ஈமு கோழி ஏலத்துக்கு ஐகோர்ட் திடீர் தடை - Sri Lanka Muslim

ஈமு கோழி ஏலத்துக்கு ஐகோர்ட் திடீர் தடை

Contributors

ஈரோடு : ஈமு கோழிகள் ஏலத்திற்கு ஐகோர்ட் திடீர் விதித்ததையடுத்து ஏலம் ரத்து செய்யப்பட்டது. பெருந்துறையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வந்த சுசி ஈமு கோழி நிறுவனம் கோடிக்கணக்கில் முதலீட்டாளர்களிடம் பணத்தை பெற்றுக்கொண்டு மோசடியில் ஈடுபட்டது. இதையடுத்து இந்நிறுவன உரிமையாளர் குருசாமியை ஈரோடு பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

இந்நிறுவனத்திற்கு சொந்தமான 7 ஆயிரம் ஈமு கோழிகளை கால்நடைத்துறை அதிகாரிகள் பராமரித்து வந்தனர். மோசடி நிறுவனங்களின் அசையும், அசையா சொத்துக்களை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கையகப்படுத்தினர். இதனிடையே மோசடி நிறுவனங்களுக்கு சொந்தமான ஈமு கோழிகளை மாவட்ட நிர்வாகம் ஏலம் விட்டு அதன் மூலம் கிடைக்கும் பணத்தை பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க ஏற்பாடு செய்து வருகின்றது.

இந்நிலையில், சுசி ஈமு நிறுவனத்தில் வளர்க்கப்பட்டு வரும் 7 ஆயிரம் கோழிகள் நேற்று ஏலம் விடுவதற்காக கோவை டான்பிட் கோர்ட்டில் அனுமதி பெறப்பட்டிருந்தது.
கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கணேஷ் தலைமையில் ஏலம் நடத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட நிலையில் சுசி ஈமு நிறுவனத்தின் சார்பில் ஏலம் நடத்துவதற்கு ஐகோர்ட்டில் இடைக்கால தடை பெறப்பட்டது. இதனால் ஏலம் நடைபெறவில்லை.

இது தொடர்பான வழக்கு நவம்பர் 6ம் தேதி விசாரணைக்கு வர உள்ளது. அப்போது மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏலம் விட வேண்டிய அவசியம் குறித்து மனு தாக்கல் செய்யப்பட உள்ளதாக அதிகாரிகள் கூறினர்.

Web Design by Srilanka Muslims Web Team