எகிப்த்தில் போராட்டங்களை கட்டுப்படுத்த புதிய சட்டம் அறிமுகம் - Sri Lanka Muslim

எகிப்த்தில் போராட்டங்களை கட்டுப்படுத்த புதிய சட்டம் அறிமுகம்

Contributors

எகிப்தில் கடந்த 2011 ஆம் ஆண்டில் அதிபர் ஹோஸ்னி முபாரக்கின் வீழ்ச்சிக்குப் பின்னர் அந்நாட்டு அரசியலில் தன்னை நிலை நிறுத்திக் கொண்டவர் முகமது மோர்சி.

அதன்பின் 2012 ஆம் ஆண்டுத் தேர்தலில் வெற்றி பெற்று எகிப்தின் அதிபரான முகமது மோர்சி, முபாரக்கின் அரசியல் கட்டமைப்புகளிலிருந்து மக்களைக் காப்பாற்றுவதாகக் கூறிக்கொண்டு தன்னிடம் வரம்பற்ற அதிகாரங்களை வைத்துக் கொண்டார்.

இந்த அதிகாரங்கள் நீதித்துறையின் மேற்பார்வை அல்லது பரிசீலனை இல்லாமல் சட்டம் இயற்றும் சக்தியை அவருக்கு அளித்தது. அத்துடன் பத்திரிகையாளர்களும், வன்முறையற்ற ஆர்ப்பாட்டக்காரர்களும் தாக்கப்பட்டனர். இதனால் ஆயிரக்கணக்கான எதிர்ப்பாளர்கள் வீதிக்கு வந்து போராட்டம் நடத்தினர்.

தொடர் போராட்டங்களின் விளைவாக கடந்த ஜூலை மாதம் 3 ஆம் திகதி எகிப்து ராணுவத்தால் அவர் பதவியிலிருந்து விலக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டார். எகிப்து தலைமை நீதிபதியை தற்காலிக அதிபராக்கி அவரது தலைமையில் ஒரு இடைக்கால அரசாங்கம் அமைக்கப்பட்டது.

அவர் தற்காலிக அதிபராக பதவி வகித்தாலும் உண்மையான அதிகாரங்கள் அனைதும் ராணுவத்திடமே உள்ளது. பதவி இறக்கம் செய்யப்பட்ட முகமது மோர்சி யாருக்கும் தெரியாமல் ரகசிய இடத்தில் காவலில் வைக்கப்பட்டுள்ளார். அவரது ஆதரவு இயக்கமான இஸ்லாமிய சகோதரத்துவம் தடை செய்யப்பட்டுள்ளது. மூன்று மாதங்களுக்கு மேலாகியும் மோர்சியின் ஆதரவாளர்களுக்கும், அரசுத் தரப்புகளுக்கும் இடையிலான மோதல்கள் குறைந்தபாடில்லை.

கடந்த டிசம்பர் மாதம் 5ஆம் தேதி அவரது மாளிகைக்கு வெளியே நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில் குறைந்தது பத்துக்கும் மேற்பட்ட எதிர்ப்பாளர்கள் கொல்லப்பட்டதாகவும் அது குறித்த விசாரணை நடத்தப்படும் என்றும் நீதிமன்றம் அறிவித்தது. மோர்சியுடன் மேலும் 14 பிரதிவாதிகள் இந்த விசாரணையை எதிர்கொள்கின்றனர்.

மோர்சியின் ஆதரவாளர்களும் எதிர்ப்பாளர்களும் அவ்வப்போது முன்னறிவிப்பு ஏதுமின்றி திடீர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.இருதரப்பினருக்கும் இடையில் மோதல்கள் வெடித்து உயிர்கள் பலியாவதும் சர்வசகஜமாகி விட்டது.

இந்நிலையில்,போராட்டங்களை கட்டுப்படுத்தும் புதிய சட்டம் ஒன்றினை தற்காலிக அதிபர் தலைமையிலான இடைக்கால அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சட்டத்தின்படி,போராட்டங்களை நடத்த முன் அனுமதி பெற வேண்டும்.அரசு புதிதாக விதிக்கவுள்ள கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு போராட்டங்களை நடத வேண்டும். மீறுவோருக்கு கடுமையான அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Web Design by Srilanka Muslims Web Team