இஸ்லாத்திற்கு எதிரானவர்களே சவூதிக்கு எதிராக கோஷம் எழுப்புகின்றனர் - மஷூர் மௌலானாவின் விசேட நேர்காணல் - Sri Lanka Muslim

இஸ்லாத்திற்கு எதிரானவர்களே சவூதிக்கு எதிராக கோஷம் எழுப்புகின்றனர் – மஷூர் மௌலானாவின் விசேட நேர்காணல்

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

அண்மைக்காலமாக சவுதி அரேபியாவில் ஏற்பட்டுள்ள அரசியல் ரீதியான மாற்றம், புதிய முடிக்குரிய இளவரசர் தெரிவு, பொருளாதார ரீதியிலான புதிய கொள்கைத்திட்டம், அமெரிக்காவுடனான அன்னியோனிய உறவு தொடர்பில் பல்வேறு சர்ச்சை மிக்கதாக கருத்தாடல்கள் ஊடகங்கள் வாயிலாகவும் சமூக வலைத்தளங்களிலும் பரவலாக பேசப்பட்டு வருகிறது, சவூதி அரேபியாவில் வாழ்ந்து வருபவரும் இலங்கையோடு மிக நெருங்கிய உறவினையும் கொண்டுள்ள இன நல்லுறவுக்கான தேசிய வேலைத்திட்டத்தினுடைய தலைவரும் மத ஒப்பீட்டு ஆய்வாளருமான அஷ்ஷேஹ் அப்துல் காதர் மஷூர் மௌலானா அவர்களுடனான சிறப்பு நேர்காணலை வாசக்காரர்களுக்கு தருகிறோம்.

-நேர்காணல் கலீல் எஸ் முஹம்மத்-


கேள்வி: சவுதியின் முடிக்குரிய இளவரசராக முஹம்மத் பின் சல்மான் அவர்கள் அறிவிக்கப்பட்ட தினத்திலிருந்து ஏற்பட்டுள்ள புதிய அரசியல் மாற்றம் அதனோடு இனைந்த புதிய பொருளாதார கொள்கையில் உருவாகியுள்ள மாற்றங்கள் அமெரிக்காவுடனான புதிய உறவு இவையனைத்தும் அரபுலக அரசியல் அரங்கில் மாத்திரமல்லாது சர்வதேச ரீதியில் முஸ்லீம் சமூகத்தின் மத்தியில் பாரிய அதிர்வலைகளையும் சவூதி அரசின் மீது பாரிய சந்தேகத்தினையும் ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து உங்கள் கருத்து என்ன?

பதில்: சவுதியின் புதிய முடிக்குரிய இளவரசர் முஹம்மத் பின் சல்மான் அவர்களது நியமதத்தின் பின்னர் சவூதி நாட்டினுடைய பல வர்த்தக பொருளாதார முன்னேற்றங்கள் தொடர்பில் சிந்தித்து பல நாடுகளுடன் தங்களது தொடர்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அந்தவகையில்தான் அமெரிக்காவுடனானா தொடர்பும் உருவாகியுள்ளது.

இதனை காரணமாக வைத்து சவுதி அரசுக்கு எதிராக செயல்படுபவர்கள் குறிப்பாக சவுதி விடயத்திலே அந்த அரசுக்கு எதிராக செயல்படுபவர்களின் ஊடுருவல் அதிகரித்தவண்ணமுள்ளது. இதுதான் அங்குள்ள உண்மையான பிரச்சினை. அவர்களின் கட்டுக்கதைகள் மூலமாக சவூதி அரசுக்கு நெருக்கடிகளை கொடுத்து நாட்டினை வேறுபக்கம் திசைதிருப்ப முயலுகின்றனர் இதற்கென சில ஊடகங்களும் துணை போகின்றன.

அண்மையில் இடம்பெற்ற இந்த மறுசீரமைப்பின் மூலம் அரசமைப்பின் சட்டதிட்டங்களுக்கு அமைவாக பிழையான வழிகளில் சொத்து குவிப்பு மற்றும் நிதி மோசடியில் ஈடுபட்ட பலர் பாரபட்சமின்றி கைதாகியுள்ளனர். சிலர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர் இன்னும் சிலர் விசாரணைக்காக தடுத்தது வைக்கப்பட்டிருக்கின்றனர்.

இவைகள்தான் இன்று பலகோணங்களில் விமர்சனமாகியுள்ளது. இதனை சாதகமாக பயன்படுத்த இஸ்லாமிய விரோதப்போக்குடைய தரப்பினர் முயலுகின்றனர். ஆனால் சவூதி வாழ் சகோதரர்கள் அனைவரும் புதிய முடிக்குரிய இளவரசரின் திட்டங்களை பெரிதும் வரவேற்கின்றனர். வெளியிலே சமூக வலைத்தளங்களில் பேசப்படுவது போன்று அங்குள்ள மக்களின் நிலைமை இல்லை. மாறாக முடிக்குரிய இளவரசரின் செயல்பாடுகளுக்கு ஆதரவாகவே மக்களின் மனநிலையும் கள நிலைமையும் உள்ளது.

கேள்வி: எது எப்படி இருந்தபோதிலும் சவூதி ஒரு தன்னாதிக்கமுள்ள முழு உலகுக்கும் பெட்ரோலிய வளத்தை வழங்கும் பொருளாதார வளம்கொழிக்கும் சக்திமிக்க நாடு, அமெரிக்காவின் வல்லாதிக்கத்துக்கு ஒருபோதும் அடிபணிய வேண்டிய அவசியமில்லை. இவ்வாறு இருக்கையில் அமெரிக்காவின் கைக்கூலியாகவும் இஸ்லாத்தின் விரோதியான இஸ்ரேலுடனும் கூட்டு

வைத்திருப்பது சமூகம் என்கிற அடிப்படையில் முஸ்லிம்களுக்கு ஆபத்தானதல்லவா இதனை எந்த விதத்தில் பார்க்கிறீர்கள்?

பதில்: உங்களது கேள்வி நியாயமானது, சவுதியை பொறுத்தவரை உலகின் 57 முஸ்லீம் நாடுகளில் சவுதியும் ஒன்று, நபி முஹம்மத் ஸல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிறந்து வாழ்ந்த நாடு, மக்கா மதீனா ஆகிய எமது இரு புனித தலங்களை கொண்டுள்ளது.

மறுபுறம் சவுதியில் காபிர்களும் தொழிலின் நிம்மித்தம் அங்கு குடியிருக்கிறார்கள். அவர்களும் அங்கு வாழ்கிறார்கள். பல நாட்டை சேர்ந்தவர்களும் அங்கு வாழ்கிறார்கள். அமெரிக்கா. பிரான்ஸ். ஜெர்மனி. இற்றாலி. இந்தியா. ஸ்ரீலங்கா. வங்காளதேசம், சீன போன்ற பல நாட்டவர்களும் அங்கு வாழ்கிறார்கள். குறிப்பாக பெரும்பாலானவர்களின் வாழ்வாதாரம் சவுதியினாலே கழிகிறது என்பது மறுப்பதற்கில்லை.

உணவளிப்பவன் அல்லாஹ், அகிலத்திலுள்ள அனைத்து வஸ்த்துக்களுக்கும் சொந்தக்காரன் அல்லாஹ், அவனே படைப்பாளன் அவனின்றி அவனது நாட்டமின்றி எதுவுமில்லை. இந்த அடிப்படையை நாம் எல்லோரும் ஏற்றுக்கொண்டவர்கள்.

அந்தவகையிலே அங்கு பல நாட்டவருடனும் பல தொடர்புகள் உள்ளன. சவுதியில் பெட்ரோலிய வளமுள்ளது ஆனால் தொழிநுட்ப வளம் இல்லை. அமெரிக்காவிடம் தொழிநுட்ப வளமுள்ளது, விஞ்சான கண்டுபிடிப்புகள் கல்வியறியவு உள்ளது. இதனை நாம் சிறந்த முறையில் பயன்படுத்த வேண்டும். இரு தரப்பு உறவினூடாகவே இதனை பரிமாற்ற முடியும். அதேபோன்று அமெரிக்க வல்லரசு நாடு மறுபுறம் சூழ்ச்சிகள் அனைத்தும் நிரம்பி காணப்படுகிறது. இல்லை என்று சொல்லவில்லை.

ஆனால் ஒரு சிறந்த சமூங்கத்தின் தலைவன் இவைகள் எல்லாவற்றையும் சிறந்த முறையில் திட்டமிட்டு இருக்கிற வளத்தை பயன்படுத்தி உருவாகிற சூழ்ச்சிகளை முறியடித்து பயணிக்கிற போதுதான் சமூகமும் நாடும் வெற்றி இலக்கை அடையும். மாறாக எதிர்வாதம் புரிந்து மேற்குலக நாடுகளை அவசியமில்லாமல் எதிர்த்து மதவாதத்தினை கையிலெடுத்து ஒரு நாட்டை முன்னேற்றப்பாதையில் கொண்டு செல்ல முடியாது. அவர்கள் எந்த மதத்தை சேர்ந்தவர்கள் என்பது அவசியமில்லை அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை சற்று கவனிக்கவேண்டும். மற்றவர்களது மதத்தினை மதிக்க இஸ்லாம் நமக்கு கற்றுத்தந்துள்ளது.

சவுதியில் பெற்றோரோலியவளம் அமெரிக்காவினால்தான் கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மூலம் முஸ்லீம் சமூகம் பாரிய முன்னேற்றங்களை சவுதியில் கண்டது. பல முதலீட்டாளர்கள் சவுதிக்கு வந்தார்கள் அவர்களது தொழிநுடட்பம் மிக உச்சமாக பயன்படுத்தப்பட்டது. இன்னும் பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. இன்று ஒரு விமானம் பறக்கிறது என்றால் அதற்கு பிரதான காரணம் எமது பெட்ரோலிய வளம் மாத்திரம் அல்ல தொழினுட்ப வளமும் புதிய கண்டுபிடிப்புகளும் தான். இவைகளை அமெரிக்க பிரான்ஸ் ஜெர்மனி போன்ற நாடுகள் கொண்டிருக்கின்ற்ன.

இன்று நாம் ஹஜ்ஜுக்கு விமானம் மூலம் செல்கிறோம்? யாருடைய விமானம்? யாரின் கண்டுபிடிப்பு? அமெரிக்காவின் ரோல்ஸ்வைஸ் கம்பெனி ஒரு யூத கம்பெனி, அவர்கள் குறித்த விமானத்தை செய்துவிட்டார்கள் என்று சொல்லி நாம் மக்கா நகருக்கு போக முடியாது என மறுக்கிறோமா? இவ்வாறன தொழிநுட்பத்தை ஏன் நாம் பயன்படுத்த கூடாது அவர்கள் கைக்கொள்கிற தந்திரங்களை நாம் ஏன் பயன்படுத்தக்கூடாது? சூழ்ச்சியினை சூழ்ச்சியால்தான் முடியடிக்க முடியும். அந்நியர்களது சூழ்ச்சியினை அவர்களை கொண்டே முறியடிக்கும் வகையில் திட்டங்கள் தீட்டப்பட்ட வேண்டும். அதற்கான தலைமையே சவுதியில் இன்று உருவாகியுள்ளது.

இன்று பாருங்கள் இந்த விமர்சனத்தை செய்கின்ற அனைவரும் குறிப்பாக இலங்கையில் கூட பெரும்பாலும் தங்களது பிள்ளைகளை வைத்தியர்களாக இன்ஜினியர்களாக படிப்பிப்பதற்காக பல லட்சக்கணக்கில் செலவு செய்து அமெரிக்காவுக்கு அனுப்பவில்லையா? சவுதி தலைவர் மாத்திரம் தான் அமெரிக்கா போகிறாரா? எத்தனை சாதாரணமானவர்கள் அமெரிக்கா பிரஜையாக ஆசைப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள், இதுவெல்லாம் தவறு இல்லையா? ஏன் வீணான பொறாமையும் வீண் சந்தேகங்களும் விதண்டாவாதங்களும் எழுகின்றன? யார் செய்தாலும் அது குற்றமாக பார்க்க வேண்டுமே?

உண்மையில் விடயம் அப்படி அல்ல சவுதிக்கு எதிரானவர்கள் வேண்டுமென்று கட்டவித்து விடப்படுகிற சதியின் வெளிப்பாடுகளே இதனை இந்த முஸ்லீம் சமூகம் தெளிவாக புரிந்துகொள்ளவேண்டும்..

அதேபோன்றுதான் இஸ்ரவேலுடனான தொடர்பு பற்றியும் கேட்டிருந்தீர்கள். அப்படியான எந்த உறவும் இல்லை. இனியும் வரப்போவதுமில்லை. சவுதியில் இஸ்ரவேலின் தூதரகம் திறந்துவிட்டதாகவும் அப்பட்டமான பொய்யை, புரளியை கட்டவிழ்த்து விட்டுள்ளனர். லண்டனில் இருந்து இயங்கி வரும் ஒரு சில ஊடகங்கள் இவ்வாறான பொய்யான இட்டுக்கட்டப்பட்ட செய்திகளை சொல்லிக்கொண்டிருக்கின்றன. உண்மையில் அவ்வாறான எந்த தொடர்பும் இல்லை என உறுதியாக கூற விரும்புகிறேன்.

கேள்வி: பொருளாதார நன்மைகளை கொண்டுவரும் யுக்தியாகவே அமெரிக்காவுடன் தொடர்பு உள்ளது அதேபோல் தொழிநுட்ப பரிமாற்றத்திற்காகவே அமெரிக்காவுடன் உள்ள தொடர்பு என கூறும் நீங்கள் அண்மையில் மிகவும் சர்ச்சைக்குள்ளாகியுள்ள திரைப்பட கூட திறப்பு விழா, மற்றும் சவுதி முழுவதும் 200 திரையரங்குகளை திறப்பதற்கான புதிய முடிக்குரிய மன்னரின் முடிவு முழு முஸ்லீம் கலாச்சார சீரழிவுக்கு வித்துடுமல்லவா? மாற்று இனத்தவரின் எந்த கலப்படும்மும் இல்லாத முஸ்லீம் நாடொன்று இவ்வாறு களியாட்ட நிகழ்வுக்கும் பொழுதுபோக்கு நிகழ்வுகளுக்கும் முக்கியத்துவம் வழங்குவது சமூகத்தின் வீழ்ச்சிக்கு வித்துடுமல்லவா? இதனை நீங்கள் என்ன கண்ணோட்டத்தில் பார்க்கிறீர்கள்?

பதில்: இந்த விடயம் நகைப்புக்குரியதாக இருந்தாலும் சமூகத்தின் அக்கறை கொண்டு இந்த கேள்வியை கேட்கிறீர்கள் ஆனால் சமூகம் என்பது ஒவ்வொரு தனிமனிதரதும் கூட்டுமொத்த செயல்பாடுகளின் மொத்த வடிவமாகும். இலங்கையில் முஸ்லிம்கள் இல்லையா? திரையரங்குகள் இல்லையா? இவற்றுக்காக யாராவது எதிர்த்து குரல் கொடுத்திருக்கிறார்களா? குறைந்தபட்சம் ஒரு முஸ்லீம் தலைவராவது இதுவரை பேசவில்லை.

இந்தியாவில் வெளியிடப்படுகின்ற அதே தினத்தில் இங்கும் வெளியிடப்படுகிறது இங்கு முண்டியடித்துக்கொண்டு செல்பவர்கள் யார் என்று யாரும் கேள்வி கேட்பதில்லை, ஆனால் அவ்வாறு செல்பவர்கள்தான் சமூக வலைத்தளங்களில் சவுதியை விமர்சிக்கின்றனர். ஆளுக்கொரு சட்டத்தை கொண்டு இயங்க முயறசிக்கின்றனர். இஸ்லாமிய அடிப்படையில் சட்டம் என்பது யாருக்கும் சமமாகவே இருக்க வேண்டும். இஸ்லாமிய கலாச்சாரம் பற்றி பேசுபவர்கள் தனிப்பட்ட வாழ்வில் பிழையான பாதையில் இருந்துகொண்டு அடுத்தவரை கை நீட்டுகின்றனர்.

மறுபுறம் இன்று எல்லோருடைய வீடுகளிலும் தொலைக்காட்சி பெட்டிககளுக்கு முன்னால் குந்திக்கொண்டு தமக்கு வேண்டிய வித்தத்தில் அசிங்கமான படங்களைக் கூட பார்க்கின்றனர். வீடுகளில் இப்போது ஹோம் தியேட்டர் நிலமைக்கு வந்துள்ளது. அது சவுதியில் 100 அடி திரையரங்குகளாக மாறியுள்ளது. கடந்த 29 வருடங்களுக்கு முன்பு நடைமுறையில் இருந்த ஒன்றுதான் சவுதியின் திரைப்பட கூடம். இது ஒரு புது விடயம் அல்ல.

ஆனால் சவுதியில் தற்போது உள்ள திரைப்பட கூடங்களின் நடைமுறை வேறு, கண்டமாதிரியான அசிங்கங்களை திரைகளில் காண்பிப்பதுமில்லை, அதற்கான அனுமதியும் இல்லை. திரை உலகிலே சமூக மாற்றங்களை உண்டுபண்ணக்கூடிய சமூகம் விழிப்புணர்வு பெறக்கூடிய திரைப்படங்கள் உள்ளன. அவற்றை முக்கியத்துவப்படுத்தியே அங்கு இவைகள் நிறுவப்பட்டுள்ளன. ஒவ்வொரு திரைப்படமும் அரசினால் பரிபூரணமாக ஆராயப்பட்டு எதை சமூகம் பார்க்கவேண்டுமோ அதனையே நாம் வெளியிடுகிறோம். அசிங்கங்களை நாம் ஒருபோதும் அரங்கேற்றுவதில்லை. இதன் மூலம் பாரிய சமூக மாற்றங்களை எதிர்பார்க்கிறோம். இது வெறும் களியாட்ட நிகழ்வு அல்ல. வீணான பொழுதுபோக்குமல்ல. நல்ல செய்திகளை ஊடகங்கள் வாயிலாக வழங்கி கட்டுக்கோப்பான ஒரு சமூகத்தை கட்டியெழுப்பும் சமூக மாற்றத்துக்கான அடிப்படையே இதுவாகும்.

கேள்வி: அண்மையில் ஒரு சம்பவம் சவுதியின் ஜீஸான் பிரதேசத்திலேயே இடம்பெற்ற ஜும்மா பிரசங்கம் ஒன்றில் சவூதி அரசு பற்றி விமர்சனம் செய்து குத்பா பிரசங்கம் செய்ய முன்வந்த ஒரு இமாமை மிம்பர் மேடையிலே வைத்து பொலிஸாரினால் பிடித்து இழுத்து செல்லப்படும் காட்சியினை சமூக வலைத்தளங்களில் காணமுடிந்தது. அவ்வாறாயின் சவுதியில் கருத்து சுதந்திரம் மறுக்கப்படுகிறதா?

பதில்: சவூதி நாட்டை சேர்ந்தவர்கள் ஜும்மாவுக்கு செல்லும்போது அழகாக உடுத்து தோப்புக்கு மேலதிகமாக கறுப்பு ஆடை அணிந்தே செல்வார்கள். அன்றய தினம் குறித்த பள்ளிவாசலில் குத்பா ஆரம்பமாக சற்று தாமதமாகிவிட்டது. இதனை அவதானித்த அந்த வயோதிபர் தானே முன்வந்து குத்பா பிரசங்கம் செய்ய ஆரம்பித்த அந்த தருணத்திலேயே இந்த குழப்பம் ஏற்பட்டுள்ளது. வாசலில் இருந்த பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டு அவர்களால் தடுத்து நிறுத்தப்பட்டார். விசாரணைக்குட்படுத்தப்பட்ட போது அந்த வயோதிப பெரியவர் சற்று மன நோயாளியானவர் என பின்னர் கண்டறியப்பட்டது. இந்த உண்மையை அறிந்தவன் நான், நேரடியாக களத்தில் இருந்திருக்கிறேன், விடயங்களை ஆராய்ந்திருக்கிறேன். இதுதான் அங்கு நடந்தது.

ஆனால் இப்போது விமர்சனம் என்னவென்றால் அவர் உடுத்திருந்த ஆடையை கொண்டு அவர் ஒரு உலமா, அவருக்கு குத்பா ஓத மறுத்துவிட்டது என்கிற விமர்சனம் முன்வைக்கப்படுகிறது. சவூதிகளின் ஆடைக்கலாச்சாரம் அது, அந்த ஆடையுடன் உள்ள எல்லோரும் உலமாக்கள் அல்ல என்பதனை புரிந்துகொள்ளவேண்டும். அன்றய தினம் குத்பா ஒத்துவதற்கு நியமிக்கப்பட்டவரும் அவர் அல்ல.

உண்மைகளை கண்டறியாமல் தீர விசாரணைக்குட்படுத்தாமல் வீடியோவை கண்டதும் எல்லோரும் அதனை பகிர்ந்துகொண்டு முழு முஸ்லீம் சமூகத்தையும் சவுதியின் மீது பிழையான தப்பிப்பிராயத்தை ஏற்படுத்தவும் சிலர் முந்திக்கொள்கின்றனர் அவ்வளவுதான்.

கேள்வி: அண்மையில் அமெரிக்காவுக்கு விஜயம் செய்த முடிக்குரிய இளவரசர் முஹம்மத் பின் சல்மான் அவர்கள் பூட்டிய அறையில் இடம்பெற்ற அமெரிக்க ராஜதந்திரிகளுடனான சந்திப்பில் பாலஸ்தீன போராட்டம் தொடர்பில் ஒரு கருத்தை முன்வைத்திருந்தார். அதாவது பாலஸ்தீனம் சமாதானத்துடன் பயணிப்பதற்கான பல சந்தர்ப்பங்களை தவறவிட்டு விட்டது. இப்போது பேச்சு மேசைக்கு வரவேண்டும், முன்மொழிவுகளை ஏற்றுக்கொள்ளவேண்டும் அல்லது வாய் மூடி மௌனியாக இருந்து கொள்ளல் வேண்டும் என பலஸ்தீன அரசுக்கு கூறியதாக ஒரு சர்வதேச செய்தி ஊடகம் தகவலொன்றை வழங்கியுள்ளது. இவ்வாறு பலஸ்தீனை அச்சுறுத்தும் வகையில் இவ்வாறு ஏன் கருத்துக்களை அவர் தெரிவித்தார்.

பதில்: சவுதியில் உருவான அத்தனை தலைவர்களும் தற்போதுள்ள இளவரசர் முஹம்மத் பின் சல்மான் உட்பட பலஸ்தீனத்திற்கு வீடமைப்பு, சுகாதாரம், கல்வி, யுத்த தளபாடங்கள் உட்பட பல உதவிகளை வழங்கி வருவதுடன், பலஸ்தீனத்தோடு நெருக்கமான உறவுகளை கொண்டுள்ளது.

இங்கு நான் ஒரு விடயத்தை குறிப்பிட வேண்டும் அதுதான் கடந்த காலத்தில் உருவான அரபு வசந்தம், சில ஊடகங்களின் அரபு வசந்தங்கள் என்பதனூடாக சமூகங்களை அந்நியப்படுத்தி பொருளாதார ரீதியாக தூரப்படுத்தி தனிமைப்படுத்த வேண்டும் என்கிற சூழ்ச்சிகரமான செயல்பாடுகளுக்கு ஒருபோதும் துணை போக முடியாது. அரபு வசந்தத்தில் அங்கம் வகித்த அலி அப்துல்லா சாலிஹுக்கு என்ன நடந்தது? இந்த அரபு வசந்தம் மூலமாக நன்மையடைந்தவர்கள் இறுதிவரை அவரை பயன்படுத்திவிட்டு கொலையும் செய்துவிட்டனர்.

நாடுகளை சின்னாபின்னப்படுத்தி இஸ்லாத்திட்க்கு விரோதமான கொள்கைகளை மறைமுகமாக விதைக்கும் பகீரத முயற்சி இதுவாகும். பூட்டிய அறைக்குள் நடந்த சம்பாசனையை அந்த குறித்த ஊடக நிறுவனத்திற்கு ஏன் ஒளி வடிவில் பெற்று அதனை வெளியிட முடியவில்லை முடியவில்லை. இரகசிய சம்பாஷணை எப்படி இவர்களை எட்டியது. இது முற்றிலும் பொய்யானது, அவ்வாறான எந்த பேச்சுக்களும் இடம்பெறவில்லை. தவறானது அப்பட்டமான பொய் பிரசாரமாகும். மக்கள் இதனை நம்ப வேண்டாம்.

கேள்வி: சவுதியோடு இலங்கை மிக நெருக்கமான உறவினை கொண்டுள்ளது, இலங்கையில் இருந்து வேலைவாய்ப்புக்காக எமது இளைஞர்கள் அங்கு வாழ்கிறார்கள், இவ்வாறான சந்தர்ப்பத்தில் நீங்கள் அவர்களுக்கும் இலங்கை வாழ் முஸ்லீம் மக்களுக்கும் கூறும் ஆலோசனை என்ன?

பதில்: குறிப்பாக இலங்கையுள்ளவர்கள் இவ்வாறான செய்திகளை கண்டு ஏமாற வேண்டாம். இலங்கையிலும் இஸ்லாமிய விரோதப்போக்குடையவர்களின் ஊடுருவல் மிக வேகமாக உள்ளதாக அறிய முடிகிறது. இவை குறித்து அச்சப்படுங்கள். அவர்கள் குறித்து உண்மையை அறியுங்கள், இஸ்லாத்தின் விரோதிகள் எதிரிகள் யார் என்பதை உணர்ந்து செயல்படுங்கள். பணத்திற்காக மார்க்கத்தை விற்று செயல்படுவதில் இருந்து தவிருங்கள்.

அதேவேளை சவூதி அரசு இலங்கைக்கு மிகப்பெரும் உதவிகளை கடந்த காலங்களில் வழங்கி இருக்கிறது. எமது இளைஞர்கள் தொழிலுக்காக சென்று அங்கு நிறைய சம்பாதிக்கிறார்கள், இலங்கையின் பொருளாதாரத்தில் பாரிய பங்களிப்பை குறித்த வேலைவாய்ப்பு மூலமாக வழங்க முடிகிறது. இந்த உறவை மேலும் பலப்படுத்த வேண்டிய தேவை இருக்கிறது இதனை உணர்ந்து செயல்படுதல் வேண்டும். வீணான வாதப்பிரதிவாதங்கள் அவசியமில்லை. சவுதி அரசுக்கு எதிராக வீண் வதந்திகளை அபாண்டமான குற்றசாட்டுகளை

கட்டவிழ்த்து விடுவதில் இருந்து தவிர்ந்துகொள்ளுதல் நல்லது. தனிநபராயினும் சமூகமாயினும் இஸ்லாமிய வாழ்க்கை வழிமுறைகள் மிகவும் நேரான பாதையை காட்டித்தந்துள்ளது. அந்த வழியில் செயல்பட உறுதி பூணுவோம்! இன்ஷா அல்லாஹ்…

DSC01120 IMG-20180530-WA0057

Web Design by Srilanka Muslims Web Team