உண்மை நிலையை சனல் 4 நேரில் வந்து பார்க்க வேண்டும்: கெஹலிய! - Sri Lanka Muslim

உண்மை நிலையை சனல் 4 நேரில் வந்து பார்க்க வேண்டும்: கெஹலிய!

Contributors

இந்தியா மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளையும் இலங்கை பின்பற்ற வேண்டும் அல்லது ஒரே மாதிரியான தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டும் என்ற எந்தவித அவசியமோ சம்பிரதாயமோ கிடையாது என ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார். இலங்கையின் உண்மையான நிலைமையை சனல் 4 தொலைக்காட்சியின் பணிப்பாளர் கெலம் மெக்ரே நேரடியாக வருகைதந்து பார்க்க வேண்டும் எனவும் அவர் கூறினார்.

கண்டியில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். சனல் 4 தொலைக்காட்சியின் பணிப்பாளருக்கு இந்தியா வீசா வழங்க மறுத்துள்ள அதேவேளை இலங்கை அவருக்கு வீசா வழங்குவது தொடர்பாக ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

பிரிட்டன் பிரதமர் டேவிட் கமருன் பொதுநலவாய அரச தலைவர்களின் மாநாட்டில் கலந்துகொள்ள இலங்கை வருகிறார். அவருடன் வரும் ஊடகவியலாளர்கள் குழுவிலேயே கெலம் மெக்ரேவும் வரவுள்ளதாகத் தெரியவருகிறது. எனவே, அவர் இங்கு வந்து, இலங்கையின் உண்மை நிலை என்ன என்பதை பார்க்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

இலங்கையின் தற்போதைய உண்மையான நிலைமையை சனல் 4 தொலைக்காட்சி அறிவதற்கான ஓர் அரிய சந்தர்ப்பம். அவருக்கு கிட்டியுள்ளது. எனவே அவரது விஜயத்தின் பின்னர் இலங்கை மீது எவ்வாறான சவால்கள் விடுக்கப்பட்டாலும் அதனை எதிர்கொள்ள அரசாங்கம் தயாராகவே உள்ளது.

Web Design by Srilanka Muslims Web Team