ஈஸ்டர் தாக்குதல்; வர்த்தகர் இப்ராஹீம் ஹாஜியாரை பிணையில் விடுவிப்பதற்கு ஏதுவான காரணிகள்..! - Sri Lanka Muslim

ஈஸ்டர் தாக்குதல்; வர்த்தகர் இப்ராஹீம் ஹாஜியாரை பிணையில் விடுவிப்பதற்கு ஏதுவான காரணிகள்..!

Contributors

ஈஸ்டர் ஞாயிறு தினம் இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதல்களில், சினமன் கிராண்ட் மற்றும் ஷங்ரில்லா ஹோட்டல்களில் குண்டை வெடிக்கச் செய்த தற்கொலை குண்டுதாரிகளான சகோதரர்களின் தந்தை இப்ராஹீம் ஹாஜியார் என அறியப்படும் யூசுப் மொஹம்மட் இப்ராஹீமை பிணையில் விடுவிக்க கொழும்பு மேல் நீதிமன்றம் நேற்று (25) உத்தரவிட்டது.

கொழும்பு மேல் நீதிமன்றின் நீதிபதி நவரட்ன மாரசிங்க இதற்கான உத்தரவை பிறப்பித்தார்.

இப்ராஹீம் ஹாஜியார் என அறியப்படும் யூசுப் மொஹம்மட் இப்ராஹீம் உள்ளிட்ட மூவருக்கு எதிராக மேல் நீதிமன்றில் குற்றவியல் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இப்ராஹீம் ஹாஜியாருக்கு மேலதிகமாக அவரது மேலும் இரு புதல்வர்களே அந்த வழக்கின் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர். இந்நிலையில் இப்ராஹீம் ஹாஜியார் என அறியப்படும் யூசுப் மொஹம்மட் இப்ராஹீமுக்கு பிணையளித்த நீதிமன்றம் அவரது மகனான மொஹம்மட் இப்ராஹீம் ஹிஜாஸ் அஹமட்டையும் பிணையில் செல்ல அனுமதியளித்தது. எனினும் இளைய மகனான மொஹம்மட் இப்ராஹீம் இஸ்மாயிலை பிணையில் விடுவிக்க நீதிபதி மறுப்பு தெரிவித்தார்.

இப்ராஹீம் ஹாஜியாரையும் அவரது ஒரு மகனையும் தலா 2 இலட்சம் ரூபா பெறுமதியான ரொக்கப் பிணை, தலா 10 இலட்சம் ரூபா பெறுமதியான மூன்று சரீரப் பிணையிலும் செல்ல அனுமதித்த மேல் நீதிமன்றம், ஒவ்வொரு மாதமும் முதல், இறுதி ஞாயிறு தினங்களில் சிஐடியில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என உத்தரவிட்டது. அத்துடன் அவர்களது வெளிநாட்டு பயணங்களை தடை செய்த நீதிமன்றம் கடவுச் சீட்டை நீதிமன்றில் ஒப்படைக்கவும் பணித்தது.

பிணைகோரி முன்வைக்கப்பட்ட விடயங்களில் பிரதிவாதிகளின் உடல் நலம் மற்றும் நீண்ட நாட்களாக விளக்கமறியலிலிருந்து வருகின்றமை ஆகிய இரு விடயங்களையும் விசேட காரணிகளாக கருதி பிணையளிப்பதாக நீதிபதி அறிவித்தார். மொஹம்மட் இப்ராஹீமின் கண்ணில் மேற்கொள்ளப்பட்டுள்ள
சத்திர சிகிச்சை, ஹிஜாஸுக்கு 3 பிள்ளைகள் இருப்பது ஆகியனவும் இதன்போது கவனத்தில் கொள்ளப்பட்டதாக நீதிபதி அறிவித்தார். எனினும் 3 ஆம் பிரதிவாதி மொஹம்மட் இப்ராஹீம் இஸ்மாயிலை பிணையில் விடுவிக்க விசேட காரணிகள் இல்லை எனக் கூறி அவரை பிணையில் விடுவிக்க நீதிவான் மறுத்தார்.

பிரதிவாதிகளுக்காக ஜனாதிபதி சட்டத்தரணி அனுஜ பிரேமரத்ன மன்றில் ஆஜரானதுடன், வழக்குத் தொடுநர் சட்ட மா அதிபருக்காக பிரதி சொலிசிட்டர் ஜெனரல் லக்மினி கிரியாகம ஆஜரானார். இவ்வழக்கு மீள ஜூன் 30 ஆம் திகதி விசாரணைக்கு வரவுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் தொடர்பில் அறிந்திருந்தும் அது தொடர்பில் பாதுகாப்பு தரப்புக்கு அறிவிக்காமல் தகவல்களை மறைத்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் பிரதிவாதிகள் மீது சுமத்தப்பட்டுள்ளன.

பயங்கரவாத தடைச் சட்டம் மற்றும் தண்டனை சட்டக் கோவையின் கீழ் இந்த குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எம்.எப்.எம்.பஸீர்-

Web Design by Srilanka Muslims Web Team