உலகக் கிண்ண கால்பந்து பொஸ்னியா,ஸ்பெயின் தகுதி! - Sri Lanka Muslim

உலகக் கிண்ண கால்பந்து பொஸ்னியா,ஸ்பெயின் தகுதி!

Contributors

உலகக் கிண்ண கால்பந்து போட்டிக்கு பொஸ்னியா – ஹொசிகொவினா, நடப்புச் சம்பியன் ஸ்பெயின், இங்கிலாந்து உள்ளிட்ட அணிகள் தகுதி பெற்றுள்ளன.

2014 ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ணத்திற்கான கால்பந்து போட்டி பிரேசிலில் நடைபெற உள்ளது. இதில் 32 அணிகள் போட்டியிட உள்ளன. போட்டியை நடத்தும் நாடு என்ற அந்தஸ்தில் பிரேசில் நேரடியாகத் தகுதி பெற்றது. மற்ற அணிகள், தகுதிச் சுற்றுகளின் அடிப்படையில் தகுதி பெற்று வருகின்றன.

ஐரோப்பா, ஆபிரிக்கா, ஆசியா, தென் அமெரிக்கா, வட மற்றும் மத்திய அமெரிக்கா, ஓசியானா கண்டங்களில் நடைபெறும் போட்டிகளின் அடிப்படையில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அணிகள் உலகக் கிண்ணத்திற்கு தகுதி பெற்று வருகின்றன.

தகுதிச் சுற்று ஆட்டங்கள் பல்வேறு நாடுகளில் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றன. ஐரோப்பிய கண்டத்தில் இடம்பெற்றுள்ள அணிகள் குழுநிலை ஆட்டத்தின் அடிப்படையில் உலகக் கிண்ணத்திற்கு தகுதி பெற்று வருகின்றன.

செவ்வாய்க்கிழமை நடைபெற்ற உலகக் கிண்ண தகுதிச் சுற்று ஆட்டத்தில் பொஸ்னியாவும், லிதுவேனியாவும் மோதின. இந்த ஆட்டத்தில் பொஸ்னியா 1 – 0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று தனது குழுவில் முதல் இடத்தைப் பிடித்தது.

இந்த ஆட்டத்தில் பொஸ்னியாவின் இபிசெவிச் 68 ஆவது நிமிடத்தில் கோல் அடித்து அணியை உலகக் கிண்ண தகுதி பெறவைத்தார்.

இந்த வெற்றியினால் உலகக் கிண்ண போட்டிக்கு முதன் முறையாக பொஸ்னியா அணி தகுதி பெற்றது.

மற்றொரு தகுதிச் சுற்று ஆட்டத்தில் இங்கிலாந்து அணியும் போலந்து அணியும் பலப் பரீட்சை நடத்தின. இதில் இங்கிலாந்து 2 – 0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

இதன் மூலம், உலகக் கிண்ணத்திற்கு தொடர்ந்து 5ஆவது முறையாக இங்கிலாந்து தகுதி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

நடப்புச் சம்பியனான ஸ்பெயின் அணியும் உலகக் கிண்ணத்திற்கு தகுதி பெற்று விட்டது. செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தகுதிச் சுற்று ஆட்டத்தில் ஸ்பெயின் 2 – 0 என்ற கோல் கணக்கில் ஜோர்ஜியா அணியைத் தோற்கடித்தது.

இதுதவிர, மற்ற தகுதிச் சுற்று ஆட்டங்களின் அடிப்படையில் ரஷ்யா, சிலி, ஈக்வடோர், ஹொண்டுராஸ் ஆகிய அணிகளும் உலகக் கிண்ணத்திற்கு தகுதி பெற்றன. இதுவரை 22 அணிகள் உலகக் கிண்ணத்திற்கு தகுதி பெற்றுள்ளன. தகுதிச் சுற்றுகளின் அடிப்படையில் மேலும் 11 அணிகள் உலகக் கிண்ணத்திற்கு தேர்வாக உள்ளன.

Web Design by Srilanka Muslims Web Team