இஸ்லாம் பயங்கரவாதத்தை ஆதரிக்கவுமில்லை, சவூதி அரேபியா அதனை பரப்பவுமில்லை - Sri Lanka Muslim

இஸ்லாம் பயங்கரவாதத்தை ஆதரிக்கவுமில்லை, சவூதி அரேபியா அதனை பரப்பவுமில்லை

Contributors

(தினகரன் சிறப்புக் கட்டுரை)
கடவுளைப் பற்றி பேசியவர்கள் எல்லோரும் கடவுளாகிவிட்டார்கள். ஒன்றில் அவர்களே கடவுளாகிக் கொண்டார்கள் அல்லது அவர்கள் கடவுளாக்கப்பட்டார்கள். என்றாலும், இந்த நிலைமையிலிருந்து முழுமையாக விடுபட்டவர் ஒருவர் உலகிலேயே இருப்பாரேயானால் அவர் இஸ்லாத்தின் இறுதித் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களேயாவர். அவர் கடவுளைப் பற்றிப் பேசினார். ஆயினும் அவர் கடவுளாக்கப்படவுமில்லை. அவரைக் கடவுளாக்க அவர் இடமளிக்கவுமில்லை.
முஹம்மத் (ஸல்) அவர்கள் இறைவனைப் பற்றிப் பேசியது மாத்திரமல்லாமல் அவன் ஒருவன்தான் என்பதையும் அவனது சக்தி, பண்புகள், ஆட்சி அதிகாரம் உட்பட அவனுக்குரிய அனைத்து பண்புகளையும் அப்படியே தெளிவாக எடுத்துக்கூறி வைத்திருக்கின்றார்.

இந்த மாமனிதர் முஹம்மத் (ஸல்) அவர்களின் பெயர் 24 மணி நேரமும் உலகெங்கிலும் உச்சரிக்கப்படுகின்றது.

மனிதனின் கருத்துகளில் காலத்திற்குக் காலம் நேரத்திற்கு நேரம் மாற்றங்களும், திருத்தங்களும் திரிபுகளும் ஏற்படும். ஆனால் 14 நூற்றாண்டுகளுக்கு முன்பு இவர் எடுத்துக் கூறியவற்றில் எதுவுமே பிசகாமல் அப்படியே பாதுகாப்பாக இருக்கின்றது. அதில் திருத்தமோ, மாற்றமோ, கையாடலோ எதுவுமே இடம்பெறவில்லை. அதற்கான தேவையும் அதில் இல்லை. உலகம் இருக்கும் வரையும் அது அதே உயர் புனிதத் தன்மையுடன் இருக்கும். அதுதான் அருள் மறையாம் அல் குர்ஆன். அதன் தூதும், செய்தியும் எல்லாக் காலங்களுக்கும் பொருத்தமானவை.

சவூதி அரேபியாவின் மக்கா, மதீனாவில் வாழ்ந்த முஹம்மத் (ஸல்) அவர்கள் ஊடாக உலகிற்கு அருளப்பட்டிருக்கும் இந்த அருள் மறை அவர் கால் பதிக்காத தூர இடங்களையும் கூட சென்றடைந்திருக்கின்றது. அங்கெல்லாம் அது படிக்கப்படுகின்றது. ஆராயப்படுகின்றது. ஏனெனில் அது அறிவியலுடன் முரண்படாத, அறிவுபூர்வமான நடைமுறை சாத்தியம் மிக்கதாக இருப்பதே அதற்கான ஒரே காரணம்.

ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்த முஹம்மத் (ஸல்) அவர்கள் 21ம் நூற்றாண்டுக்குரிய செய்திகளையும் பேசியுள்ளார். அவர் உலகில் உலக ஒழுங்கில் மாபெரும் மாற்றத்திற்கும், சீர்திருத்தத்திற்கும் வித்திட்டார். அதனால் சமூக சீர்திருத்தவாதிகளின் தந்தையாக அவர் பார்க்கப்படுகிறார். ஆனால் அவரோ எழுத, வாசிக்கத் தெரியாத ஒரு மனிதர். ஆகவே இம்மாமனிதருக்கு இச்சக்தி எங்கிருந்து கிடைக்கப் பெற்றிருக்கின்றது என்பது குறித்து நாம் சிந்திக்க வேண்டும்.

முஹம்மத் (ஸல்) அவர்களின் அல் குர்ஆனிய இறைத்தூது ஐக்கிய அமெரிக்கா முதல் இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் வரை வியாபித்து இருக்கின்றது. அங்கெல்லாம் அது பின்பற்றப்படுகின்றது. அவர் இப்போது உருவத்தில் இல்லாவிட்டாலும் இருநூறு கோடி மக்களின் உள்ளங்களில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரே மாமனிதர். அவர் குறுகிய காலத்தில் அராபிய தீபகற்பத்தின் ஜனாதிபதியாக, பேரரசராக, உச்ச நீதிமன்றத் தலைமை நீதியரசராக, சமூக சீர்திருத்தவாதிகளின் தந்தையாக, நாணயம் மிக்க வணிகராக, வாய்மை மிக்க பேச்சாளராக கொடையாளியாக, போர் வீரனாக படைகளின் தளபதியாக, சிறந்த குடும்பத் தலைவராக, மனித நேயச் செம்மலாக என பன்முகப் பண்புகளும் ஒருங்கே கிடைக்கப் பெற்ற உலகம் போற்றும் அகிலத்தின் அருட்கொடையாக விளங்கினார்.

இருந்தும் உலகில் பிறக்கும் ஒவ்வொருவரதும் இம்மை மறுமை வாழ்வின் சுபீட்சத்திற்கும் விமோசனத்திற்கும் நேர்வழி காட்டக்கூடிய அருள் மறையாம் அல் – குர்ஆன் அருளப்பட்ட பூமியும் மனித நேய மாண்பாளர் முஹம்மத் (ஸல்) அவர்கள் பிறந்து வளர்ந்து வாழ்ந்த பூமியுமான சவூதி அரேபியாவை பயங்கரவாத நாடாகவும், பயங்கரவாதத்தை பரப்புகின்ற, ஏற்றுமதி செய்கின்ற நாடாகவும் இன்று கூறப்படுகின்றது. விமர்சிக்கப்படுகின்றது. குற்றஞ்சாட்டப்படுகின்றது. இது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாத குற்றச்சாட்டும், விமர்சனமுமே.

புனித அல் குர்ஆன் அருளப்பட்ட பூமியும் இறைத்தூதர் வாழ்ந்த பூமியுமான சவூதி அரேபியாவை இவ்வாறு குற்றம்சாட்டுவதையும், விமர்சிப்பதையும் இட்டு முஸ்லிம்கள் பெரிதும் மன வேதனை அடைகின்றார்கள். என்றாலும் இஸ்லாம் பயங்கரவாதத்தை ஆதரிப்பதுமில்லை. சவூதி அரேபியா அதனை ஏற்றுமதி செய்வதுமில்லை. இதனை அறிவியல் ரீதியாக தெளிவுபடுத்த வேண்டியதும். எடுத்துக்கூற வேண்டியதும் ஒவ்வொரு முஸ்லிமினதும் பொறுப்பாகும்.

சவூதி அரேபியாவை இவ்வாறு விமர்சிப்பதன் பின்னணியில் சதிகளும், சூழ்ச்சிகளும் நிறைந்து இருக்க முடியும். இதனை எவரும் மறந்துவிடலாகாது.

பயங்கரவாதம் என்ற சொல்லைக் கொண்டு முஸ்லிம்களை விமர்சிப்பதும் குற்றம் சாட்டுவதும் அமெரிக்காவினதும், இஸ்ரேலினதும் திருவிளையாடல் களே. உலகில் பலமானவர் களுக்கும், பலவீனமானவர் களுக்கும் இடையிலான போராட்டம் நடந்து கொண்டிருக்கின்றது.

இப்போராட்டத்தினால் ஆயிரக்கணக்கான அப்பாவிகள் உயிரிழந்தும், ஊனமடைந்தும் கொண்டிருக்கிறார்கள். இது மாபெரும் அநியாயமும், கொடுமையுமாகும்.

பயங்கரவாதம் என்ற சொல்லைப் பயன்படுத்தி எத்தனையோ நாடுகள் சீரழிக்கப்பட்டுள்ளன. சிதைத்துக் குட்டிச் சுவராக்கப்பட்டுள்ளன. அவற்றுக்கு ஆப்கானிஸ்தான், ஈராக் நல்ல உதாரணங்கள்.

ஆனால் பயங்கரவாதத்தை உருவாக்கியவர்கள் யார் என்பதை மீண்டுமொரு தடவை உலகம் திரும்பிப்பார்க்க வேண்டும். அதாவது, 1980 இல் ரஷ்யா ஆப்கானை ஆக்கிரமித்தது. இதற்கு எதிராக அமெரிக்கா, பாகிஸ்தானிலும், ஆப்கானிஸ்தானிலும் அரபு கல்லூரிகளில் கல்வி பெற்றுக்கொண்டிருந்தவர் களுக்குப் பயிற்சி அளித்தது. அவர்களுக்கு ஆயுதங்கள் வழங்கி முஜாஹிதீன்கள் என்ற பெயரில் போராட்டத்தில் ஈடுபடுத்தியது. இதன் விளைவாக சுமார் பத்தாண்டுகள் காலப்பகுதிக்குள் ரஷ்யா ஆப்கானை விட்டு வெளியேறியது. அதனைத் தொடர்ந்து அமெரிக்காவும், இஸ்ரேலும் ஆப்கான் மக்களை நிம்மதியாக வாழ விடவில்லை. முஜாஹிதீன்களுக்குள் பிளவை ஏற்படுத்தி அவர்களுக்குள்ளேயே மோதலை ஏற்படுத்தினார்கள். அவர்கள் ஆளுக்காள் மோதுண்டு அழிவதைப் பார்த்து ரசித்து மகிழ்ந்தார்கள்.

இதற்கிடையில் பாகிஸ்தான் அரபு கல்லூரிகளில் கற்றுக்கொண்டிருந்த மாணவர்களுக்கு மீண்டும் ஆயுதப் பயிற்சியும், ஆயுதமும் வழங்கி ‘தலிபான்கள்’ என்ற பெயரில் களத்தில் இறக்கினார்கள். அவர்கள் ஆப்கானிஸ்தானிலும், பாகிஸ்தானிலும் பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றார்கள். இவர்கள் அனைவரும் அமெரிக்காவின் முழுமையான ஆசிர்வாதத்துடன் ஆயுதப் பயிற்சியும் ஆயுதங்களும் பெற்றவர்கள். ஆனால் தாம் பாலூட்டி போஷித்து வளர்த்தவர்களையே அவர்கள் பயங்கரவாதிகள் என்கின்றனர். ஆகவே இஸ்லாத்திற்கும், முஸ்லிம்களுக்கும் எதிராக அமெரிக்காவும் இஸ்ரேலும் எவ்வளவு தூரம் சதி, சூழ்ச்சிகளில் ஈடுபட்டுள்ளது என்பது நன்கு தெளிவாகின்றது. இதனை ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

உண்மையில் ‘ஜிஹாத் என்ற சொல்லுக்கு அறப் போராட்டம் என்பதே நேரடிக் கருத்தாகும். இச்சொல்லுக்கு இஸ்லாமிய வரலாற்றில் நேர்மையான விளக்கங்கள் நிறையவே உள்ளன. முஸ்லிம் தத்துவஞானிகள் இச்சொல்லுக்கு ஆன்மீகத்தை நோக்கியே விளக்கமளித் தார்களேயொழிய அரசியலை நோக்கி அல்ல. ஆனால் இச்சொல் மாற்று சமூகங்களுக்கு எதிராகப் பயன்படுத்த வேண்டியது என்று பார்க்கும் நிலைமை புதிதாக உருவா கியுள்ளது. இந்நிலைமையை ஏற்படுத்தியதும் அமெரிக்காவும், இஸ்ரேலுமே. இதில் ஐயமில்லை.

அமெரிக்காவும், இஸ்ரேலும் தங்களது குறுகிய கால, நீண்ட கால நலன்களை அடிப்படை யாகக் கொண்டு முன்னெடுத் துவரும் சதிகளதும், சூழ்ச்சிகளதும் வெளிப்பாடுகளின் விளைவுகளை சவூதி அரேபியாவிலிருந்து வருவதாகப் பார்ப்பதும். குற்றம் சாட்டுவதும் எவ்விதத்திலும் நியாயமில்லை. அதனை ஏற்றுக்கொள்ளவும் முடியாது.

சவூதி அரேபியாவே தீவிரவாத அச்சுறுத்தலுக்கு அண்மைக்காலமாக முகம் கொடுத்து வருகின்றது. குறிப்பாக 2003 ஆம் ஆண்டு மே மாதம் 12ம் திகதி ரியாத் நகரில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் 36 பேர் உயிரிழந்ததோடு, 160 பேர் படுகாயமடைந்தனர். அதே ஆண்டு நவம்பர் மாதம் 8ம் திகதி ரியாதில் இடம்பெற்ற மற்றொரு குண்டு வெடிப்பில் 17 பேர் உயிரிழந்ததோடு 122 பேர் படுகாயமடைந்தனர். அத்தோடு 2004 ஆம் ஆண்டு மே மாதம் முதலாம் திகதி சவூதி அரேபியாவின் மேற்கு மாகாண யம்பு நகரில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுடன், 200 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

இவ்வாறு பல பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு சவூதி அரேபியா முகம் கொடுத்துள்ளது. அது எந்தளவுக்கென்றால், 1975 ஆம் ஆண்டில் மன்னர் பைசல் படுகொலை செய்யப்பட்ட பின்னரான முதலாவது பயங்கரவாதத் தாக்குதல் 2009 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 8ம் திகதி மன்னர் குடும்பத்தின் மீது மேற்கொள்ளப்பட்டது. இத்தாக்குதலில் இளவரசர் முஹம்மத் பின் நாயிப் மயிரிழையில் உயிர் தப்பினார்.

இவ்வாறு பயங்கரவாத அச்சுறுத்தலுக்கு மாத்திரமல்லாமல் பயங்கரவாத தாக்குதல்களுக்கும் முகம் கொடுத்திருக்கின்ற சவூதி அரேபியா அதனை பரப்புமா? அல்லது வேறு நாடுகளுக்கு அதனை ஏற்றுமதிதான் செய்யுமா? இல்லவே இல்லை. மாறாகப் பயங்கரவாதத்தை உள்நாட்டில் கட்டுப்படுத்துவதற்கு பலவிதமான நடவடிக்கைகளை முன்னெடுத் திருக்கும் சவூதி அரேபியா அதனை உலகலாவிய ரீதியிலும் கட்டுப்படுத்துவதற்கு முழுமை யாக ஒத்துழைப்பு நல்கி வருகின்றது.

அதேநேரம் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட நாடுகளை மீளக்கட்டியெழுப்பவும் தம்மாலான சகல உதவி, ஒத்துழைப்புகளையும் சவூதி அரேபியா வழங்கி வருகின்றது. அந்தவகையில் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட இலங்கையை மீளக்கட்டியெழுப்பவும் சவூதி அரேபியா பலவிதமான உதவிகளை வழங்கியுள்ளது.

தொடர்ந்தும் வழங்கியும் வருகின்றது. இலங்கை சவூதி அரேபியாவின் நீண்டகால நட்பு நாடு. ஜெனீவாவில் அமெரிக்கா இலங்கைக்கு எதிராக 2012 இல் பிரேரணை கொண்டு வந்த போது அமெரிக்காவின் தோழமையை விடவும் இலங்கை நட்புக்கே முன்னுரிமை அளித்து சவூதி அரேபியா செயற்பட்டது.

அங்கு இலங்கைக்கு ஆதரவாக சவூதி வாக்களித்தது. இவற்றை நாம் ஒருபோதுமே மறக்க முடியாது.

ஆகவே பிராந்திய மற்றும் உலகளாவிய அரசியல் நிலைமைகளையும் அமெரிக்கா, இஸ்ரேல் போன்ற நாடுகளின் திருவிளையாடல்களையும் கருத்தில் கொண்டு தூர நோக்கோடு செயற்பட வேண்டியது காலத்தின் அவசியத் தேவையாகும்.

Web Design by Srilanka Muslims Web Team