இஸ்லாம் முஸ்லிம்களுக்கு மாத்திரம் உரியதல்ல, அது முழு மனித குலத்திற்கும் உரியது!!! - Sri Lanka Muslim

இஸ்லாம் முஸ்லிம்களுக்கு மாத்திரம் உரியதல்ல, அது முழு மனித குலத்திற்கும் உரியது!!!

Contributors

இஸ்லாம் முஸ்லிம்களுக்கு மாத்திரம் உரியதல்ல, அது முழு மனித குலத்திற்கும் உரியது, ரஸுலுல்லாஹ் (ஸல்) முழு மனித குலத்திற்கும் அருளாக அனுப்பப் பட்டவர், முஸ்லிம்கள் மனித குலத்திற்கு அருளாக தோற்றுவிக்கப் பட்டவர்கள்.

உலகில் எந்த மூலையில் எந்த ஒரு இனத்திற்கோ சமூகத்திற்கோ தேசத்திற்கோ அநீதி இடம் பெரும் பொழுது முஸ்லிம்களது குரல் முன்னணி வகிக்க வேண்டும், அடக்குமுறை ஆக்கிரமிப்புக்களுக்கு முஸ்லிம் உம்மத்து எதிராக நிற்க வேண்டும்.

முஸ்லிம்களது செல்வமும் செல்வாக்கும் அறமும் பொருளும் முஸ்லிம் உம்மத்தோடு மட்டும் குறுகி விட முடியாது, முஸ்லிம்களது அரசியலும் அதிகாரமும் குறுகிய இனவாத இலக்குகளோடு மட்டுப்பட்டு விட முடியாது.

முஸ்லிம்கள் இனத்தால், குலத்தால்,நிறத்தால், மொழியால், பிரதேசத்தால், தேசங்களால் ,பொருளாதார வர்க்வேறுபாடுகளால் வேற்றுமை பாராட்ட முடியாதவர்க ள்.

a3

முஸ்லிம்கள் தாம் வாழுகின்ற சூழல்களில் தனி நபர்களாகவும், குடும்பங்களாகவும்,கிராமங்களாகவும், தேசங்களாகவும், நிறுவனங்களாகவும் உயரிய மானுட விழுமியங்களை கடைப்பிடித்து அடுத்த சமூகங்களோடு சிறந்த உம்மத்திற்குரிய பண்பாடுகளோடு சமாதான சகவாழ்விற்கு முன்னோடிகளாக இருத்தல் வேண்டும்.

நன்மையை ஏவுதலும் தீமையை தடுத்தாலும் வெறும் வணக்க வழிபாடுகளுடன் ஒருபோதும் மட்டுப் படுவதில்லை, முழு தேசத்தையும் நாட்ட மக்களையும், பிரதேசத்தையும், சூழலையும், இளம் தலை முறையினரையும், சிறார்களையும்,இயற்கை வளங்களையும் பாதிக்கின்ற அனைத்து தீமைகளையும் அடுத்த சமூகத்தவரோடு இணைந்து முஸ்லிம்களும் தடுக்க முன்வர வேண்டும்; அதேபோன்று அவற்றிற்கு நன்மை பயக்கின்ற விவகாரங்களில் முஸ்லிம்களும் முன்னின்று பணியாற்ற வேண்டும்.

இஸ்லாமும் இஸ்லாமிய பிரச்சாரமும் மணித்தியாலக் கணக்கில் பேசுவதிலோ அல்லது பக்கங்களாக பாகங்களாக எழுதுவதிலோ தங்கியிருப்பதில்லை, அது முஸ்லிம்களின் வாழ்வியல் முன்மாதிரிகளிலேயே பெரிதும் தங்கியிருக்கின்றது.

இஸ்லாம், இஸ்லாமியம், முஸ்லிம் என்ற வெளிக்கள அடையாள விளம்பரங்களை விட முஸ்லிம் உம்மத்து உயரிய இஸ்லாமிய மானுட விழுமியங்களை உயிர்ப்பிப்பதில் தமது முழுக்கவனத்தையும் திருப்ப வேண்டும்.

அன்று தான் அருளின் தூது, சிறந்த உம்மத்தினூடாக மனித குலத்தை முழுமையாக சென்றடையும், அங்குதான் இந்த உம்மத்து இழந்து தவிக்கின்ற உண்மையான உயர்வும், கண்ணியமும், இருப்புக்கான , உரிமைகளுக்கான உத்தரவாதமும் இந்த உம்மத்தின் வாசல் தேடி வரும்..இன்ஷா அல்லாஹ்.

மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ்

Web Design by Srilanka Muslims Web Team