உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று 3 வருடங்கள்! - Sri Lanka Muslim

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று 3 வருடங்கள்!

Contributors

உயிர்த்த ஞாயிறு தினமான, கடந்த 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல் இடம்பெற்று இன்றுடன் 3 வருடங்கள் நிறைவடைந்துள்ளன.

குறித்த தினத்தில், கொட்டாஞ்சேனை புனித அந்தோனியார் ஆலயம், நீர்கொழும்பு புனித செபஸ்தியன் ஆலயம், மட்டக்களப்பு சீயோன் தேவாலயம் ஆகிய மூன்று தேவாலயங்கள், கொழும்பின் பிரபல ஹோட்டல்களான ஷங்ரி லா, சின்னமன் கிராண்ட், கிங்ஸ்பெரி மற்றும் தெஹிவளையிலுள்ள ட்ரொபிகல் இன் விடுதி உள்ளிட்ட நான்கு ஹோட்டல்கள் மற்றும் தெமட்டகொடையிலுள்ள வீடொன்றில் மேற்கொண்ட சோதனையின்போதான தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் உள்ளிட்ட நாட்டின் 8 இடங்களில் இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதல்கள், 9 தற்கொலை தாக்குதல்தாரிகளால் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

இத்தாக்குதல்களில் பொதுமக்கள், பாதுகாப்புப் பிரிவினர் உள்ளிட்ட 269 பேர் உயிரிழந்ததுடன் 500 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்திருந்தனர்.

குறித்த தாக்குதல் இடம்பெற்று 3 வருடங்கள் கடந்துள்ள நிலையில், இன்றையதினம் (21) பாராளுமன்றத்தில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்த அனைவரையும் நினைவுகூரும் வகையில் சபையில் ஒரு நிமிட மௌன அஞ்சலி அனுஷ்டிக்கப்பட்டது. எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ விடுத்த வேண்டுகோளுக்கமைய இவ்வாறு மௌன அஞ்சலி அனுஷ்டிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இன்றைய அமர்வில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கறுப்பு ஆடை அணிந்து வருகை தந்துள்ளனர்.

இதேவேளை, இன்றையதினம் (21) பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித்தின் தலைமையில் விசேட சமய நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதோடு, நாடு முழுவதுமுள்ள ஆலயங்களிலும் அதனுடன் இணைந்த அஞ்சலி நிகழ்வுகள், அனுஷ்டானங்கள் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன.

Web Design by Srilanka Muslims Web Team