ஈஸ்டர் தாக்குதல்; வர்த்தகர் இப்ராஹிமுக்கு 3 வருடங்களின் பின் பிணை! - Sri Lanka Muslim

ஈஸ்டர் தாக்குதல்; வர்த்தகர் இப்ராஹிமுக்கு 3 வருடங்களின் பின் பிணை!

Contributors

தகவல்களை மறைத்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்த, உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுதாரிகள் இருவரின் தந்தையான வர்த்தகர் மொஹமட் இப்ராஹிமுக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் பிணை வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 2019ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மொஹமட் யூசுப் மொஹமட் இப்ராஹிம் உள்ளிட்ட சந்தேகநபர்கள் இருவரை பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டமை தொடர்பான வழக்கு இன்று (25) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது நீதிமன்றம் இவ்வுத்தரவை வழங்கியுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தொடர்பான தாக்குதல்கள் தொடர்பில் தகவல்களை மறைத்தமைக்காக சந்தேகநபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

கோடீஸ்வர வர்த்தகரான மொஹமட் இப்ராஹிம், மக்கள் விடுதலை முன்னணியின் தேசியப்பட்டியலில் பாராளுமன்ற உறுப்பினராக பெயர் குறிக்கப்பட்டிருந்ததாக, முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்திருந்ததோடு, அது தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வர்த்தகர் மொஹமட் இப்ராஹிம், குறித்த தாக்குதல்களில் ஈடுபட்ட இரண்டு தற்கொலைத் தாக்குதல்தாரிகளான மொஹமட் இப்ராஹிம் இன்ஷாப் அஹமட், மொஹமட் இப்ராஹிம் இல்ஹாம் அஹமட் ஆகியோரின் தந்தையாவார்.

தெமட்டகொடையிலுள்ள வீடொன்றில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை தாக்குதல் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பில், குற்றப் புலனாய்வு பிரிவினரால் குறித்த சந்தேகநபர்கள், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்ததோடு, கடந்த 2020ஆம் ஆண்டு ஜனவரி 22 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தனர். அதனைனத் தொடர்ந்து தொடர்ச்சியாக விளக்கமறியலில் வைக்கப்பட்டு வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

செப்பு தொழிற்சாலை உரிமையாளரான மொஹமட் இப்ராஹிம் இன்ஷாப் அஹமட், கொழும்பு – சின்னமன் கிராண்ட் ஹோட்டலில் உணவு உண்ணும் பகுதியில் தற்கொலை குண்டுத் தாக்குதலை மேற்கொண்டிருந்தார்.

மொஹம்மட் இப்ராஹிம் இல்ஹாம் அஹமட், கொழும்பு – ஷங்ரி-லா ஹோட்டலின் உணவு உட்கொள்ளும் பகுதியில் தற்கொலைக் குண்டுத்தாக்குதலை மேற்கொண்ட இரண்டாவது தாக்குதல்தாரியாவார். ஷங்ரி-லா ஹோட்டலில் இத்தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியான மொஹம்மட் ஹாசிம் மொஹம்மட் ஸஹ்ரானும் குண்டை வெடிக்கச் செய்து உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

மொஹம்மட் இப்ராஹிம் இல்ஹாம் அஹமட்டின் மனைவி மற்றும் அவர்களது மூன்று குழந்தைகள், அன்றைய தினம் தெமட்டகொடை, மஹவில கார்டன் பகுதியில் உள்ள வீட்டை பொலிசார் மற்றும் இராணுவத்தினர் சோதனை செய்தபோது குண்டை வெடிக்கச் செய்து உயிரிழந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Web Design by Srilanka Muslims Web Team