இஸ்லாத்தை முற்றாக அழிக்கும் முயற்சியில் அங்கோலா அரசாங்கம் - Sri Lanka Muslim

இஸ்லாத்தை முற்றாக அழிக்கும் முயற்சியில் அங்கோலா அரசாங்கம்

Contributors

 

– எம்.எப்.எம்.பஸீர்-

“இஸ்லாம் சட்ட பூர்வ மாக்கப்படுவது நீதித்துறை மற்றும் மனித உரிமைகள் அமைச்சகத்தினால் அங்கீகரிக்கப் படவில்லை. ஆதலால் அடுத்த அறிவிப்பு வரும் வரை மஸ்ஜிதுகள் அனைத்தும் மூடப்படுகின்றன.” 

கடந்த நவம்பர் 22ஆம் திகதி அங்கோலாவின் கலாச்சாரத்துறை அமைச்சர் ரோசா குரூஸ் டி சில்வா விடுத்த தகவலே அது.இந்தியா டுடே ஊடகத்தின் தகவலின் படி இந்த கருத்து அங்கோலா சட்டப் பேரவையின் ஆறாவது அமர்விலேயே முன்வைக்கப்பட்டுள்ளது. அத்துடன் அங்கோலா சட்டப் பேரவையில் முன்வைக்கப்பட்டுள்ள கலாசார அமைச்சரின்   இந் நிலையிலேயே இஸ்லாமிய செல்வாக்குக்கு அங்கோலாவில் நிரந்தரமாக முற்றுப்புள்ளி வைப்பதற்குண்டான முயற்சியில் நாடு இறங்கியுள்ளது. என நவம்பர் 24ஆம் திகதி அங்கோலா ஜனாதிபதி ஜோஸ் எட்வர்டோ டோஸ் சந்தோஸ் கருத்து தெரிவித்துள்ளதாக அங்கோலா ஊடகங்கள் உள்ளிட்ட பல ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டிருந்தன.

கடந்த வாரம் இவ்விரு செய்திகளின் அடிப்படையில் உலகளாவிய ரீதியில் அங்கோலாவில் இஸ்லாம் தடை செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் பரவத்தொடங்கின.

இந்த செய்திகளைத் தொடர்ந்து தெற்கு ஆபிரிக்க நாடான அங்கோலாவில் என்ன நடைபெற்றுக்கொண்டிருக்கிறது?, உண்மையில் அங்கு இஸ்லாத்துக்கு எதிரான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றதா? போன்ற பல்வேறு கேள்விகள் முஸ்லிம்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தின.

டேவிட் ஜா. அங்கோலா முஸ்லிம் கவுன்ஸிலின் தலைவர். இவர் ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள விஷேட செவ்வியொன்றில், கடந்த இரு ஆண்டுகளில் 8 பள்ளிவாசல்கள் தரைமட்டமாக்கப்பட்டுள்ளதாகவும் 60 பள்ளிவாசல்கள் வரையில் இழுத்து மூடப்பட்டுள்ளதாகவும், முஸ்லிம் பெண்கள் ஹிஜாப், நிகாப் உள்ளிட்ட ஆடை அணிகளை அணிவதற்கு தடங்கல்கள் ஏற்படுத்தப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் தலை நகரில் இது வரை 120 குர் ஆன் பிரதிகள் எரித்து அழிக்கப்பட்டுள்ளன.இவை பள்ளிவாசல்களை அழிக்கும் நடவடிக்கையின் போது முன்னெடுக்கப்பட்ட அழிப்பு நடவடிக்கையாகும். இதனூடாக அங்கோலாவில் இஸ்லாத்தை அழிக்க முழு அளவான முயற்சிகளை அந் நாட்டு அரசு முன்னெடுத்துள்ளதையே அதன் நடவடிக்கைகள் தெளிவுபடுத்திக்கொண்டிருக்கின்றன.

அங்கோலாவின் சட்ட திட்டத்தின் அடிப்படையில் அங்குள்ள இஸ்லாமிய அமைப்புக்களுக்கு எதிராக  முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் மத அடக்குமுறையை பிரதிபலிப்பதாகவும் இஸ்லாத்தை பின்பற்றுபவர்கள் குற்றவியல் சட்டக்கோவையின் பிரகாரம் குற்றவாளியாக காணப்படும் அபாயம் நிலவுவதாகவும் டேவிட் ஜா மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அங்கோலாவை பொறுத்தவரை ஒரு மதத்தை அந் நாட்டு நீதி மற்றும் மனித உரிமைகள் அமைச்சினூடாக அங்கீகரிப்பதற்கு குறைந்தது அதனை பின்பற்றும் ஒரு இலட்சம் பேர் அந்நாட்டில் இருக்க வேண்டும். எனினும் அங்கோலாவை பொறுத்தவரை அங்கு 90000 முஸ்லிம்கள் மட்டுமே வாழ்வதாக கணக்கெடுப்புகள் கூறுகின்றன.

இதேவேளை உரிய அனுமதியின்றி நிர்மாணிக்கப்பட்ட பள்ளிவாசல்களே தரைமட்டமாக்கப்பட்டுள்ளதாகவும் இந்த நடவடிக்கைகளை  நகர சபை அதிகாரிகளே பொலிசாரின் உதவியுடன் மேற்கொண்டு வருவதாகவும் சொல்லப்படுகிறது.

அதே நேரம் அங்கோலாவின் தினசரிப் பத்திரிகையான ஜேர்னல் டீ அங்கோலா கத்தோலிக்க திருச்சபை மற்றும் இராணுவம் ஆகியவற்றின் உதவியுடனேயே அங்கோலா முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக மொஹம்மட் த கொஸ்தா என்ற அங்கோலா முஸ்லிம் கவுன்ஸிலின் மற்றுமொரு உறுப்பினர் தெரிவித்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கத்தோலிக்க பாதிரியார்கள் அங்கோலா தொலைக்காட்சிகளில் இஸ்லாம் அங்கோலாவிலுள்ள சமூகத்தினருக்கு அச்சுறுத்தலானது என பிரச்சாரம் செய்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அங்கோலாவின் தலை நகர் லுவண்டா. இங்கு தனது 16 வயதான மகள் ஹிஜாப் அணிந்து சென்றதற்காக மோசமாக  தாக்கப்பட்டதாகவும் கொஸ்தா நினைவுகூர்கின்றார்.அதனால் தனது மகள் நாட்டை விட்டே வெளியேற நேர்ந்ததாகவும் அவர் குறிப்பிடுகிறார்.

இதேவேளை அங்கோலாவில் முஸ்லிம்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் இடையே மோதல் நிலைமை உள்ளதாகவும் அதன் பின்னணியிலேயே இஸ்லாம் அங்கு தடை செய்யப்பட்டுள்ளதாகவும் சில செய்திகள் வெளியாகின. எனினும் அந்த செய்திகளை அங்கோலா முஸ்லிம் கவுன்ஸில் உறுப்பினரான டேவிட் ஜா மறுத்துள்ளார். அவ்வாறு வெளியாகும் செய்திகள் மிகைப்படுத்தப்பட்டவை என அவர் குறிப்பிடுகிறார்.

எவ்வாறாயினும் அங்கோலாவில் இதுவரை முஸ்லிம்களுக்கு சட்ட அந்தஸ்து கிடைக்கவில்லை என்பதை மட்டும் சர்வதேச செய்திகள் ஊடாக தெளிவாக தெரிந்துகொள்ள முடியுமாக உள்ளது.

ஆபிரிக்க நாடான அங்கோலாவில் பெரும்பாலான மக்கள் அவர்களின் நாட்டுப் பழங்குடி சார்ந்த மதங்களைப் பின்பற்றுகின்றனர்.  47 சதவீத மக்கள் இந்தப் பழங்குடி சார்ந்த நம்பிக்கைகளைப் பின்பற்றுகின்றனர் என்றும், 38 சதவீத மக்கள் ரோமன் கத்தோலிக்க (ஆர்.சி.) கிறிஸ்தவத்தையும், 15 சதவீத மக்கள் கிறிஸ்தவத்தின் இன்னொரு பிரிவான புரோட்டஸ்டண்ட் கிறிஸ்தவத்தையும் பின்பற்றுகின்றனர் என்றும் சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

அங்கோலாவின் மொத்த சனத்தொகையான 1.85 கோடி மக்களில் 80,000 – 90,000 மக்கள் இஸ்லாத்தைத் தங்கள் வாழ்வின் வழிமுறையாக ஏற்று வாழ்கின்றனர். இவர்கள் பெரும்பாலும் மேற்கு ஆபிரிக்காவிலிருந்தும், லெபனானிலிருந்தும் இடம் பெயர்ந்தவர்கள்.

இந் நிலையில் அங்கோலா சட்டப்படி 100000 பேர் வரையில் பின்பற்றினால் மட்டுமே குறித்த ஒரு மதம் சட்டரீதியான அந்தஸ்தைப் பெறும். எனினும் அங்கோ முஸ்லிம்கள் 90000  பேர் மட்டுமே உள்ள நிலையில் பல முஸ்லிம் நிறுவங்கள் அந் நாட்டின் நீதி மற்றும் மனித உரிமை அமைச்சுக்கு சட்ட அந்தஸ்து கோரி அனுப்பி வைக்கும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை அங்கோலாவில் இஸ்லாம் தடை செய்யப்பட்டதாக கூறப்படும் செய்திகளை அந் நாட்டின் அரசின் சார்பாக பேசவல்ல சிலர் மறுத்துரைத்தனர்.

தமது நாட்டில் இஸ்லாத்திற்குத் தடை விதிக்கப்பட்டதாக வந்த செய்திகளில் உண்மை இல்லை என்று அமெரிக்காவில் உள்ள அங்கோலா தூதரக அதிகாரிகள் தெரிவித்தனர்.

வாஷிங்டனில் உள்ள அங்கோலா தூதரக செய்தித் தொடர்பாளர் பத்திரிகையார்களிடம் இவ்வாறு கூறினார்:

மத விவகாரங்களில் தலையிடாத நாடு அங்கோலா. எங்கள் நாட்டில் ஏராளமான மதங்கள் பின்பற்றப்படுகின்றன. மக்கள் தங்களுக்குப் பிடித்த மதத்தைப் பின்பற்றும் சுதந்திரம் உள்ளது. எங்கள் நாட்டில் கத்தோலிக்கர்கள், ப்ராட்டஸ்டண்டுகள், பாப்டிஸ்டுகள், இஸ்லாமியர்கள் உள்ளனர். எங்கள் நாட்டில் இஸ்லாத்திற்குத் தடை விதிக்கப்படவில்லை. மசூதிகள் இடிக்கப்படவில்லை.

எங்களுக்கு இது குறித்து எந்தவித அதிகாரபூர்வ தகவலும் வரவில்லை. நாங்களும் உங்களைப் போன்று இணையதளம் வழியாகத்தான் இந்தச் செய்தியை அறிந்தோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதனிடையே  அங்கோலாவில் இஸ்லாம் சட்ட ரீதியாக தடை செய்யப்பட்டுள்ளதோடு, பள்ளிவாயல்களை தகர்க்குமாறு அந்நாட்டு அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது என வெளியான செய்தியில் எந்தவித உண்மையுமில்லை என அந்த செய்தியை அந்நாட்டு பள்ளிவாயல் இமாம் ஒருவர் முழுமையாக மறுத்துள்ளார். வழிப்பாட்டுத் தலங்கள் அமைக்கவென நியமிக்கப்பட்ட பகுதிகளில் அல்லாமல் அதற்கு வெளியில் அமைக்கப்பட்டமையே குறித்த சில மஸ்ஜித்கள் உடைக்கப்பட்டமைக்கான காரணம் எனவும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

தலைநகர் லுவாண்டோவில் அமைந்துள்ள நூருல் இஸ்லாம் பள்ளிவாயலின் இமாம் உஸ்மான் பின் ஸைத் இதுபற்றி மேலும் கருத்து தெரிவிக்கையில்,

பள்ளிவாசல்கள் அனைத்தையும் மூடிவிட “அங்கோலா” அரசு முடிவு செய்துள்ளது என  வெளிவந்த தகவலிலும் எந்த உண்மையுமில்லை. எமது நாட்டின் கலாச்சார மற்றும் மத அலுவல்கள் அமைச்சிடம் நாம் இதுபற்றி வினவிய போது அவர்களும் அப்படி ஒன்றும் நிகழவில்லை என மறுத்துவிட்டார்கள் எனவும் குறிப்பிட்டார்.

அதே நேரத்தில் பள்ளிவாயல்களை மூடிவிமாறு எடுக்கப்பட்ட தீர்மானமானது ஹுவாம்போ நகரில் அமைந்துள்ள குறித்த ஒரு மஸ்ஜிதுக்கானதாகும். வழிபாட்டுத் தலங்கள் அமைக்கும் பிரதேசங்களில் சில மாற்றங்களை ஏற்படுத்தவே இந்த தீர்மானம் அங்கோலா அரசாங்கத்தினால் எடுக்கப்பட்டது, இது மிகவும் சொற்ப நாட்களுக்கானதாகும். மேலும் இத்தீர்மானம் பள்ளிவாயல்களை மாத்திரம் மையப்படுத்தியது அல்ல. கிறிஸ்தவ தேவாலயங்கள் உட்பட அனைத்து வழிபாட்டுத் தலங்களையும் உள்ளடக்கியதாகும் எனவும் அவர் தெளிவுபடுத்தினார்.

அங்கோலா அரசாங்கம் இஸ்லாத்திற்கு எதிரானதல்ல, மாற்றமாக இஸ்லாம் பற்றிய நல்லெண்ணம் அரசாங்கத்திடம் இருக்கிறது என நான் நம்புகிறேன்.   இந்த வருட இறுதிக்குள் இஸ்லாத்தை சட்டரீதியாக அவர்கள் அங்கீகரிப்பார்கள் எனவும் நாம் எதிர்பார்க்கிறோம் எனவும் குறிப்பிட்டார்.  அதே நேரத்தில் அரசாங்கம் பள்ளிவாயல்கள் அமைக்க தடையின்றி அனுமதி வழங்குகிறது. சுமார்  90 ஆயிரம் முஸ்லிம்கள் மாத்திரம் உள்ள அங்கோலாவில் நாடு பூராவும் 130 பள்ளிவாயல்கள் உள்ளன எனவும் அவர் அதன் போது தெளிவுபடுத்தினார்

அங்கோலா ஜனாதிபதி, கலாசார அமைச்சர் ஆகியோரின் அறிவிப்புக்களைத் தொடர்ந்துபல்வேறு மனித உரிமை ஆர்வலர்களும் அங்கோலவின் நடவடிக்கையினை கண்டித்தனர். உலகில் இஸ்லாத்தை தடை செய்த முதல் நாடாக அங்கோலாவே இருக்க முடியும் என தெற்கு ஆபிரிக்காவின் திறந்த சமூக முனைப்பு என்ற சமூக அமைப்பின் பணிப்பாளரான இல்லியாஸ் இஸ்ஸாக் தெரிவித்த நிலையில் அங்கோலா அரசின் நடவடிக்கையினை முட்டாள் தனமானது என வர்ணித்திருந்தார்.

உண்மையில் அங்கோலா அரசின் நடவடிக்கையின் பின்னணி குறித்து ஆராயும் போது, அந் நாட்டின் மனித உரிமை நிலவரம், மத சகிப்புத்தன்மை, நல்லிணக்கம் தொடர்பில் ஆரோக்கியமான பதிவினை காணமுடியவில்லை.

ஏனெனில் அங்கோலாவின் ஜனாதிபதியான ஜோஸ் எட்வர்டோ டோஸ் சந்தோஸின் 34 வருட கால ஆட்சியில் மனித உரிமை தொடர்பான பதிவுகள் மிக மோசமாக உள்ளன. மனித உரிமை தொடர்பான பல்வேறு மீறல்களை தனது கடந்தகாலத்தில் பதிவு செய்துள்ள ஜனாதிபதி ஜோஸ் எட்வர்டோ டோஸ் சந்தோஸ் அண்மைக்காலமாக பிரித்தானியாவுடன் இருக்கமான உறவினைப் பேணும் தெற்கு ஆபிரிக்க தலைவராகவும் உள்ளார்.

அங்கோலாவை பொறுத்தவரை அங்கு இதுவரை 83 மத ரீதியான அமைப்புக்கள் சட்ட ரீதியாக அங்கீகரிக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளன. அந்த 83 அமைப்புக்களும் கிறிஸ்தவ அமைப்புக்கள் மட்டுமே. கடந்த மாதம் மட்டும் அங்கோலா நீதி அமைச்சுக்கு சட்ட அந்தஸ்து கோரி 194 விண்ணப்பங்கள் அனுப்பப்பட்டிருந்தன.

அவற்றில் இஸ்லாமிய சமூக அமைப்புக்களும் உள்ளடங்குகின்றன. சட்ட ரீதியாக அனுமதியினை கொடுக்காது தவிர்த்து அமைப்பு ரீதியாக செயற்படுவதையோ அல்லது ஏற்றுக்கொள்ளப்பட்ட சமூக அமைப்பாக முஸ்லிம்கள் வாழுவதையோ அங்கோலாவின் கிறிஸ்தவம் சார் அரசு விரும்பவில்லை. அதன் வெளிப்பாடே இஸ்லாம் உள்ளிட்ட சமூக அமைப்புக்கள் அங்கு தொடர்ச்சியாக செயற்பட தடை விதிக்கப்பட காரணம் எனலாம்.

அங்கோலா அரசு முஸ்லிம்களுக்கு எதிராக செயற்படுவதாக பல்வேறு தரப்புகள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துவரும் வேளை அந்நாட்டு அரசாங்கமோ அதனை மறுத்து வருகிறது. எனினும் அந்நாட்டு சட்டதிட்டங்கள் மதம் ஒன்றை சுதந்திரமாகப் பின்பற்றுவதற்கு தடங்கல்களை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது என்பது மட்டும் இதன் மூலம் உறுதியாகின்றது.

 

இந்நிலையில் அமெரிக்க இராஜாங்க திணைக்கள அறிக்கைகளின் படி அங்கோலாவில் மத சுதந்திரம் மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

 

அங்கோலாவில் இஸ்லாத்தை சுதந்திரமாகப் பின்பற்ற முடியாதிருப்பதாக அங்கோலா முஸ்லிம் குழுக்களின் பிரதிநிதிகள் தெரிவித்ததாக 2012 இல் அமெரிக்க இராஜாங்க திணைக்களம் வெ ளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிவாசல்கள், முஸ்லிம் பாடசாலைகள் என்பன அடிக்கடி அரசாங்கத்தின் தலையீடுகளுக்குள்ளாவதாகவும் அவை மூடப்படும் நிலைமைகளை எதிர்நோக்கியுள்ளதாகவும் அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எது எப்படியோ சர்வதேச ஊடகங்களினூடாக தெரியப்படுத்தப்படும் செய்திகளை அடிப்படையாகக் கொண்டு, அங்கோலாவில் முஸ்லிம்களின் மதச் சுதந்திரத்துக்கு  ஏதோ ஒரு பிரச்சினை உள்ளதை மட்டும் உறுதியாக அனுமானிக்க முடிகிறது. எனவே மத ரீதியான அத்து மீறல்களுக்கு அங்கோலா முனையுமானால் நிச்சயம் ஒரு இருண்ட தேசமாக தன்னைத் தானே அது மாற்றிக் கொள்ள நேரிடும்.

 

 

Web Design by Srilanka Muslims Web Team