உலக புத்தக தினம் இன்று! - Sri Lanka Muslim
Contributors

உலக புத்தக தினம் ஏப்ரல் 23ஆம் திகதி கொண்டாடப்படுகிறது. ஐரோப்பாவில் வாழ்ந்த தலைசிறந்த இலக்கியவாதியும், நாடக மேதையாகக் கருதப்படுகின்றவருமான வில்லியம் ஷேக்ஸ்பியர் பிறந்ததும், இறந்ததும் இந்நாளில்தான் என்பதால் இந்த நாளை உலக புத்தக தினம் கொண்டாட தேர்ந்தெடுத்துள்ளனர்.

உலகம் முழுவதிலும் உள்ள பல்வேறு கலாசாரங்களைப் பற்றி விழிப்புணர்வு பெறுவதற்கு புத்தகம் ஒரு சிறந்த கருவியாக விளங்குகிறது. இதனால், ஷேக்ஸ்பியர் உள்ளிட்ட புகழ் பெற்ற எழுத்தாளர்களின் பிறந்த நாள் மற்றும் நினைவு நாளை போற்றும் வகையில் ஏப்ரல் 23- ஆம் திகதியை உலக புத்தக தினமாக யுனெஸ்கோ அறிவித்திருந்தது.

அனைவருக்கும் வாசிக்கும் உரிமை, அனைத்து மக்கள் வாழ்விடங்களிலும் நூலக உரிமை, உலகில் உள்ள அனைத்து அறிவுச் செல்வங்களையும் அவரவர் தாய்மொழியில் பெறுதல், தத்தமது தாய்மொழியில் இலக்கியச் செல்வங்களைப் பாதுகாத்து ஆவணப்படுத்துதல், புத்தகங்களுக்கும், வாசகர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் இடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்துதல் என்பன உள்ளிட்ட 10 கட்டளைகளை அனைத்து நாடுகளிலும் நிறைவேற்றுவதன் மூலம் புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை விரிவாக்க முடியும்.

மேற்கூறிய 10 விடயங்களையும் நிறைவேற்ற உறுதி ஏற்கும் வகையில் இந்த நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.

கடந்த கால தலைமுறைகளின் வீரியமான விழுமியங்களையும், எழுச்சி மற்றும் வீழ்ச்சி மிகுந்த காலங்களையும் எழுத்து வடிவில் கடத்தும் ஆவணங்கள் புத்தகங்கள் ஆகும். படித்துப் பாதுகாக்கப்பட வேண்டிய காலப்பெட்டகமாக புத்தகங்கள் விளங்குகின்றன. அவை காகிதத்தில் அச்சடிக்கப்பட்ட தொகுப்பு அல்ல; வரலாற்று நிகழ்வுகளையும் இன்றைய செய்திகளையும் எழுத்தின் வழியே எதிர்கால தலைமுறைக்குக் கொண்டு செல்ல பதிவுசெய்யப்பட்ட பொக்கிஷங்கள் ஆகும்.

‘துப்பாக்கியிலிருந்து வெளியேறும் தோட்டாவை விட வீரியமான ஆயுதம் புத்தகம்’ என்று கூறியுள்ளா ர் மார்ட்டின் லூதர்கிங். ஒவ்வொரு புத்தகமும் ஒரு படைப்பாளியின் எண்ணங்களையும் உணர்வுகளையும் கற்பனைகளையும் கனவுகளையும் அச்சு வடிவில் தொகுக்கப்படும் எழுத்துக் களஞ்சியம் ஆகும். விதைக்குள் ஒளிந்திருக்கும் விருட்சம் போல் சமூகம் மற்றும் தனிமனித ஒழுக்கத்துக்கான கருத்துகளைப் புத்தகங்கள் தன்னுள் புதைத்து வைத்துள்ளன.

அறிவுசார் சொத்துகளான இவற்றைப் பாதுகாக்கும் வகையிலும் அவற்றை வளர்க்கும் நோக்குடனும் யுனெஸ்கோ நிறுவனம் ஆண்டுதோறும் ஏப்ரல் 23-ம் தினத்தை உலக புத்தக தினமாகக் கொண்டாடுகிறது. உலக இலக்கியத்துக்கான ஒரு குறியீடாக விளங்கும் இந்நாள், 1995- ஆம் ஆண்டு ஸ்பெயின் நாட்டிலுள்ள கட்டலோனியாவில்தால் முதன்முதலில் கொண்டாடப்பட்டது. இந்நாளில் ஆண்களும் பெண்களும் புத்தகங்களைையும் ரோஜா மலர்களையும் ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொள்வர்.

உலகப் புத்தக தினம் என்ற ஒரு தினத்தை உருவாக்க வேண்டும் என்ற கருத்தை, சர்வதேச பதிப்பாளர் சங்கம்தான் யுனெஸ்கோவுக்கு முதன்முதலில் பரிந்துரைத்தது. புத்தக உரிமைக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்று ரஷ்யப் படைப்பாளிகள் கருதியதால், இன்றைய தினமானது உலகப் புத்தகம் தினம் மட்டுமல்லாது புத்தக உரிமை தினமாகவும் கொண்டாடப்படுகிறது.

‘புனிதமுற்று மக்கள் புதுவாழ்வு வேண்டின், புத்தகசாலை வேண்டும் நாட்டில் யாண்டும்’ என்று பாரதிதாசன் கூறியுள்ளார். நாட்டில் மட்டுமல்ல ஒவ்வொரு வீட்டிலும் ஒரு புத்தகசாலை அமைப்பது அவசியம். தேடுதல் இன்றி வாழ்க்கையில் எந்த உச்சமும் கிடைத்து விடுவதில்லை. அப்படிப்பட்ட தேடுதலின் ஆரம்பப்புள்ளியே புத்தகம்தான். புத்தக வாசிப்பு என்பது ஓடும் நதியைப் போன்றது. ஒரு புத்தகம் இன்னொரு புத்தகத்துக்கு நம்மை அழைத்துச் செல்லும். அப்படிப்பட்ட புத்தக நதியில் மூழ்கி புத்தம் புதிய சுகானுபவங்களைப் பெற அனைவரும் முன்வர வேண்டும்.

எஸ். ரவிகுமார்

Web Design by Srilanka Muslims Web Team