எங்கள் 7 பேரில் இருவருக்கு அமைச்சரவை அமைச்சு பதவிகளும் மேலும் இருவருக்கு இராஜாங்க அமைச்சு பதவிகளும் தருவதாகக் கூறினார்கள்! - இஷாக் ரஹ்மான் - Sri Lanka Muslim

எங்கள் 7 பேரில் இருவருக்கு அமைச்சரவை அமைச்சு பதவிகளும் மேலும் இருவருக்கு இராஜாங்க அமைச்சு பதவிகளும் தருவதாகக் கூறினார்கள்! – இஷாக் ரஹ்மான்

Contributors

(ஏ.எச்.சித்தீக் காரியப்பர்)

எங்கள் ஏழு பேரில் இருவருக்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுப் பதவிகளையும் மேலும் இருவருக்கு இராஜாங்க அமைச்சுப் பதவிகளையும் தருவதாக அரசாங்க உயர்மட்டத்திலிருந்து எங்களுக்கு தெரிவிக்கப்பட்டு தம்முடன் இணைந்து கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டபோதிலும் நாங்கள் அனைவரும் அதனை முற்றாக நிராகரித்திருந்தோம்.

அமைச்சுப் பதவிகள் மற்றும் அரசாங்கத்தின் சுகபோகங்களை விட மக்களின் இன்றைய நிலைமை தொடர்பிலேயே நாம் அதிக கவனம் செலுத்துகிறோம் என அநுராதபுர மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான இஷாக் ரஹ்மான் தெரிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினரான ஹாபிஸ் நஸீர் அஹமட் அமைச்சராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளமை தொடர்பில் இஷாக் ரஹ்மானை மெட்ரோ நியூஸ் தொடர்பு கொண்டு கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் எமக்கு மேலும் கூறுகையில், ஹாபிஸ் நஸீர் அஹமட் அமைச்சராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டமை தொடர்பில் நான் எந்தக் கருத்தையும் இங்கு தெரிவிக்க விரும்பவில்லை. ஆனால், நாங்கள் ஏழு பேரும் எந்த அமைச்சுப் பொறுப்புகளையும் ஏற்பதில்லை என்றே முன்னர் தீர்மானித்திருந்தோம்.

மேலும், இப்போது எழுந்துள்ள இவ்வாறான நிலைமையில் ஏனையோர் தொடர்பில் என்னால் எந்தக் கருத்துகளையும் தெரிவிக்க முடியாத நிலையில் உள்ளேன்.

ஆனால், எனது தீர்மானத்தில் எந்த மாற்றமும் இல்லை. எதிர்காலத்தில் கூட எந்த அமைச்சுப் பொறுப்பையும் நான் ஏற்கப் போவதில்லை என்பதனை உறுதிபட தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த நாட்டு மக்கள் இன்று எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள், அவர்களது வலிகளை நான் நன்கு உணர்ந்துள்ளேன். இதன் காரணமாக நான் மக்கள் பக்கமே என்றும் இருப்பேன்.

காலிமுகத் திடலில் இளைஞர்கள் முன்னெடுக்கும் பேராட்டத்தையும் தான் ஆதரிக்கிறேன் என்றும் அவர் மெட்ரோ நியூஸுக்கு தெரிவித்தார்.

Web Design by Srilanka Muslims Web Team