உள்ளூராட்சிமன்ற பெண் உறுப்பினர்கள் 1௦௦ பேர் பாராளுமன்றத்துக்கு! - Sri Lanka Muslim

உள்ளூராட்சிமன்ற பெண் உறுப்பினர்கள் 1௦௦ பேர் பாராளுமன்றத்துக்கு!

Contributors

உள்ளூராட்சிமன்றங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பெண் உறுப்பினர்கள் மற்றும் சிவில் செயற்பாட்டு தலைவிகளுக்கான விசேட விழிப்புணர்வூட்டும் செயலமர்வு அண்மையில் (12) பாராளுமன்றத்தில் இடம்பெற்றது.

அரசியலில் பெண்களின் பங்களிப்பு மற்றும் விழிப்புணர்வூட்டலை விருத்தி செய்யும் நோக்கில் பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட இந்த நிகழ்வில் எதிர்கட்சித் தலைவர் கௌரவ சஜித் பிரேமதாச கலந்துகொண்டார்.

பாராளுமன்ற பணியாட்கள் தொகுதியின் பிரதானியும் பிரதி செயலாளர் நாயகமுமான குஷானி ரோஹனதீர, சட்டவாக்க சேவைகள் மற்றும் தொடர்பாடல் (பதில்) பணிப்பாளர் ஜனகாந்த சில்வா, பாராளுமன்ற நிர்வாகப் பணிப்பாளர் ஜீ. தட்சனாராணி, படைக்கல சேவிதர் நரேந்திர பர்னாந்து, பஃவ்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி, பாராளுமன்ற ஊடக முகாமையாளர் நிம்மி ஹாதியல்தெனிய மற்றும் பொதுச் சேவைகள் முகாமையாளர் புத்தினி ராமநாயக்க ஆகியோர் இதில் வளவாளர்களாக கலந்துகொண்டனர்.

ஜனநாயக ஆட்சிமுறையில் பெண்களின் வகிபங்கு, சட்டவாக்கம் உள்ளிட்ட பாராளுமன்ற அலுவல்கள், நிலையியற் கட்டளைகள், பாராளுமன்ற உறுப்பினர்களின் பணிகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் விழிப்புணர்வு இடம்பெற்றதுடன் சிங்களம் மற்றும் தமிழ் ஆகிய இரண்டு மொழிகளிலும் நிகழ்வுகள் இடம்பெற்றன.
அதற்கு மேலதிகமாக, பாராளுமன்றத்தை பார்வையிடுவதற்கான சுற்றுலாவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

தேசிய ஜனநாயக நிறுவனம் (National Democratic Institute/NDI) அனுசரணையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், பஃவ்ரல் அமைப்பும் ஒருங்கிணைப்பில் பங்களிப்பு வழங்கியிருந்தது.

Web Design by Srilanka Muslims Web Team