ஊழியர் சேமலாப நிதியத்தில் அரசாங்கம் கைவைக்கப் போகிறதா? - Sri Lanka Muslim

ஊழியர் சேமலாப நிதியத்தில் அரசாங்கம் கைவைக்கப் போகிறதா?

Contributors

ஊழியர் சேமலாப நிதியத்தை, அரசாங்கம் சூறையாடப் போவதாக, குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அரசாங்கம், தற்போது எதிர்நோக்கி இருக்கும் பொருளாதார நெருக்கடியின் அளவைக் கருத்தில் கொள்ளும் போது, இவ்வாறு சந்தேகம் எழுவது நியாயமே!

மஹிந்த ராஜபக்‌ஷவின் அரசாங்கம், 2011ஆம் ஆண்டும் அந்நிதியை, திறைசேரியின் கட்டுப்பாட்டின் கீழ்கொண்டு வர முயற்சித்ததை நினைக்கும் போது, இந்தச் சந்தேகம் வலுக்கிறது. அன்று நாடெங்கிலும் தனியார்துறை ஊழியர்கள், அரசாங்கத்தின் திட்டத்துக்கு எதிராக நடத்திய போராட்டத்தால், அரசாங்கம் தனது முயற்சியைக் கைவிட நேர்ந்தது.

அவ்வாறு இருக்க, அதே ஆட்சியாளர்கள் மீண்டும் அந்நிதியில் இருந்து, பாரியதொரு வரியை அறவிடும் வகையில், ஒரு சட்டமூலத்தை வரைந்துள்ளனர். கடந்த ஏழாம் திகதி வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்றின் மூலமே, அச்சட்ட மூலம் முன்வைக்கப்பட்டு இருக்கிறது. அது நேரடியாகவே சேமலாப நிதியைக் குறிவைக்காவிட்டாலும், அச்சட்ட மூலம் திருத்தமின்றி நிறைவேற்றப்பட்டு அமலாக்கப்பட்டால், அந்நிதியே மிகவும் கூடுதலாகப் பாதிக்கப்படும்.

உத்தேச சட்டத்தின்படி, 2020-2021ஆம் ஆண்டு 2,000 கோடி ரூபாய்க்கு மேல் இலாபம் அடைந்துள்ள தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள், அந்த இலாப வருமானத்தில் 25 சதவீதத்தை வரியாகத் திறைசேரிக்குச்  செலுத்த வேண்டும். இது, ஒரு முறை மட்டுமே அறவிடப்படும் வரியாகும். அதாவது, வருடாவருடம் அறவிடப்படும் வரி அல்ல! எனவே, மேலோட்டமாகப் பார்க்கும் போது, ஊழியர் சேமலாப நிதியத்துக்கு இந்தச் சட்டத்தால் எவ்வித பாதிப்பும் இல்லைப் போல் தான் தெரிகிறது.

ஆனால், இச்சட்ட மூலத்தின் இறுதியில் வரும் சில சொற்களுக்கு, அர்த்தம் வழங்கப்பட்டுள்ளது. அவற்றில் தான் சிக்கல் இருக்கிறது. அந்த வரைவிலக்கணத்தின் படி, நிறுவனம் (company) என்றால், 2017ஆம் ஆண்டு 24ஆம் இலக்க உள்நாட்டு இறைவரிச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஸ்தாபனங்களாகும். எனவே, இது எவர் எவரை பாதிக்கப் போகிறது என்பதைப் பார்க்க, 2017ஆம் ஆண்டு உள்நாட்டு இறைவரிச் சட்டத்தை புரட்டிப் பார்க்க வேண்டும்.

சேமலாப நிதியங்களும் நிறுவனங்கள் என்பதற்குள் அடங்குகின்றன என்று, அந்த இறைவரிச் சட்டத்தின் வரைவிலக்கணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, புதிய சட்ட மூலத்தின்படி ஊழியர் சேமலாப நிதியம், ஊழியர் நம்பிக்கை நிதியம், மற்றும் அது போன்ற சேமலாப நிதியங்களும் நிறுவனங்கள் (company) என்றே கருதப்படுகின்றன.
அதாவது, உத்தேச சட்டத்தின் கீழ் ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர்  நம்பிக்கை நிதியம் ஆகியவற்றின் இலாபத்தில் இருந்தும் 25 சதவீத மேலதிக வரி செலுத்தப்பட வேண்டும்.

எனவேதான் தெழிற்சங்கங்களும் எதிர்க்கட்சிகளும், இந்தச் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டால் ஊழியர் சேமலாப நிதியம், ஊழியர் நம்பிக்கை நிதியம் ஆகியவை பாதிக்கப்படப் போவதாகக் கூறுகின்றன. அது உண்மைதான்.

ஆனால், ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான கடந்த அரசாங்கத்தின் காலத்திலேயே, 2017ஆம் ஆண்டு இறைவரிச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. அதைச் சுட்டிக் காட்டும் ஆளும் கட்சித் தரப்பினர், தாம் ஊழியர் சேமலாப நிதியத்தை குறிவைக்கவில்லை என்பதைப் போல், கடந்த அரசாங்கத்தின் காலத்தில், கம்பனி என்பதற்குள் சேமலாப நிதியங்களையும் உள்ளடக்கியதாலேயே புதிய சட்டத்தால், ஊழியர் சேமலாப நிதியமும் ஊழியர் நம்பிக்கை நிதியமும் பாதிக்கப்படப் போகின்றன என்று கூறுகின்றனர்.
காரணம் அதுவாக இருந்தால், அதாவது ஊழியர் சேமலாப நிதியத்தில் கைவைக்கும் நோக்கம் அரசாங்கத்திடம் இல்லாவிட்டால், அதற்கு அமையவே சட்டம் வரையப்பட வேண்டும். ஆனால், அரசாங்கம் அவ்வாறு செய்யவில்லை.

இந்தச் சட்ட மூலம் நிறைவேற்றப்பட்டால், அதன் கீழ் அரசாங்கம் பெறும் மிகப் பெரிய வருமானம், ஊழியர் சேமலாப நிதியத்தின் இலாபத்தின் மீது விதிக்கப்படும் வரியேயாகும். ஏனெனில், நாட்டில் உள்ள மிகப் பெரும் நிதியம் ஊழியர் சேமலாப நிதியமாகும். அதில், சுமார் 1,300 பில்லியன் (ஒரு இலட்சத்து முப்பதாயிரம் கோடி) ரூபாய் இருக்கிறது. இந்தச் சட்டத்தால் அரசாங்கத்துக்குக் கிடைக்கப் போகும் மிகப்பெரும் வரித் தொகை, எங்கிருந்து கிடைக்கப் போகிறது என்பதையாவது தெரியாமல், திறைசேரி அதிகாரிகள் இந்தச் சட்டமூலத்தை தயாரித்தார்கள் என்று நாம் நம்ப வேண்டுமா?

உத்தேச சட்டத்தால் ஊழியர் சேமலாப நிதியம், ஊழியர் நம்பிக்கை நிதியம் ஆகியவை பாதிக்கப்படாது என நிதி அமைச்சர் பசில் ராஜபக்‌ஷ, திங்கட்கிழமை (14) அமைச்சரவையில் கூறியதாகச் செய்திகள் கூறுகின்றன. அது, தனியார்துறை ஊழியர்கள் ஆறுதல் அடையும் செய்தியாகும்.

ஆனால், இந்தச் சட்டத்திலிருந்து அந்த இரண்டு நிதியங்களுக்கும் விலக்கு அளிப்பது எவ்வாறு என்பதை, அவர் கூறியதாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்படவில்லை. எனவே, சட்டப்படி அவ்வாறு விலக்களிக்கப்படாவிட்டால், வெறும் வாய்மூல உத்தரவாதங்களால், இந்த இரண்டு நிதியங்களுக்கும் ஏற்படப் போகும் பாதிப்பை தடுக்க முடியாது.

இப்போது, பல தொழிற்சங்கங்கள் இந்தச் சட்டமூலத்தை வாபஸ் பெறுமாறு கோரி, ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடத் தயாராகின்றன. 2011ஆம் ஆண்டு ஊழியர் சேமலாப நிதியத்தைப் பாதுகாப்பதில் முக்கிய பங்காற்றிய மக்கள் விடுதலை முன்னணியின் கீழ் இயங்கும் தொழிற்சங்கங்கள் இவற்றில் முக்கியமானவையாகும்.

அன்று அத்தொழிற்சங்கங்கள் நடத்திய போராட்டமொன்றின் போது, கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தைச் சேர்ந்த ரொஷேன் சானக்க என்ற இளைஞர் பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

உண்மையிலேயே, அரசாங்கம் ஊழியர் சேமலாப நிதியத்தை கருத்தில் கொண்டு, இந்தச் சட்டமூலத்தை தயாரிக்கவில்லை என்றும் அரசாங்கம் அந்நிதியத்தின் வருமானத்தை சூறையாட நினைக்கவே இல்லை என்றும் அரச தலைவர்கள் கூறுவதாக இருந்தால், தற்போது எழுந்துள்ள சர்ச்சையை மிக எளிதில் தீர்க்கலாம்.

அதாவது, தற்போது சமர்ப்பித்துள்ள வர்த்தமானி அறிவித்தலை வாபஸ் பெற்று, ஊழியர் சேமலாப நிதியத்துக்கும் ஊழியர் நம்பிக்கை நிதியத்துக்கும் விலக்களிக்கும் வகையிலான வாசகமொன்றையும் சேர்த்து அச்சட்ட மூலத்தை மீண்டும் வர்த்தமானியில் பிரசுரிக்கலாம். அல்லது, சட்டமூலம் நாடாளுமன்றத்தில் குழுநிலையில் விவாதிக்கப்படும் போது, அதற்குத் திருத்தம் ஒன்றைக் கொண்டு வரலாம்.

எனினும், அரசாங்கம் குழுநிலை விவாதத்தின் போது அவ்வாறானதொரு திருத்தத்தைக் கொண்டு வரும் என்பதற்கான உத்தரவாதம் என்ன? கொண்டு வந்தாலும் கொண்டு வரும் திருத்தம் எவ்வாறானது? எதையும் நிறைவேற்றிக் கொள்வதற்கான பெரும்பான்மை பலம், அரசாங்கத்திடம் இருப்பதால் எதிர்க்கட்சிகள் அவ்வாறான உத்தரவாதத்தை ஏற்குமா என்பது சந்தேகமே.

அரசாங்கம் முன்வைத்துள்ள ‘ஒரு இலட்சம் வேலைகள்’ என்ற வேலைத்திட்டத்துக்கு பணம் திரட்டுவதற்காகவே, இவ்வாறு ஊழியர் சேமலாப நிதியத்தில் கைவைக்க அரசாங்கம் முற்பட்டுள்ளது என்று எதிர்க்கட்சிகள் கூறுகின்றன. அந்தத் திட்டமானது பொருளாதார அபிவிருத்தியை நோக்கமாகக் கொண்டதன்றி, அரசியல் நோக்கம் கொண்டது என்றும் அக்கட்சிகள் கூறுகின்றன. அது உண்மையே!

அந்த வேலைத்திட்டத்தின் கீழ், எங்கெங்கு என்னென்ன வேலைகள் மேற்கொள்ளப்படப் போகின்றன என்பது ஒருவருக்கும் தெரியாது. நாட்டு அபிவிருத்திக்கான குறிப்பிட்ட வேலைகளை அடையாளம் கண்டு, அவற்றை நடைமுறைப்படுத்துவதாக இருந்தால் அதனை ஏற்றுக் கொள்ளலாம். அவை ஒரு இலட்சமாக இருக்கும் என்று கூற முடியாது. அது குறையலாம், கூடலாம். முன்னரே, வேலைகளின் எண்ணிக்கையை தீர்மானிப்பதாக இருந்தால், குறிப்பிட்ட பொருளாதார இலக்கொன்று இல்லாத வேலைத்திட்டம் இதுவாகும்.

எனவேதான், எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை கருத்தில் கொண்டு, ஆளும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர்களின் பெயரில், பிரதேச ரீதியாக ஏதாவது வேலைகளைச் செய்து, அந்தத் தேர்தலின் போது அவர்களை வெல்லச் செய்வதே, இந்த வேலைத்திட்டத்தின் நோக்கமாகும் என எதிர்க்கட்சிகள் கூறுகின்றன. அத்தோடு, அந்த வேட்பாளர்கள் தம்மிடம் வரும் பணத்தில் ஒரு பகுதியை சுருட்டிக் கொள்ளவும் கூடும்.

பொதுஜன பெரமுன இதற்கு முன்னரும் தேர்தலை நோக்கமாகக் கொண்டு, இது போன்று செயற்பட்டுள்ளது. 2019ஆம் ஆண்டு, ஜனாதிபதி தேர்தலை அடுத்து பொதுத் தேர்தலைக் கருத்திற்கொண்டு அரசாங்கம், மக்கள் எதிர்பார்க்காத வகையில் பல வரிச் சலுகைகளை வழங்கியது. அதன் மூலம் வருடத்துக்கு 65,000 கோடி ரூபாயை திறைசேரி இழந்து வருவதாக மத்திய வங்கியின் முன்னாள் பிரதி ஆளுநர் ஒருவர் கூறியிருந்தார்.
அதாவது, அரசாங்கம் அந்த நடவடிக்கையின் மூலம், கடந்த இரண்டு ஆண்டுகளில் 130,000 கோடி ரூபாயை இழந்துள்ளது. அதனை இழக்காவிட்டால் அரசாங்கம் இன்று இந்தளவு பாரிய நிதி நெருக்கடியை எதிர்நோக்கத் தேவையில்லை.

ஊழியர் சேமலாப நிதியமானது குறிப்பாக, தனியார்துறை ஊழியர்கள் தமது இறுதிக் காலகட்டத்தில் வாழ்க்கையின் அத்தியாவசிய தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதற்காக, 1958ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட ஒன்றாகும். இடதுசாரி தொழிற்சங்கங்கள் நீண்டகாலமாக நடத்தி வந்த போராட்டங்களின் பயனாகவே அப்போதைய அரசாங்கம் அந்நிதியத்தை ஸ்தாபித்தது. அதில் கைவைப்பதாக இருந்தால், அது மிகப் பெரும் கொடுமையாகும்.

எம்.எஸ்.எம். ஐயூப்

Web Design by Srilanka Muslims Web Team