மத்திய கல்லூரி மைதானத்திற்கு வந்திறங்கிய வேளையில் கல்குடா முஸ்லிம் சமூகம் எதிர்ப்பினை வெளிக்காட்டிய பொழுது நீங்களும் அதற்கு ஒத்துளைப்பு வழங்கியிருந்தீர்களா?

07- 1989ம் ஆண்டைய பாராளுமன்ற தேர்தலுக்கு பிற்பாடு மர்ஹும் மொஹைதீன் அப்துர் காதர் முஸ்லிம் காங்கிரசோடு முரண்பட்ட நிலையில் 1994ம் ஆண்டைய பாராளுமன்ற தேர்தலில் மொஹைதீன் அப்துல் காதர் ஐக்கிய தேசிய கட்சியில் போட்டியிட்ட பொழுது உங்களினுடைய ஆதரவு யாருக்கு இருந்தது? எதற்காக?

08- மீண்டும் 2000ம் ஆண்டைய பாராளுமன்ற தேர்தலில் மர்ஹும் மொஹைதீன் அப்துல் காதர் முஸ்லிம் காங்கிரசிற்குள் உள்வாங்கப்பட்டு தேர்தலில் களமிறங்கிய நிலையில் நீங்கள் அவருக்கு ஆதரவளித்தமைக்கான காரணம் என்ன?

09- குறுகிய காலத்தில் பாராளுமன்றம் கலைக்கப்பட்டு 2001ம் ஆண்டு மீண்டும் பாராளுமன்ற தேர்தல் வந்த பொழுது வாழைச்சேனை பிரதேசத்திலிருந்து மர்ஹும் மொஹைதீன் அப்துல் காதரை தோற்கடிப்பதற்காக யூ.அஹமட் களமிறங்கிய வேளையில் உங்களினுடைய ஆதரவு யாருக்கு இருந்தது?

10- 2001ம் ஆண்டு மொஹைதீன் அப்துல் காதர் தோற்கடிக்கபட வேண்டும் என யூ.அஹமட் களமிறக்கப்பட்டதனை நீங்கள் எவ்வாறு பார்க்கின்றீர்கள்?

11- மொஹைதீன் அப்துல் காதரின் மரணத்திற்கு பிற்பாடு வந்த 2004ம் ஆண்டைய பாராளுமன்ற தேர்தலில் தற்போதைய பிரதி அமைச்சர் அமீர் அலி கல்குடாவில் புதுமுக வேட்பாளராக முஸ்லிம் காங்கிரசில் களமிறக்கப்பட்ட பொழுது உங்களினுடைய ஆதரவு யாருக்கு இருந்தது?

12- கல்குடாவின் முஸ்லிம் பாரளுமன்ற பிரதி நிதித்துவம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் முக்கிய பங்காற்றிய நீங்கள் தற்பொழுதைய கல்குடாவின் அரசியல் தலைமையாக இருக்கின்ற பிரதி அமைச்சர் அமீர் அலிக்கு எதிராக பகிரங்கமாகவும், துணிச்சலாவும் வாழைச்சேனை பிரதேசத்தில் செயற்பட்டு வருவதற்கான காரணம் என்ன?

13- அடிப்படையில் ஐக்கிய தேசியக்கட்சிக்காரனாக இருக்கின்ற நீங்கள் பிரதி அமைச்சர் அமீர் அலியினை எதிர்த்து செயற்படுவதற்கு அவர் முஸ்லிம் காங்கிரசினை விட்டு விலகியதே முக்கிய காரணம் என கூறுவதனை ஏற்றுக்கொள்ள முடியுமா?

14- வாழைச்சேனை ஜும்மா பள்ளிவாயலின் நம்பிக்கையாளர் சபையின் தலைவராக நீண்ட காலம் செயற்பட்டு வருகின்ற நீங்கள் அரசியல் ரீதியாக பார்க்கப்படுமிடத்து ஓட்டமாவடியினை பூர்வீகமாக கொண்ட மொஹைதீன் அப்துல் காதர் மற்றும் பிரதி அமைச்சர் அமீர் அலி ஆகியோர்கள் மூலம் கல்குடா பிரதி நிதித்துவம் பாதுகாக்கப்படுவதற்கு பிரதேச வாதத்திற்கு அப்பால் நின்று செயற்பட்டுள்ளீர்கள். இந்த நிலையில் நிகழ்காலத்தில் கல்குடா பிரதேசத்தில் தலைவிரித்தாடுகின்ற பிரதேசவாதத்தினை நீங்கள் எவ்வாறு பார்க்கின்றீர்கள்?

15- ஐக்கிய தேசிய கட்சியின் வெற்றிக்காக உழைத்த நீங்கள் கல்குடாவின் அரசியல் ஜாம்பவானாக திகழ்ந்த முன்னாள் அமைச்சர் தேவநாயகத்தினை வைத்து கல்குடா பிரதேசத்தினை அபிவிருத்தி செய்ய தவறவிட்டுள்ளீர்கள் என தற்பொழுதும் பிரதேச மக்களால் குற்றம் சுமத்தப்படுவது சம்பந்தமாக உங்களினுடைய கருத்தென்ன?

16- இரண்டு வருடங்களுக்கு முன்னர் கிழக்கு மாகாண முதலமைச்சர் மூலம் கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையின் தவிசாளராக நியமிக்கப்பட்டிருந்த உங்களை தற்பொழுது அப்பதவியிலிருந்து அகற்றப்பட்டு விட்டதாகவும், கிழக்கு முதலமைச்ச்ருக்கும் உங்களுக்கும் இடையில் பாரிய விரிசல் ஏற்பட்டுள்ளதாக பேசப்படுவது சம்பந்தமான உண்மை நிலை என்ன?

17- வாழைச்சேனை பிரதேசமானது நீண்ட காலமாக முஸ்லிம் காங்கிரசிற்கு ஆதரவளித்து வருகின்ற நிலையில் முஸ்லிம் காங்கிரஸ் வாழைச்சேனை பகுதியில் மேற்கொண்டுள்ள அபிவிருத்தி பணிகள் தொடர்பாக நீங்கள் திருப்தி அடைகின்றீர்களா?

18- வாழைச்சேனையில் முக்கிய பாடசாலைகளாக இருக்கின்ற அந்நூர் தேசிய பாடசாலை மற்றும் ஆயிஷா பெண்கள் பாடசாலை போன்றவைகளின் பெறுபேறுகளில் ஏற்பட்டுள்ள பின்னடைவுகளுக்கு முக்கியமாக அரசியலா அல்லது பெளதீக காரணிகளா தாக்கம் செலுத்துகின்றது?

19- கல்குடா பிரதேசத்தில் மாகாண சபையில் மூன்று வேட்பாளர்கள் களமிறக்கப்படுவதும், கடந்த பாராளுமன்ற தேர்தலில்களில் தேசியப்படியல் தருவதான வாக்குறுதிகள் முஸ்லிம் காங்கிரசினால் மீறப்பட்டு கல்குடா முஸ்லிம் காங்கிரஸ் போராளிகள் ஏமாற்றம் அடைந்த நிலையில் இருப்பதை பற்றிய உங்களின் கருத்தென்ன?

20- பிரதேசத்து மக்களின் பெரும் எதிர்பார்ப்புடன் பேசப்பட்டு வந்த உங்கள் கட்சியின் தலைவரினால் வாழைச்சேனை பிரதேசத்தில் மேற்கொள்ளப்படவிருந்த ஐந்து கோடி ரூபாய்களுக்கான அபிவிருத்தி பணிகள் எதற்காக இடை நிறுத்தப்பட்டுள்ளது.

21- உங்களினுடைய கட்சியானது வாழைச்சேனை பிரதேசத்தில் உள்ள சிவில் அமைப்புக்களுடன் எவ்வாறான உறவினை பேணிவருகின்றது? மற்றும் சிவில் அமைப்புக்களின் செயற்பாடுகள் வாழைச்சேனை அமைப்புக்களின் எவ்வாறு இருக்கின்றது?

22- கல்குடா பிரதேசத்தில் முக்கியமான சிவில் அமைப்பாக ஆரம்பிக்கப்பட்ட கல்குடா மஜ்லிஸ் சூறா அமைப்பில் முக்கிய உறுப்பினராகவும், பிரதி தலைவராகவும் செயற்பட்ட நீங்கள் தற்பொழுது அந்த அமைப்பின் செயற்பாடுகளில் உங்களை ஏன் காணக்கிடைப்பதில்லை? மற்றும் சூறா சபையின் செயற்பாடுகள் எந்த நிலையில் இருக்கின்றது?

23- வாழைச்சேனை ஜும்மா பள்ளிவாயலில் நீண்டகாலமாக இருந்த வருகின்ற உங்களிடம் கிழக்கு மாகாணத்தில் கம்பிரமான பள்ளிவாயலாக குறித்த பள்ளிவாயலினை கட்டி முடிப்பதற்கு கிழக்கு முதலமைச்சர் செய்னுலாப்தீன் நசீர் அஹமட் முழு உதவியினை செய்து தருவதாக வாக்குறுதி அளித்திருந்த நிலையில் அந்த வாக்குறுதி நிறைவேற்றப்பட்டு விட்டதா?

24- கல்குடா பிரதேசத்தில் முக்கியமாக ஓட்டமாவடி, மீராவோடை, வாழைச்சேனை என மூன்று ஜும்மா பள்ளிவாயல்கள் இருந்தும் வாழைச்சேனை ஜும்மா பள்ளிவாயல் நிருவாகம் மட்டுமே பிரதேசத்தில் ஒரு ஜும்மாவினை மட்டும் நிகழ்த்தி ஏனைய சிறிய பள்ளிவாயல்களை கட்டுப்பட்டிற்குள் வைத்து நிர்வகித்து வருகின்றமைக்கான காரணத்தினையும், வெற்றியினையும் எவ்வாறு பார்க்கின்றீர்கள்?

25- பொதுவாக தற்போதைய அரசியலினை எடுத்துக்கொண்டால் முதலமைச்சர் செய்னுலாப்தீன் நசீர் அஹமட்டினுடைய அல்லது உங்களினுடைய கட்சியின் தலைமையான அப்துர் ரவூப் ஹிபத்துல் ஹக்கீமினுடைய நம்பிக்கைக்கு பாத்திரமானவரா நீங்கள்? அல்லது முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்காரரா?

26- கல்குடா அரசியல் வரலாற்றில் வாழைசேனைக்கான தனியான பிரதேச சபையின் தேவைப்பாடானது தற்பொழுது எந்த நிலையில் இருக்கின்றது?

27- கிழக்கு மாகாண சபையானது உங்களினுடைய கட்சியினை சேர்ந்த செய்னுலாப்தீன் நசீர் அஹமட்டினுடைய அதிகாரத்தின் கீழ் இருக்கின்ற நிலையில் ஏன் இந்த வாழைச்சேனைக்கான தனியான பிரதேச சபைக்கான முன்னெடுப்புக்கள் தமிழ் சமூகத்தினை பிரதி நிதித்துவப்படுத்துகின்ற அரசியல்வாதிகளுடன் சுமூகமான முறையில் கலந்தாலோசிக்கப்பட்டு இன்னும் உங்களினுடைய கட்சியானது சரியான முடிவிற்கு வராமல் இருக்கின்றது?

28- 2004ம் ஆண்டிலிருந்து கல்குடா பிரதேசத்தில் அதிகாரமிக்க ஒரு பாராளுமன்ற உறுப்பினராகவும், பிரதி அமைச்சராகவும் இருந்து வருகின்ற அமீர் அலியிடம் நீங்கள் ஏன் கட்சி வேறுபாடுகளுக்கு அப்பால் நின்று எல்லோரும் ஒன்றிணைந்து வாழைச்சேனைக்கான தனியான பிரதேச சபையினை பெற்று தருமாறு கோரிக்கை வைப்பதில்லை?

29- பிரதி அமைச்சர் அமீர் அலியினால் நிலத்தொடர்பற்ற முஸ்லிம் பிரதேசங்களை இணைத்து தனியான கல்வி வலயத்தினை உருவாக்க முடியுமென்றால் அவரை எதற்காக நீங்கள் இந்த வாழைச்சேனைக்கான தனியான பிரதேச சபை விடயத்தில் குற்றம் சுமத்துகின்றீர்கள்?

30- வாழைச்சேனை மத்தி பிரதேச செயலகத்தினை பெறுவதற்காக ஓட்டமாவடி பிரதேச செயலக நிருவாகத்தில் இருந்து கிரான் பிரதேச செயலக நிருவாகத்திற்கு விட்டுக்கொடுப்பு செய்யப்பட்ட ஐந்து கிராம சேவகர் பிரிவுகள் சம்பந்தமாக உங்களினுடைய கருத்தென்ன? மற்றும் அதனை மீண்டும் ஓட்டமாவடி பிரதேச செயலகத்துடன் இணைப்பதற்கான முஸ்தீபுகள் எதனையும் உங்களுடைய கட்சியானது எடுக்க வேண்டும் என்ற நிலைப்பட்டில் நீங்கள் இருக்கின்றீர்களா?

31- சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசின் முக்கிய கோட்டையாக கருதப்படுகின்ற வாழைச்சேனைக்கான தனியான பிரதேச சபையினை பெற்றுக்கொடுக்கும் விடயத்தில் உங்களினுடைய கட்சியின் தலைமையான அப்துர் ரவூப் ஹிபத்துல் ஹக்கீம் மெளனம் காப்பதற்கான காரணம் என்ன?

32- சில நாட்களாக முக்கிய பிரச்சனையாக பேசப்பட்டு வருகின்ற வாழைச்சேனை பிரதேச சபைக்கான ஆரம்பகால கட்டிடம் அமைந்திருந்த காணியானது வாழைச்சேனை பிரதேச சபைக்கு சொந்தமானது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜெயானந்த மூர்த்தியின் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்தினை நீங்கள் எவ்வாறு பார்க்கின்றீர்கள்?

33- குறித்த காணியில் தற்காலிக வியாபாரம் செய்து வருகின்ற முஸ்லிம் வியாபாரிகளே அது பிரதேச சபைக்கு சொந்தமான காணி எனவும் எவர் நிர்வகித்தாலும் எங்களுக்கு பிரச்சனை இல்லை எனக் கூறுவதனை நீங்கள் எவ்வாறு பார்க்கின்றீர்கள்?

34- குறித்த பிரதேச சபையின் செயலாளர் ஷிஹாப்தீன் குறித்த காணியானது பிரதேச சபைக்கு சொந்தமான காணி எனவும், மிகவிரைவில் இடை நிறுத்தப்பட்ட பொதுச் சந்தை கட்டிட தொகுதியின் கட்டுமான பணிகளை மீண்டும் ஆரம்பிக்கவுள்ளதாக பகிரங்கமாக ஊடகங்களுக்கு தெரிவித்த கருத்துக்களை பற்றிய உங்களுடைய கருத்தென்ன?

35- பிரதேச சபையின் செயலாளர் இவ்வாறான குறித்த காணி சம்பந்தமான செயற்பாடுகள் எதிர்காலத்தில் முஸ்லிம், தமிழ் சமூகங்களுக்கிடையில் இன முறுகளினை ஏற்படுத்த கூடியது என பகிரங்கமாக தெரிவித்துள்ள கருத்துக்களை நீங்கள் எவ்வாறு பார்க்கின்றீர்கள்?

36- இவ்வளவு காலமும் அமைதியாக இருந்த நீங்கள் திடீர் என குறித்த காணியானது வாழைச்சேனை ஜும்மா பள்ளிவாயலுக்கு சொந்தமான காணி என கூறுகின்றமைக்கான காரணம் என்ன.?

37- கடைசியாக குறித்த காணி சம்பந்தமான விடயத்தினை எதிர்காலத்தில் எவ்வாறு சுமூகமான முறையில் தீர்த்துக்கொள்ள இருக்கின்றீர்கள்?

போன்ற முக்கியமான முப்பத்தியேழு கேள்விகளுக்கு வாழைச்சேனை பிரதேசத்து முக்கிய அரசியல் நகர்த்துனரும் வாழைச்சேனை ஜும்மா பள்ளிவாயலின் நீண்டகால நிருவாகியும், கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையின் முன்னாள் தவிசாளருமான மெம்பர்ஸ் மீராமுஹைதீனினால் வளங்கப்பட்ட விரிவான பதில்கள் அடங்கிய காணொளியானது வாழைச்சேனை முஸ்லிம் சமூகம் எதிர் நோக்கும் சவால்களுக்கான தீர்வுகளை நோக்கிய பார்வைகளாக கருத்தில் கொள்ளப்பட்டு அரசியல்வாதிகளினதும், புத்தி ஜீவிகளினதும், பொதுமக்களினதும்,எமது இணைய நாளிதழ் வாசகர்களின் கவனத்திற்கும் இங்கே பதிவேற்றம் செய்யபட்டுள்ளது.

Web Design by The Design Lanka