எனது கை கடிகாரத்தின் விலையே 6 இலட்சத்தைத் தாண்டும் - அசாத் ஸாலி - Sri Lanka Muslim

எனது கை கடிகாரத்தின் விலையே 6 இலட்சத்தைத் தாண்டும் – அசாத் ஸாலி

Contributors

நாட்டின் சிறந்த முஸ்லிம் தலைமைத்துவத்தினை தடுப்பதற்கும் தனிப்பட்ட விரோதத்தினை பழி தீர்த்துக் கொள்ளவுமே என்மீதான பொய்யான குற்றச்சாட்டுக்களை சுமத்துகின்றனர். முடிந்தால் நீதிமன்றத்தில் என்மீதான குற்றச்சாட்டுக்களை நிருபித்துக்காட்டட்டும் என தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும் மத்திய மாகாண சபை உறுப்பினருமான அசாத் ஸாலி தெரிவித்தார்.

எனது கை கடிகாரத்தின் விலையே 6 இலட்சத்தைத் தாண்டும். இந்நிலையில் 6 இலட்சம் ரூபா நிதிமோசடி என்மீது சுமத்தப்பட்டிருப்பதானது வேடிக்கையாகவுள்ளது எனவும் அவர் கூறுகிறார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

என் மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட முடிந்திருந்தால் என்னை எப்போதோ கைதுசெய்திருப்பார்கள். ஆனால், என்மீது சுமத்தப்பட்டிருக்கும் ஒன்பது குற்றச்சாட்டுக்களுக்கான ஆதாரங்கள் எவரிடமும் இல்லை.

என்மீதான தனிப்பட்ட விரோதங்களை மனதில் வைத்துக்கொண்டு அரசியல் ரீதியாக என்னை பழிவாங்க முடியாது. நான் யார் என்பதை இலங்கை மட்டுமல்ல சர்வதேச நாடுகளும் அறிந்துள்ளன. என்மீதான பொய்யான குற்றச்சாட்டுக்களின் காரணத்தினாலேயே கனேடிய வெளிவிகார அமைச்சரும் இலங்கைக்கான விஜயத்தினை தவிர்த்திருக்கின்றார்.

இன்று எனது நேர்மையும் உண்மைத் தன்மையும் மக்களுக்கு தெரிந்ததனாலேயே 55 ஆயிரம் வாக்குகளை என்னால் மாகாண சபைத் தேர்தலில் பெறமுடிந்தது. இவ்வாறு மக்கள் பலத்துடனும் சர்வதேச ஆதரவுடனும் நான் இருக்கும் போது இங்குள்ள எவராலும் என்னை அசைக்க முடியாது.

என்மீதும் எனது சகோதரி மீதும் சுமத்தப்பட்டிருக்கும் நிதி மோசடி குற்றச்சாட்டுக்கள் அபாடன்டமானது 2010ஆம் ஆண்டு தேர்தலின் போது நிதி கப்பம் கோரியதாக தற்போது வழக்குத் தாக்கல் செய்துள்ளனர். எனது கைக்கடிகாரத்தின் பெறுமதியே 6 இலட்சத்தையும் தாண்டும். இந்த நிலையில் இவ்வாறு என்மீது பொய்க்குற்றம் சுமத்தி என்னையும் எனது பெயரையும் களங்கப்படுத்த நினைக்கின்றனர்.

நான் கொழும்பு பிரதி மேயராக இருந்த காலத்தில் இருந்து இன்றுவரை எனது பின்னணியினை தேடிப்பார்க்க வேண்டும். இதில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நான் மோசடியில் ஈடுபட்டதாக நிரூபிக்க முடியாது. இலங்கையில் பொலிஸ் மற்றும் நீதித்துறை சுயாதீனமாக செயற்படாத வரையில் அப்பாவி மக்களுக்கு நீதியும் நியாயமும் கிடைக்காது என்றார்-TC

Web Design by Srilanka Muslims Web Team