உம்றா விசா விண்ணப்பங்கள் ஏற்கும் பணி நாளை ஆரம்பம் - ஹஜ் மற்றும் உம்றாஹ் விவகார பிரதி அமைச்சர் - Sri Lanka Muslim

உம்றா விசா விண்ணப்பங்கள் ஏற்கும் பணி நாளை ஆரம்பம் – ஹஜ் மற்றும் உம்றாஹ் விவகார பிரதி அமைச்சர்

Contributors

புதிய உம்றாஹ் யாத்திரை காலத்திற்கான உம்றாஹ் விசா விண்ணப்பங்களை ஏற்கும் செயற்பாடுகள் நாளை புதன் கிழமை தொடக்கம் ஆரம்பிக்கப்படும் என சவூதி அரேபியாவின் ஹஜ் மற்றும் உம்றாஹ் விவகார பிரதி அமைச்சர் இஸ்ஸா ரொஹாஸ் குறிப் பிட்டார்.

இதன்படி உம்றாஹ் யாத்திரிகர்களின் வருகை இம்மாத இறுதி தொடக்கம் ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் புனித கஃபாவை சுற்றிய பகுதிகள் விரிவுபடுத்தப்படும் செயற்பாடுகள் தொடர்ந்து இடம்பெறுவதால் கடந்த காலங்களில் ஹஜ் மற்றும் உம்றாஹ் யாத்திரிகர்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் தொடர்ந்து நீடிக்கும் என பிரதி அமைச்சர் ரொவாஸ் குறிப்பிட்டார். புனர் நிர்மாண பணிகள் காரணமாக வெளிநாட்டு ஹஜ் யாத்திரிகர்கள் 20 வீதமாகவும் உள்நாட்டில் 50 வீதமாகவும் குறைக்கப்பட்டிருந்தது. அதேபோன்று உம்றாஹ் விசாக்காலம் ஒரு மாதத்தில் இருந்து 14 தினங்களுக்கு மட்டுப்படுத் தப்பட்டது.

எனினும் எதிர்வரும் உம்றாஹ் காலத்தில் 65 நாடுகளுக்கு மாத்திரம் விசேட சலுகை வழங்க சவூதி அரசு திட்டமிட்டுள்ளது. இதன்படி மேற்படி நாடுகளில் இருந்து உம்றாஹ் விசாவில் வருவோர் உம்றாஹ் முடிந்த பின் அவர்களது விசாவை சுற்றுலா விசாவாக மாற்றி தொடர்ந்து தங்கி இருக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

“பல நாடுகளிலும் உள்ள வெளிநாட்டு முகவர்களின் ஊடான இலத்திரனியல் பதிவுகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டு விட்டன. விசா விண்ணப்ப நடவடிக்கைகள் புதன் கிழமை (நாளை) ஆரம்பிக்கப்படும்.

கடந்த பருவத்தில் மொத்தம் 5.3 மில்லியன் உம்றாஹ் விசாக்கள் வழங்கப்பட்டன. இதே அளவான தொகை இம்முறையும் வழங்கப்படும் என எதிர்பார்க்கிறோம்” என்று ரொவாஸ் குறிப்பிட்டார்.

Web Design by Srilanka Muslims Web Team