உயிர்த்தஞாயிறு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழு முஸ்லிம் சமூகத்தின் மீது குற்றச்சாட்டுக்கள் எதையும் முன்வைக்கவில்லை - Sri Lanka Muslim

உயிர்த்தஞாயிறு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழு முஸ்லிம் சமூகத்தின் மீது குற்றச்சாட்டுக்கள் எதையும் முன்வைக்கவில்லை

Contributors

உயிர்த்தஞாயிறு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழு முஸ்லிம் சமூகத்தின் மீது குற்றச்சாட்டுக்கள் எதையும் முன்வைக்கவில்லைஉயிர்த்தஞாயிறு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழு முஸ்லிம் சமூகத்தின் மீது குற்றச்சாட்டுக்கள் எதையும் முன்வைக்கவில்லை. மாறாக மைத்திரியும் ரணிலும் ஏனைய சில உயர் அதிகாரிகளும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட வேண்டும் என சிபார்சு செய்துள்ளது. உயிர்த்தஞாயிறு சம்பவத்தை தொடர்ந்து முஸ்லிம்களை துன்புறுத்தியமைக்கு மைத்திரி முஸ்லிம் சமூகத்திடம் மன்னிப்புக் கோரி உரிய நட்டஈட்டையும் வழங்க வேண்டும்

2019 ஏப்பிரல் 21ல் இடம்பெற்ற உயிர்த்தஞாயிறு சம்பவத்துக்குப் பின் இந்த நாட்டின் முஸ்லிம் சமூகத்தின் மீது வேண்டுமென்றே கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகள், அவர்களது சொத்துக்களுக்கு இழைக்கப்பட்ட சேதங்கள் இவற்றை எல்லாம் விட பெரும்பான்மை சிங்கள மக்களின சிந்தனைகளில்; முஸ்லிம் சமூகத்துக்கு எதிராக நஞ்சு ஊட்டப்பட்டமை என சகல அநியாயங்களுக்காகவும் முன்னாள் ஜனாதிபதி முஸ்லிம் சமூகத்திடம் மன்னிப்புக் கோருவதோடு அவற்றுக்கான நட்ட ஈட்டையும் செலுத்த வேண்டும்.

உயிர்த்தஞாயிறு சம்பவம் தொடர்பாக ஆராய்ந்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில் முஸ்லிம் சமூகத்தின் மீது எந்தக் குற்றச்சாட்டும் முன்வைக்கப்படவில்லை. ஆனால் மைத்திரி, ரணில் மற்றும் சில முன்னாள உயர் அதிகாரிகள் மீது குற்றவியல் தண்டனைச் சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்பட வேண்டும் என சிபார்சு செய்துள்ளது. தேசிய தௌஹீத் ஜமாஅத் அல்லது என்டிஜே என்ற அமைப்பைச் சேர்ந்த சிலர் உயிர்த்தஞாயிறு தினத்தில் ஹோட்டல்கள் மற்றும் கிறிஸ்தவ தேவாலயங்களில் தாக்குதல் நடத்தினார்கள் என்பது பொதுவாக எல்லோரும் அறிந்த விடயமே.

இந்த என்டிஜே பிரிவினர் முஸ்லிம் சமூகத்தைப் பிரதிநிதித்துவம் செய்யும் ஒரு பிரிவினர் அல்ல என்பதும் முஸ்லிம் சமூகத்துக்கும் இந்தச் சம்பவத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதும் அரசாங்கத்துக்கு நன்கு தெரியும். 2014ம் ஆண்டிலேயே பல முஸ்லிம் அமைப்புக்களும் தனிநபர்களும் பொலிஸாருக்கு என்டிஜே அமைப்பின் செயற்பாடுகள் பற்றியும் அது மோசமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடும் என்றும் தகவல் வழங்கி இருந்தனர். சஹ்ராணையும் அவரது குழுவையும் கைது செய்யுமாறும் அவர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

சில அறிக்கைகளின் பிரகாரம் இந்திய புலனாய்வு சேவை ஏப்பிரல் மாதம் 21ம் திகதி நடக்கவுள்ள தாக்குதல் பற்றி ஏப்பிரல் 4ம் திகதியே தகவல் வழங்கி உள்ளனர். இந்தத் தாக்குதல் பற்றி அரசாங்கத்திடம் போதிய தகவல்கள் இருந்ததாகவும் அதை தடுத்து நிறுத்த போதிய கால அவகாசமும் இருந்ததாகவும் சில அமைச்சர்களே சுட்டிக்காட்டி இருந்தனர்.

2019ம் ஆண்டு மே 18ல் த ஜலண்ட் ஆங்கிலப் பத்திரிகையில் பேராசிரியர் திஸ்ஸ விதாரண எழுதிய ஒரு கட்டுரையில் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.

“ஒருங்கிணைக்கப்பட்ட உயிர்த்தஞாயிறு தாக்குதலை திட்டமிட்டு நடத்தும் அளவுக்கு ஒரு நவீன பயங்கரவாத குழுவாக தீவிரப் போக்கு ஜிஹாத் அமைப்பினர் தங்களை கட்டி எழுப்ப ஒரு வாயப்பு வழங்கப்பட்டுள்ளமை தெளிவாகின்றது. அவர்களுக்கு வெளிநாட்டில் இருந்து ஒரு நிபுணத்துவ வழிகாட்டலும் பணிப்புரைகளும் கிடைத்துள்ளமைக்கான வாய்ப்பும் உள்ளது. சிங்கள மற்றும் தமிழ் கத்தோலிக்க சமூகங்கள் மத்தியில் இருந்து முஸ்லிம்களுக்கு எதிரான ஒரு வன்முறையைத் தூண்டி விடுவதற்கான நோக்கமும் இதில் உள்ளமை தெளிவாகின்றது. கர்தினால் மல்கம் ரன்ஜித்தின் வழிகாட்டலின் கீழ் ஒரு பிரிவினரால் இதுபற்றி விரிவாக ஆராயப்பட்டும் உள்ளது. பௌத்த மற்றும் இந்து குருமார் சிலரும் இதில் பங்கேற்றுள்ளனர். 1983ல் ஐக்கிய தேசியக் கட்சியினர் என்ன செய்தார்களோ அதையே மீண்டும் இம்முறை முஸ்லிம்களுக்கு எதிராகச் செய்ய முனைந்;துள்ளமை இங்கு நன்றாகப் புலனாகின்றது.”

இதேவேளை 26 என்டிஜே உறுப்பினர்களுக்கு இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் மாதாந்தக் கொடுப்பனவு ஒன்றை செலுத்தி வந்துள்ளதாகவும் இன்னொரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களுள் சிலர்தான் உயிர்த்தஞாயிறு படுகொலைத் தாக்குதல் சம்பவத்தின் பின்னால் உள்ள முக்கிய சூத்திரதாரிகளால் பலிக்கடாக்களாகப் பயன்படுத்தப்புட்டு உள்ளனர் என்றும் நம்பப்படுகின்றது.

எவ்வாறாயினும் இந்ப் பேரழிவை தடுத்து நிறுத்துவதற்குப் பதிலாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திருப்பதிக்கு புனிதப் பயணம் மேற்கொண்டார். அங்கிருந்து குடும்பத்தோடு சிங்கப்பூருக்கு மூன்று நாள் சுற்றுலாப் பயணமும் மேற்கொண்டார். மறுபுறத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பென்தோட்டடையில் உல்லாசம் அனுபவிக்கச் சென்றார்.

மூன்று தசாப்த கால இன மோதல்களின் விளைவாக இலங்கை முஸ்லிம் சமூகம் பெரும் துன்பங்களை அனுபவித்துக் கொண்டு நாட்டையும் பாதுகாத்தது. ஆனாலும் அவர்கள் மீது 2019 ஏப்பிரல் 21 சமபவத்தை அடிப்படையாகக் கொண்டு காட்டுமிராண்டித்தனமான வன்முறைகள் கட்டவிழத்து விடப்பட்டன.

அரசாங்கம் அவசரகால விதிகளை அமுலுக்கு கொண்டு வந்தது. இஸ்லாத்தை அரக்கத்தனமாகக் காட்டும் வகையிலும் ஒவ்வொரு முஸ்லிமையும் பயங்கரவாதியாகச் சித்தரிக்கும் வகையிலும் பிரசாரங்கள் பிரகடனப்படுத்தப்பட்டன. முஸ்லிம் பள்ளிவாசல்கள், முஸ்லிம்களுக்கு சொந்தமான வீடுகள வர்த்தக நிலையங்கள்; மற்றும் ஏனைய சொத்துக்கள் என்பனவற்றில் கண்டபடி தேடுதல் நடத்த மைத்திரி தனது படையினரைப் பயன்படுத்தினார். முஸ்லிம் ஆண்களும் பெண்களும் வகைதொகையின்றி கைது செய்யப்பட்டனர். அவர்கள் தடுத்து வைக்கப்பட்டு சிலர் நீதிமன்றங்களில் ஆஜர் செய்யப்பட்டனர்.

அவசரகால நிலையைப் பயன்படுத்தி முஸ்லிம் வீடுகள் மற்றும் வர்த்தக நிலையங்கள் பல வெறுமையாக்கப்பட்டன. சமையல் கட்டில் உள்ள கத்திகள் கூட பயங்கரவாத ஆயுதங்களாகக் கருதி கைப்பற்றப்பட்டன.

சமய உணர்வுகளைத் துச்சமாக மதித்த படையினர் பள்ளிவாசல்களுக்குள் சப்பாத்துக் கால்களோடு நாய்களையும் அழைத்துக் கொண்டு பிரவேசித்தனர். புனித நோன்பு காலமான றமழான் மாதத்திலும் இது நடந்தது. உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம்களுக்கு புனிதக் குர்ஆனைத் தவிர வேறு புனிதமான எதுவும் கிடையாது. குர்ஆனைத் தொடமுன்னர் கூட முஸ்லிம்கள் தம்மை சுத்தப்படுத்திக் கொண்டு தான் தொடுவர். ஆனால் இலங்கைப் படையினரோ பள்ளிவாசல்களிலும் வீடுகளிலும் புகுந்து துண்டு துண்டாக புனித குர்ஆனை கிழித்தெறிந்து வீசிய சம்பவங்களும் இடம்பெற்றன.

முஸ்லிம் பெண்கள் தமது விருப்பப்படி இஸ்லாமிய ஆடைகள் அணிவதை மைத்திரி அரசு தடை செய்தது. முஸ்லிம் பெண்களுக்கு எதிரான அட்டூழியங்களை கட்டுப்படுத்தவும் மைத்திரி அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஒவ்வொரு முஸ்லிம் ஆணும் பெண்ணும் ஏன் சிறுவர்கள் கூட சந்தேகக் கண் கொண்டு பார்க்கப்பட்டனர். அதே சந்தேகத்தோடும் வெறுப்போடும் கசப்போடும் அவர்கள் நடத்தப்பட்டனர்.

அமெரிக்கா தலைமையிலான ஐரோப்பிய நாடுகள், இஸ்ரேலிய யுத்த வெறியர்கள், இந்தியாவின் ஆர்எஸ்எஸ் தலைமையிலான பிஜேபி அரசு என்பனவற்றால் பரப்பப்படும் இஸ்லாம் மீதான அச்சமும் வெறுப்பும் அல்லது இஸ்லாமோபோபியா இலங்கைக்குள்ளும் பிரவேசிக்க மைத்திரி இடமளித்தார்.

இதே காலப்பகுதியில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சகல மத்ரஸாக்களும் கல்வி அமைச்சின் கீழ் கொண்டு வரப்படும் என பாராளுமன்றத்தில் அறிவித்தார். முஸ்லிம் பெண்களின் திருமண வயதை 18ஆக உயர்த்தும் வகையில் முஸ்லிம் திருமண மற்றும் விவாகச் சட்டம் திருத்தப்படும் என அறிவித்தார். ஷரீஆ பல்கலைக்கழகத்துக்கு அனுமதி வழங்கப்படமாட்டாது என்றார். பள்ளிவாசல்களில் நிகழ்த்தப்படும் மார்க்க உபன்னியாசங்களின் பிரதிகள் அரசாங்கத்தக்கு வழங்கப்பட வேண்டும் என்றார். இவை எல்லாம் வழமையாக கொடுங்கோல் சர்வாதிகாரிகள் ஆளும் நாடுகளில் நடப்பவை.

இவ்வாறான அச்சம் மிக்க சூழ்நிலையில் ஜனாதிபதி மைத்திரி அர்த்தமற்ற தனக்கு சம்பந்தமே இல்லாத ஒரு மாநாட்டில் பங்கேற்க சீனாவுக்கு புறப்பட்டுச் சென்றார். இனவாத அரசியல் கட்சிகளால் போஷித்துப் பேணிப் பாதுகாக்கப்படும் கொலைகார கும்பல்களின் தயவில் முஸ்லிம்களை விட்டு விட்டுச் சென்றார்.

இரும்புக் கம்பிகள், வாள்கள் மற்றும் கூர்மையான ஆயுதங்களுடன் சுமார் 500 பேர் கொண்ட காடையர் கூட்டம் பொலிஸ் மற்றும் இராணுவத்தின் பூரண பாதுகாப்புடன் தமது கைவரிசைகளை கட்டவிழ்த்து விட்டனர். வீடுகளும் கடைகளும் வர்த்தக நிலையங்களும் பள்ளிவாசல்களும் தாராளமாக எரிக்கப்பட்டன. சுமார் 30க்கும் மேற்பட்ட முஸ்லிம் கிராமங்களில் இந்த வெறியாட்டம் இடம்பெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முஸ்லிம் லட்சாதிபதி வர்த்தகர்கள் சிலர் இரவோடு இரவாக வங்குரோத்து நிலைக்கு வந்தனர்.

2019 மே 13ல் இதே காடையர் குழுவினர் முஸ்லிம்களின் வீடுகளுக்கும், வியாபார நிலையங்களுக்கும், தொழிற்சாலைகளுக்கும் பள்ளிவாசல்களுக்கும் தீ வைத்து கொழுத்தி முஸ்லிம்களின் பொருளாதாரத்தை சின்னாபின்னமாக்கினர். இவை அனைத்தும் ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்த வேளையில் சட்டத்தையும் ஒழுங்கையும் பேண வேண்டிய பிரிவினரான பொலிஸ் மற்றும் இராணுவத்தினர் பார்த்திருக்க இரவு பகலாக இடம்பெற்றது. வடமேல் மாகாணத்தின் சிலாபம் நகரம் முதல் கம்பஹா மற்றும் குருணாகல் மாவட்டம் வரை ஊர்வலமாக வந்து இந்த அரக்கத்தனத்தை அரங்கேற்றினர்.

புனித றமழான் நோன்பு மாத காலத்தில் வீடுகளுக்குள் இருந்து நோன்பு நோற்க முடியாத வகையில் முஸ்லிம்கள் உயிருக்கு அஞ்சி காடுகளிலும் வயல் வெளிகளிலும் தஞ்சம் புகுந்தனர்.

நோன்பு நோற்ற நிலையில் இருந்த ஒரு முஸ்லிம் வெட்டியும் குத்தியும்; கொல்லப்பட்டார். மற்றொருவர் மிகக் கொடூரமான முறையில் தனது மனைவி பிள்ளைகளின் கண்ணெதிரே தாக்கப்பட்டு வீதி வீதியாக இழுத்துச் செல்லப்பட்டு கொல்லப்பட்டார். இவர்கள் இருவருமே இந்த உயிர்த்தஞாயிறு சம்பவத்தோடு எந்த வகையிலும் தொடர்பு படாத அப்பாவிகள். இந்தச் சம்பவங்களுக்கு காரணமான காடையர்கள் எவர் மீதும் சட்டம் கை வைக்கவில்லை. பெயருக்கு சிலர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர். இதில் மிகவும் கேவலமானது என்னவென்றால் இந்தச் சம்பவங்களுக்கு கண்டி திகன பகுதியில் காரணமாக இருந்த ஒரு கயவன் பொலிஸாரால் விடுவிக்கப்பட்டதும் மக்கள் அவனை பகிரங்கமாக மாலை சூடி வரவேற்று ஊர்வலமாக அழைத்துச் சென்றமையாகும்.

எம்.எஸ் பௌஸ{ல் அமீன் என்ற தச்சுத் தொழில் புரியும் 49 வயது நபர் தனது வீட்டில் தனது 16 வயது மகன் உற்பட ஏனைய குடும்பத்தவர்கள் முன்னிலையில் கழுத்து வெட்டிக் கொல்லப்பட்டார்.

நோன்புடன் இருந்த முஸ்லிம் பெண்கள் அச்சம் காரணமாக தமது சிங்கள அயலவர்களின் வீடுகளைத் தேடி ஓடினர். சில நல்ல உள்ளம் கொண்ட மக்கள் அவர்களைப் பாதுகாத்து உணவும் அளித்தனர். இன்னும் சில கொடியவர்களோ தூஷித்து துரத்தி அடித்தனர். சம்பவத்தில் காயம் அடைந்த சில முஸ்லிம்களை தமது ஆட்டோக்களில் ஏற்றி ஆஸ்பத்திரிகளுக்கு அழைத்துச் செல்லவும் சில சிங்கள சாரதிகள் மறுத்தனர்.

இந்த வன்முறைகளைத் தடுத்து நிறுத்த மைத்திரி-ரணில் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் முறையாக ஒழுங்கமைக்கப்பட்டு முன்னெடுக்கப்பட்ட ஒன்று என முன்னாள் இமைச்சர் நவின் திஸாநாயக்கவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த அசம்பாவிதங்களின் நடுவே பிரதான பிரிவு ஊடகம் இஸ்லாத்தை அரக்கத்தனம் கொண்டதாக காட்டும் வகையிலும் ஒட்டு மொத்த முஸ்லிம் சமூகத்தையும் பயங்கரவாதிகளாகக் காட்டும் வகையிலும் முழு அளவிலான பிரசாரத்தை முன்னெடுத்தது.

இந்த அசம்பாவிதங்களைத் தோற்றுவிப்பதில் பின்னயில் செயற்பட்டவர்களின் நோக்கம் முஸ்லிம்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் இடையிலான மோதல்களை உருவாக்கி அமெரிக்க, ஐரோப்பிய மற்றும் இஸ்ரேலிய யுத்த வெறியர்களின் இஸ்லாத்துக்கும் முஸ்லிம்களுக்கும் எதிரான செயற்பாட்டை இலங்கையிலும் கட்டவிழத்து விட வழியமைப்பதாகும். எவ்வாறேனும் இந்த சதித் திட்டம் பரிதாபகரமான தோல்வியையே தழுவியது. காரணம் இதை ஓரளவு புரிந்து கொண்ட கர்தினால் மல்கம் ரன்ஜித் முஸ்லிம்கள் மீது எவ்வித தாக்குதலையும் மேற்கொள்ள வேண்டாம் என தமது சமூகத்தவர்களைக் கேட்டுக் கொண்டார்.

பொலிஸார் பெயரளவில் சிலரைக் கைது செய்தனர். ஆனால் அவர்கள் ஒரு சில மணிநேரத்தில் விடுவிக்கப்பட்டனர். பொலிஸ் ஊரடங்கு என்பது இந்தக் காடையர்களுக்கு ஒரு பொருட்டே அல்ல. அவர்கள் அந்த ஊரடங்கிற்குள்ளும் சுதந்திரமாக உலா வந்தனர்.

கைது செய்யப்பட்ட முஸ்லிம்கள் சார்பில் ஆஜராக சிங்கள சட்டத்தரணிகள் மறுப்புத் தெரிவித்தனர். வைத்தியர்கள் காயமடைந்த முஸ்லிம்களுக்கும் ஏனைய முஸ்லிம் நோயாளிகளுக்கும் மருத்துவம் செய்ய மறுத்தனர். முஸ்லிம் பெண்கள் தங்களது முக்காட்டை நீக்கினால் தான் வைத்தியம் செய்வோம் என வைத்தியர்கள் அடம் பிடித்தனர். முஸ்லிம்களின் கடைகளும் பகிஷ்கரிக்கப்பட்டன. தனது அதிகார எல்லைக்கு உற்பட்ட சந்தைப் பகுதியில் முஸ்லிம் வர்த்தகர்கள் வியாபாரம் செய்யக் கூடாது என ஒரு பிரதேச சபைத் தலைவர் தடை விதித்தார். முஸ்லிம்களோடு எவ்விதமான கொடுக்கல் வாங்கலும் செய்ய வேண்டாம் என சில பௌத்த விகாரைகள் தமது பக்தர்களுக்கு அறிவுரை வழங்கின.

அன்றாட வாழ்க்கை முறையே ஆச்சரியம் மிக்கதாகவும் கேள்விக்குரியதாகவும் மாறியது. நாட்டில் முஸ்லிம்கின் அன்றாட வாழ்வின் ஒவ்வொரு படியும் மாறிப்போகும் நிலை தோன்றியது. நெருக்குதல்கள் பாரபட்சம், நன்றாக ஒழுங்கமைக்கப்பட்ட வெறுப்புப் பிரசாரம் என்பன பொது அரங்கில் புது வடிவம் பெற்றன. முஸ்லிம்களை அரக்கர்களாகக் காட்டுவதிலும் அவர்களை முற்றுகையிடப்படட ஒரு மனநிலைக்குள் தள்ளுவதிலும் அவை முனைப்புடன் செயற்பட்டன என்று ஒரு பத்தி எழுத்தாளர் குறிப்பிட்டிருந்தார். இலங்கையில் இனவாதம் ஒரு புது அர்த்தத்தைக் கண்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். எல்லாவகையிலும் முஸ்லிம்கள் இலக்கு வைக்கப்பட்டனர். பொது இடங்களில் பொது போக்குவரத்துக்களில், வாடகைப் போக்குவரத்து வாகனங்களில் ஏன் வருடக் கணக்காக தொழில் செய்த இடங்களிலும் கூட முஸ்லிம்கள் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத நெருக்குதலை எதிர் கொள்ள வேண்டி இருந்தது.

பொலிஸார் மீதும் பாதுகாப்பு படையினர் மீதும் முஸ்லிம்கள் நம்பிக்கை இழந்தனர். தங்களுக்கு அரசாங்கம் பாதுகாப்பு வழங்கும் என்ற நம்பிக்கையையும் அவர்கள் இழந்தனர்.

இந்த சம்பவங்களின் நடுவே முஸ்லிம்களை மேலும் காயப்படுத்தும் வகையில் ஜனாதிபதி சிறிசேன சிறைக்கு சென்று ஞானசார தேரரைப் பார்வையிட்டார். பின்னர் பொது மன்னிப்பின் கீழ் அவரை விடுதலையும் செய்தார். அவரும் அவரது தாயும் சந்தித்தக் காட்சிகளைக் கண்டு மகிழ்ந்தார். முஸ்லிம்களின் அளப்பரிய தியாகத்தால் தான் இந்த நாடு இன்றும் பிளவு படாமல் இருக்கின்றது என்பதை அவர்கள் மறந்து விட்டனர். ஒரு முறை பாதுகாப்புப் படைகளின் பிரதானியாக இருந்த அட்மிரல் ரவீந்திர விஜேகுணரட்ண ஒரு வைபவத்தில் பேசும் போது எங்களது படைப்பிரிவுகளில் இருந்த முஸ்லிம் படை அதிகாரிகளின் துணிச்சலான செயற்பாடுகள் காரணமாகத் தான் நாங்கள் இன்று உயிருடன் இருக்கின்றோம் என்று குறிப்பிட்டிருந்தார்.

எல்டிடியினர் தமது கட்டப்பாட்டில் இருந்த பகுதிகளில் இருந்து முஸ்லிம்களை விரட்டியடிக்க முக்கிய காரணம் அவர்கள் எல்டிடியின் கொள்கைகளுக்கு ஒத்துவரவில்லை என்பதற்காகத் தான். எனவே முஸ்லிம்களைக் காப்பாற்றும் பொறுப்பு சிங்கள மக்களுக்கு உள்ளது என்று அவர் மேலும் கூறினார்.

உயிர்த்தஞாயிறு தாக்குதலுக்கு பின்னணியில் இந்தியாவின் உளவுச் சேவையான றோ செயற்பட்டுள்ளது என்று பிபிசி யின் சிங்கள சேவை ஏற்கனவே தகவல் வெளியிட்டுள்ளது. எனவே இந்த நாட்டில் இஸ்லாத்துக்கும் முஸ்லிம்களுக்கும் எதிராக இடம்பெற்றுவரும் பூகோள ரீதியான சதியின் ஒரு அங்கமாகவே உயிர்த்தஞாயிறு சம்பவத்தை நாம் அவதானிக்க வேண்டி உள்ளது.

எவ்வாறேனும் இவ்வளவு தீங்குகளுக்கு மத்தியிலும் ஒரு சாதகமான நிலையும் ஏற்பட்டது. நடுநிலை போக்குள்ள நியாயவாத சிந்தனை கொண்ட பௌத்த பிக்குகள் பலர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தோன்றி முஸ்லிம்கள் இந்த நாட்டின் பிரிக்க முடியாத ஒரு அங்கம் என்ற கருத்தையும் அவர்கள் தமது ஆயிரம் வருடங்களுக்கு மேற்பட்ட வரலாற்றில் இந்த நாட்டுக்கு அளப்பரிய பங்களிப்புக்களை வழங்கி உள்ளனர் என்ற கருத்தையும் துணிச்சலாக முன்வைத்தனர். முஸ்லிம்கள் மத்தியில் இருந்து செயற்பட்ட ஒரு சில கூலிப்படையினருக்காக ஒட்டு மொத்த முஸ்லிம் சமூகத்தின் மீதும் குற்றம் சுமத்தக் கூடாது என்ற வாதத்தையும் அவர்கள் முன்வைத்தனர்.

95 வீதத்துக்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் ஒட்டு மொத்தமாக மைத்திரிக்கு வாக்களித்து அவரை ஜனாதிபதியாகத் தெரிவு செய்த போது முஸ்லிம்கள் எதிர்ப்பார்த்தது சமாதானத்தை மட்டுமே. ஆனால் அந்த நம்பிக்கை முற்றாகச் சிதறடிக்கப்பட்டது.

இந்நிலையில் பௌத்த சமயத்தின் சமாதானத் தூதை மக்கள் மத்தியில் பிரசாரம் செய்வதற்குப் பதிலாக முஸ்லிம்களுக்கு எதிரான பிரசாரத்தை முன்னெடுப்பதில் மிகவும் பிரபலமான அத்துரலியே ரதன தேரர் முஸ்லிம்களுக்கு எதிராகப் போராட தமிழர்கள் சிங்களவர்களோடு இணைய வேண்டும் என அழைப்பு விடுத்தார்.

இஸ்லாத்தை உருக்குலைப்பதோடு மட்டும் அன்றி எல்லா சிறுபான்மை இனத்தவர்களையும் ஒட்டு மொத்தமாக ஓரம் கட்டும் நடவடிக்கை தொடர்ந்து 2019 ஆகஸ்ட்டில் தெரிவு செய்யப்பட்ட சிங்கள பௌத்த அரசாங்கம் என வர்ணிக்கப்படும் இன்றைய அரசிலும் நீடிக்கின்றது.
லத்தீப் பாரூக்

Web Design by Srilanka Muslims Web Team