உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி :முதல்வர் ஜெயலலிதா தொடக்கி வைத்தார் - Sri Lanka Muslim

உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி :முதல்வர் ஜெயலலிதா தொடக்கி வைத்தார்

Contributors

உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியை, முதல்வர் ஜெயலலிதா நேற்று தொடக்கி வைத்தார். போட்டி நாளை(9ம் திகதி) தொடங்குகிறது.

உலக செஸ் சாம்பியன் பட்டத்தை, ஐந்து முறை வென்ற தமிழகத்தை சேர்ந்த விஸ்வநாதன் ஆனந்திற்கும் உலக செஸ் வீரர்கள் வரிசையில் முதலிடத்தில் உள்ள நார்வே நாட்டை சேர்ந்த மேக்னஸ் கார்ல்சனுக்கும் இடையே, நடப்பு ஆண்டு சாம்பியன் பட்டத்திற்கான போட்டி சென்னையில் நடைபெறுகிறது.

இதன் தொடக்க விழா நேற்று மாலை சென்னையில் உள்ள ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் நடந்தது. உலக செஸ் கூட்டமைப்பு தலைவர் கிர்சன் இல்யும்லினோவ் தலைமை தாங்கினார். உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியை முதல்வர் ஜெயலலிதா தொடக்கி வைத்து பேசியதாவது:

இந்தியாவின் மிகவும் பழமையான அறிவுசார் விளையாட்டான செஸ் உலக சாம்பியன்ஷிப் போட்டி முதன் முறையாக சென்னையில் நடத்தப்படுகிறது. செஸ் போட்டி எனக்கு மிகவும் பிடித்தமானது.
உலக செஸ் கூட்டமைப்பு தலைவர், 2011ல் என்னை சந்தித்து உலக சாம்பியன்ஷிப் போட்டியை சென்னையில் நடத்தும்படி கோரினார்; உடனடியாக ஒப்புக் கொண்டேன்.

இதை நடத்துவதற்காக, 29 கோடி ரூபாய் ஒதுக்கினேன்.செஸ் 1,500 ஆண்டு வரலாறைக் கொண்டது. இது இந்தியாவில், 6ம் நூற்றாண்டுக்கு முன் தோன்றியது. அதன்பின் மற்ற நாடுகளுக்கு பரவியது.தற்போது இந்தியாவில், 27 கிராண்ட் மாஸ்டர்கள் உள்ளனர்.

பள்ளிகளில், செஸ் விளையாட்டு போட்டி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கிராமப்புற மாணவர்களின் திறன் மேம்பாட்டுக்காக, செஸ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் செஸ் கிளப் தொடக்குவதற்காக, 39.47 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு, முதல்வர் ஜெயலலிதா பேசினார்.

ஆனந்துக்கு கருப்பு காய்

உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி தொடக்க விழாவில், எந்த வீரர், எந்த வண்ணக் காய்களுடன் விளையாடுவது என்பதை, முதல்வர் தேர்வு செய்தார். குலுக்கலில் அவர் முதலில் விஸ்வநாதன் ஆனந்த் படத்தையும் கருப்பு நிற காயையும் எடுத்தார்.

அடுத்து மேக்னல் கார்ல்சன் படத்தையும் வெள்ளை நிறக் காயையும் எடுத்தார் எனவே, நாளை நடைபெற உள்ள போட்டியில், ஆனந்த் கருப்பு நிற காய்களுடனும், மேக்னல் கார்ல்சன், வெள்ளை நிறக் காய்களுடனும் விளையாடுவர்.

“லக்கி’ நம்பர் ஏழு
முதல்வருக்கு ராசி எண் ஏழு என்பதால் உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி, துவக்க விழா, ஏழாம் திகதியான நேற்று நடந்தது. கலை நிகழ்ச்சியில் தமிழக அரசின் கலை மற்றும் பண்பாட்டுத் துறை சார்பில், நாதஸ்வர இன்னிசை நிகழ்ச்சி நடந்தது.

இதில் 45 நாதஸ்வரக் கலைஞர்கள் 25 தவில் கலைஞர்கள் கலந்து கொண்டனர். இவர்களின் கூட்டுத் தொகை ஏழு. வீணை காயத்ரி குழுவினரின் வீணை கச்சேரியில், 70 கலைஞர்கள் கலந்து கொண்டனர். கலை நிகழ்ச்சியில், நடிகை ஷாபனா குழுவினர் நடத்திய சதுரங்க நாட்டியம், நார்வே கலைஞர்களின் கலை நிகழ்ச்சி, பார்வையாளர்களிடம் பிரமிப்பை ஏற்படுத்தியது.

முதல்வருக்கு கெளரவ பதவி
உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி தொடக்க விழாவில், போட்டியை சிறப்பாக நடத்த உதவிய, தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு, உலக செஸ் கூட்டமைப்பு, கெளரவ உறுப்பினர் பதவி வழங்கப்பட்டது. இதற்கான சான்றிதழை, உலக செஸ் கூட்டமைப்பு தலைவர், கிர்சன் இல்யும்லினோவ் வழங்கினார்.விழாவில் உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி, சிறப்பு மலரை முதல்வர் வெளியிட்டார்.

Web Design by Srilanka Muslims Web Team