உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்றார் கார்ல்சன்! - Sri Lanka Muslim

உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்றார் கார்ல்சன்!

Contributors

சென்னையில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன் ஷிப் போட்டியில், நடப்பு சாம்பியன் விஸ்வநாத் ஆனந்தை வீழ்த்தி நார்வேயின் மாக்னஸ் கார்ல்சன் உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்றார்.

 

முன்னதாக முந்தைய 9 சுற்றுக்களின் முடிவில் கார்ல்சன் 6 புள்ளிகளுடன் முன்னிலையிலும், விஸ்வநாதன் ஆனந்த் 3 புள்ளிகளுடன் பின்தங்கிய நிலையில் இருந்தார். சாம்பியன் பட்டம் வெல்ல 6.5 புள்ளிகள் பெற வேண்டும்.

இதையடுத்து நேற்று நடைபெற்ற 10வது சுற்று உலக செஸ் சாம்பியன் ஷிப் ஆட்டம் சமனில் முடிந்ததால், நார்வேயின் மாக்னஸ் கார்ல்சன் 6.5 புள்ளிகள் பெற்று உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்றார்.

இதன்மூலம் 6.5 புள்ளிகள் பெற்ற நார்வேயின் 23 வயதான மாக்னஸ் கார்ல்சன் முதன்முறையாக உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்றார். சாம்பியன் பட்டம் வென்ற முதல் நார்வே வீரர் கார்ல்சனுக்கு 8.40 கோடி ரூபாய் பரிசு வழங்கப்படும்.

தனது வெற்றி குறித்து கார்ல்சன் கூறும்போது, ‘சாம்பியன் பட்டம் வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது. எனது நீண்ட கால உலக சாம்பியன் கனவு தற்போது நனவாகியுள்ளது.’ என்றார்.

விஸ்வநாதன் ஆனந்த் கூறும்போது, ‘சாம்பியன் பட்டம் வென்ற மாக்னஸ் கார்ல்சனுக்கு எனது வாழ்த்துக்கள். காய் நகர்த்தல்களில் தவறுகள் செய்ததால் எனது வாய்ப்பு பறிபோனது. 5வது சுற்று ஆட்டம் வெற்றி வாய்ப்பை முடிவு செய்வதாக இருந்தது. தோல்வி எனக்கு ஏமாற்றம் அளிக்கிறது. சிறிது காலம் ஓய்வெடுக்க முடிவெடுத்துள்ளேன்.’ என்று கூறினார்.

-thoothu

Web Design by Srilanka Muslims Web Team