இஸ்லாம் பாட புத்தகங்களை நவம்பர் 15க்கு முன்னர் விநியோகிக்குமாறு கல்விஅமைச்சர் உத்தரவு! - Sri Lanka Muslim

இஸ்லாம் பாட புத்தகங்களை நவம்பர் 15க்கு முன்னர் விநியோகிக்குமாறு கல்விஅமைச்சர் உத்தரவு!

Contributors

இஸ்லாம் பாடப் புத்தகங்களை அனைத்து பாடசாலைகளுக்கும் தற்காலிகமாக வழங்குமாறும், எதிர்காலத்தில் பாடப் புத்தகத்தில் மேற்கொள்ளப்படுகின்ற எந்தவொரு திருத்தங்கள் தொடர்பிலும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவினுடைய ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளுமாறும் கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த, அமைச்சு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

பாடசாலை மாணவர்களுக்கான இஸ்லாம் பாடப் புத்தகத்தினை மீள் விநியோகம் செய்தல் தொடர்பில், நீதிக்கான மய்யத்தின் தலைவர் சட்டத்தரணி ஷஹ்பி எச்.இஸ்மாயில் தலைமையிலான குழுவினர், பல அரசியல் பிரமுகர்களுடன் தொடர்ச்சியாக சந்திப்புக்களை மேற்கொண்டு வருகின்றனர். அந்தவகையில், நேற்றைய தினம் (31) பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனை சந்தித்து, இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடினர்.

அதன் பிற்பாடு, இன்றைய தினம் (01) அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் செயலாளர் உட்பட அதன் பிரதிநிதிகளும், பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் மற்றும் சட்டத்தரணி ஷஹ்பி தலைமையிலான நீதிக்கான மய்யத்தின் உறுப்பினர்களும், கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த அவர்களை சந்தித்து, மேற்படி விடயம் தொடர்பில் தெளிவுபடுத்தினர்.

கல்வி அமைச்சருடனான சந்திப்பின் பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ரிஷாட் எம்.பி மேலும் கூறியதாவது,

“இஸ்லாம் பாடப் புத்தகங்களை இம் மாதம் 15 ஆம் திகதிக்கு முன்னர் அனைத்து பாடசாலைகளுக்கும் தற்காலிகமாக வழங்குமாறும், பாடப் புத்தகத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள் சரியா? அல்லது எவ்வாறான திருத்தங்களை செய்ய வேண்டும் என்பதை, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவினுடைய ஆலோசனைகளைப் பெற்று, அடுத்த வருடம் வழங்கப்படும் புத்தகத்தில் அதனை சேர்த்துக்கொள்ளுமாறும் கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த, உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

மேலும், எதிர்காலத்தில் இவ்வாறான விடயங்களை செயற்படுத்துகின்றபோது, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவினுடைய ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளுமாறும் கல்வி அமைச்சர் அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுத்தார்” என்றார்.

Web Design by Srilanka Muslims Web Team