'உண்டியல் வர்த்தகத்தின் பின்னணியில் ரஜாபக்ஷ குடும்பம்; மத்திய வங்கியின் புதிய ஆளுநர் தொடர்பில் வெளியான தகவல்' - துமிந்த நாகமுவ! - Sri Lanka Muslim

‘உண்டியல் வர்த்தகத்தின் பின்னணியில் ரஜாபக்ஷ குடும்பம்; மத்திய வங்கியின் புதிய ஆளுநர் தொடர்பில் வெளியான தகவல்’ – துமிந்த நாகமுவ!

Contributors

உண்டியல் பணப் பரிமாற்ற வர்த்தகத்தின் பின்னணியில் ராஜபக்ஷ குடும்பமே இருக்கின்றது எனவும், மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலும் இதன் பின்னணியில் இருப்பதாகவும் முன்னிலை சோசலிசக் கட்சியின் பிரசார செயலாளர் துமிந்த நாகமுவ தெரிவித்துள்ளார்.

சபெரும்பான்மை ஊடகம்  ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

அவர் மேலும் கூறியதாவது,

உண்டியல் வர்த்தகத்தின் பின்னணியில் ராஜபக்ச குடும்பம் உள்ளது. பசில் ராஜபக்ச பேட்டி ஒன்றில் தான் சட்டவிரோத நிதி சந்தையில் இருந்து டொலர்களை பெற்றதாக கூறினார். உலகில் எந்த அரசாங்கம் சட்டவிரோத நிதி சந்தையில் பணத்தை பெறாது என்பதுடன் அதனை ஊக்குவிக்காது.

உண்டியல் முறையை பிரதிநிதித்துவ செய்யும் வகையில் அவர் பேசினார். மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் உண்டியல் பணப் பரிமாற்றும் வர்த்தம் தொடர்பாக தளர்வான கொள்கையை கடைப்பிடித்தார்.

ஒன்றரை பில்லியன் டொலர்களே உண்டியல் பணப் பரிமாற்று வர்த்தகத்தில் புழங்குவதாக அஜித் நிவாட் கப்ரால் கூறினார். அது உண்மையல்ல, இதற்கு முன்னரும் வெளிநாடுகளில் தொழில் புரிவோரில் சுமார் 40 வீதமானோர் சட்டவிரோதமான பணப் பரிமாற்று முறை ஊடாகவே பணத்தை அனுப்பினர்.

நெருக்கடி இல்லாத காலத்திலும் உண்டியல் முறை ஊடாக நாட்டுக்கு பணம் வந்தது என்பது உத்தியோகபூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வர்த்தகத்துடன் ராஜபக்ச குடும்பமும், அவர்களின் நெருங்கிய நண்பர்களின் வலையமப்பும் சம்பந்தப்பட்டுள்ளது.

அரசாங்கத்தை பாதுகாக்க முயற்சிக்கும் வர்த்தகர்கள் இருக்கின்றனர். தமது வர்த்தகம் பாதிக்கப்படும் என்று அச்சப்படுவோர் அரசாங்கத்தை பாதுகாக்க முயற்சித்து வருகின்றனர்.

இலங்கை மத்திய வங்கியின் புதிய ஆளுநர் தொடர்பில் பாராதூரமான விடயம் ஒன்றுள்ளது என்பதை மக்களுக்கு கூறுகிறோம். இலங்கை மத்திய வங்கியின் புதிய ஆளுநர் நந்தலால் வீரசிங்க, சர்வதேச நாணய நிதியத்தின் கைப்பாவை நாம் அரசியல் திருப்புமுனையில் இருக்கின்றோம்.

நெருக்கடி சம்பந்தமான சிலர் சில விளக்கங்களை கொடுக்கின்றனர். இது பசில் ராஜபக்ச உருவாக்கிய நெருக்கடி என சிலர் கூறுகின்றனர். கோட்டாபயவை நெருக்கடி அனுப்பி விட்டு, பசிலுக்கு வழியை ஏற்படுத்த இப்படியான நெருக்கடி அவசியம் என கருதுகின்றனர்.

எனினும் அனைவரது கட்டுப்பாட்டையும் மீறி இந்த நெருக்கடி சென்றுள்ளதுடன் மக்கள் வீதியில் இறங்கியுள்ளனர். மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் உட்பட அனைத்து நியமனங்களும் சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளின் அடிப்படையில் செய்யப்படுகின்றது.

சர்வதேச நாணய நிதியத்தின் நேரடி நிபந்தனைகள் நாட்டின் பொருளாதாரம் தொடர்பில் முன்வைக்கப்படலாம்.எனினும் மறைமுக நிபந்தனையாக சிலரை சம்பந்தப்பட்ட பதவிகளுக்கு நியமிக்குமாறு கூறுவார்கள்.இவை நாட்டின் பொருளாதாரத்தில் சர்வதேச நாணய நிதியம் தலையிட கொடுக்கும்

அழுத்தங்கள். நிதியமைச்சின் செயலாளர் பதவி விலகியதற்கும் சர்வதேச நாணய நிதியத்தின் அழுத்தமே காரணம்.

அதேவேளை தற்போதைய அரசாங்கம் இந்தியாவுடன் மிகப் பெரிய அரசியல் பொருளாதார கொடுக்கல், வாங்கல்களில் இறங்கியுள்ளது. பசில் ராஜபக்ச இந்தியாவுடன் ஐந்து உடன்படிக்கையில் கையெழுத்திட்டுள்ளார்.

நாட்டின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார விடயங்களில் இந்தியாவுக்கு தலையிடும் சந்தர்ப்பம் இந்த உடன்படிக்கைகள் மூலம் கிடைக்கும். 80 ஆம் ஆண்டுகளில் இந்திய இலங்கை மீது மிகப் பெரிய அரசியல் ஆதிக்கத்தை செலுத்தி வந்தது.

இதன் முடிவாகவே இந்திய படையினர் இலங்கைக்கு வந்தனர். 2000 ஆம் ஆண்டுகளிலும் இந்தியா ஆதிக்கம் இருந்தது. குறிப்பாக 2007, 2008 ஆம் ஆண்டுகளில் சீனா பலம் பொருந்திய நாடாக மாறிய போது இலங்கை மீதான இந்தியாவின் ஆதிக்கம் படிப்படியாக பலவீனமடைந்தது.

விடுதலைப் புலிகளுடனான போரில் வெற்றி பெற முடியாமல் இருந்தமைக்கான பிரதான காரணங்களில் ஒன்று இந்தியா, ஆயுத பலத்தில் இரண்டு தரப்பையும் சமநிலையில் வைத்திருந்தது.

புலிகளுக்கும் இராணுவத்தினருக்கும் இடையிலான ஆயுத பலம் சரிசமமாக இருந்து வந்தது. சீனா இலங்கைக்கு ஆயுதங்களை வழங்கியதுடன் இலங்கைக்குள் வருவதற்கான வழியை ஏற்படுத்திக்கொண்டது.

சீனா, இலங்கைக்கு புலிகளின் ஆயுத பலத்தை மீறி செல்லும் அளவில் ஆயுதங்களை வழங்கியது. இதன் மூலம் 2009 ஆம் ஆண்டு போரை முடிவுக்கு கொண்டு வரும் பின்னணி உருவானது.

இதன் பின்னர் இந்தியாவின் இலங்கை மீதான அரசியல் ஆதிக்கம் பலவீனமடைந்தது. இந்த நிலையில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியில் இந்தியாவின் இலங்கை மீதான ஆதிக்கம் அதிகரிக்கும்.

அது என்றுமில்லாத அளவுக்கு இலங்கையின் அரசியலில் பாதிப்பை ஏற்படுத்தும். இது மிகப் பெரிய நெருக்கடியாக எதிர்காலத்தில் உருவாகும். இது தொடர்பாக அக்கறையுடன் இருக்குமாறு மக்களை கோருகிறோம்.

இலங்கையில் இந்தியாவின் தலையீடு தீவிரமாகும், சீனாவை மீறி செல்லும் ஆதிக்கத்தை இலங்கை மீது செலுத்தும் தேவை இந்தியாவுக்கு இருக்கின்றது எனவும் துமிந்த நாகமுவ தெரிவித்துள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team