உலக நாடுகளின் அபிவிருத்தி வேகத்தில் இலங்கை முதலிடம் - Sri Lanka Muslim

உலக நாடுகளின் அபிவிருத்தி வேகத்தில் இலங்கை முதலிடம்

Contributors

 2013ல் 7.3 வீத வளர்ச்சி,

2014ல் 7.5 வீதம் எதிர்பார்ப்பு

2011ல் 8.3, 2012ல் 6.4

உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையின் பொருளாதார அபிவிருத்தி முன்னேற்றமடைந்துள்ளதாக பிரதி நிதியமைச்சர் சரத் அமுனுகம பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

சீனாவைத் தவிர உலக நாடுகளின் அபிவிருத்தி வேகத்தில் இலங்கையே முன்னிலையில் உள்ளதாகத் தெரிவித்த அவர், 2014 ல் 7.5 வீத பொருளாதார அபிவிருத்தியை இலக்காகக் கொண்டே அரசாங்கம் செயற்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

தமது காலத்தில் நாடு பாரிய முன்னேற்றம் கண்டுள்ளதாக வீராப்புப் பேசும் ஐக்கிய தேசியக் கட்சி தம்மை நாட்டு மக்கள் 25 தடவைகள் தேர்தல் மூலம் நிராகரித்துள்ளதை உணர்ந்து பேச வேண்டும் எனவும் பிரதியமைச்சர் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று வரவு செலவுத் திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் உரையாற்றிய அமைச்சர் தமதுரையில் மேலும் தெரிவித்ததாவது :-

தமது காலத்தில் நாட்டில் வியக்கத் தகுந்த முன்னேற்றம் காணப்பட்டதாக ஐக்கிய தேசியக் கட்சியினர் தெரிவிக்கின்றனர். அது உண்மையானால் அக்கட்சி ஏன் 25 தடவைகள் தேர்தலில் தோல்வியடைந்தது? ஏன் அக்கட்சியை மக்கள் நிராகரித்தனர் என்பதற்கு அவர்கள் பதில் கூறுவார்களா?

அரசாங்கம் இம்முறை முக்கியமான விடயங்கள் எதுவோ அதற்கு மட்டும் முக்கியமளித்தே வரவு செலவுத் திட்டத்தினை சமர்ப்பித்துள்ளது. அபிவிருத்தி, பங்களிப்பு, நியாயத்தன்மை ஆகியவற்றை உள்ளடக்கியதாகவே இந்த வரவு செலவுத் திட்டம் அமைந்துள்ளது.

நாட்டின் சகல துறையினரதும் கருத்துக்களைக் கேட்டறிந்தே இந்த வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டது. அரசாங்கம் மட்டுமன்றி அரச சார்பற்ற நிறுவனங்களினதும் கருத்துக்கள் இதற்காகப் பெற்றுக்கொள்ளப்பட்டன.

கடன்கள், வேலைவாய்ப்பு, வரவு செலவு திட்டத்தின் மூலம் ஒதுக்கியுள்ள நிதி, அபிவிருத்தி முன்னேற்றங்கள் ஆகியவற்றை வைத்தே வரவு செலவுத் திட்டத்தைப் பார்க்க வேண்டும். அதைவிடுத்து ஐக்கிய தேசியக் கட்சி எதையும் பார்க்காமல் விமர்சனத்துக்கு மட்டுமே அதனை உட்படுத்துவது எந்த விதத்திலும் ஏற்க முடியாது. உலகின் பொருளாதார முன்னேற்றத்தோடு ஒப்பிடும் போது இலங்கை குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் கொண்டுள்ளது.

எமது அபிவிருத்தி முன்னேற்றத்தை நோக்கினால் 2011 ல் அது 8.3 வீதமாகவும் 2012ல் 6.4 வீதமாகவும் 2013 ல் 7.3 வீதமாகவும் உள்ளது. 2014 ல் 7.5 வீத அபிவிருத்தி வளர்ச்சியை எதிர்பார்க்கின்றோம். எமது அயல் நாடான இந்தியாவை பொறுத்தவரை அங்கு 2011 ல் 6.3, 2012 ல் 3.2, 2013 ல் 3.8 என்ற அபிவிருத்தி வேகத்தையே கொண்டுள்ளது. அவர்களின் எதிர்பார்ப்பு 2014 ல் 5.6 வீதமே. எனினும் இலங்கை 2014 ல் 7.5 வீத அபிவிருத்தி முன்னேற்றத்தை எதிர்பார்க்கிறது.

உலக நாடுகளின் விவசாயத் துறையை நோக்கும்போது எமது நாடு முன்னிலையில் உள்ளது. உலக உணவு அமைப்புக்கு நெல்லை நன்கொடையாக வழங்கும் அளவுக்கு எமது நெல் உற்பத்தி அதிகரித்துள்ளது.

எமது சேவைகள் துறையிலும் முன்னேற்றத்தையே காண முடிகிறது. சுற்றுலாத்துறையில் நாம் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறோம். 2016ல் இத்துறை மூலம் இரண்டரை பில்லியன் ரூபா வருமானத்தை நாம் எதிர்பார்க்கின்றோம். அதற்குத் தேவையான சகல நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறோம்.

வரவு செலவுத் திட்ட பற்றாக்குறையைப் பற்றிக் குறிப்பிடும் போது ஐ. தே. க. ஆட்சிக் காலத்தில் அது நூற்றுக்கு 9 வீதமாக இருந்தது. எமது அரசாங்கத்தில் கடந்த வருடத்தில் அது 6.4 வீதமாக இருந்ததுடன் இம்முறை அது 5.8 வீதமாகக் குறைந்துள்ளது. கிராமிய பொருளாதார அபிவிருத்தியை இலக்காக கொண்டே இந்த வரவு – செலவுத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இவ்வாண்டு இறுதிக்குள் கிராமிய பொருளாதாரத் துறை பாரிய அபிவிருத்தியை அடையும்.

கிராமிய பொருளாதாரம் பற்றி சிந்திக்க தேவையில்லை என்பதே ஐக்கிய தேசியக் கட்சியின் கொள்கையாக இருந்ததுடன் வெளிநாட்டு இறக்குமதியை மாத்திரமே நம்பி இருந்தனர். ஆனால் அரசாங்கம் கிராமிய பொருளாதாரத்திற்கு சிறந்த வசதிகளை பெற்றுக் கொடுத்துள்ளது. உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த 1700 பில்லியன் ஒதுக்கீடு செய்துள்ளது. வாவிகளின் புனரமைப்புக்கு 2300 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.

மக்கள் நலன் வேலைத்திட்டம், விவசாய மக்களின் நலன் போன்றவற்றுக்காக பொருளாதார அபிவிருத்தி அமைச்சுக்கு 4,500 பில்லியன் ஒதுக்கீடு செய்துள்ளோம். எனவே இந்த ஆண்டு இறுதிக்குள் கிராமிய பொருளாதார துறை பாரிய அபிவிருத்தியை அடையும். இதன் பலனை தேர்தலின் போது ஐ. தே. க. தெரிந்துகொள்ளும்.

Web Design by Srilanka Muslims Web Team