என்னிடம் உறுதியளித்தபடி சிராஸ் மேயர் பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் - Sri Lanka Muslim

என்னிடம் உறுதியளித்தபடி சிராஸ் மேயர் பதவியை இராஜினாமா செய்ய வேண்டும்

Contributors

செயிட் ஆஷிப்:

சுழற்சி முறை இணக்கப்பாட்டின் பிரகாரம் கல்முனை மேயர் பதவியிலிருந்து சிராஸ் மீராசாஹிப் இராஜினாமா செய்ய வேண்டும் என்கின்ற கட்சியின் தீர்மானத்தில் எவ்வித மாற்றமும் இருக்காது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் உறுதியாகத் தெரிவித்துள்ளார்.

அதேவேளை முஸ்லிம் காங்கிரஸின் தலைமைத்துவம் பிரதேசவாதங்களுக்கு ஒருபோதும் அஞ்சி- அடிபணிந்து தனது நிலைப்பாட்டில் இருந்து பின்வாங்க மாட்டாது என்றும் அவர் கடுந்தொனியில் குறிப்பிட்டுள்ளார்.

கல்முனை மாநகர சபை ஆளும் முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர்களுடனான அவசர சந்திப்பு இன்று வியாழக்கிழமை நாடாளுமன்ற கட்டிட தொகுதியில் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமையில் இடம்பெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

கல்முனை மேயர் சிராஸ் மீராசாஹிப் இந்த சந்திப்பில் கலந்து கொள்ளாமல் பகிஷ்கரிப்பு செய்திருந்தார். அங்கு அமைச்சர் ரவூப் ஹக்கீம் மேலும் தெரிவித்ததாவது; “என்னிடம் உறுதியளித்தபடி தலைமைத்துவத்திற்கு கட்டுப்பட்டு சிராஸ் மீராசாஹிப் மேயர் பதவியை இராஜினாமா செய்வார் என நான் நம்புகின்றேன். இதன் மூலம் கட்சியிலும் ஆதரவாளர்கள் மத்தியிலும் தனக்கிருக்கும் செல்வாக்கை சிராஸ் இன்னும் அதிகரித்துக் கொள்ள முடியும்.

மேயர் பதவியை இராஜினாமா செய்வது தொடர்பில் இறுதி முடிவை அறிவிப்பதற்கு மேயர் சிராஸ் ஒரு வார கால அவகாசம் கோரியுள்ளார். அதுவரை அனைவரும் பொறுமையாக இருக்க வேண்டும். ஊடகங்களில் வெளிவருகின்ற செய்திகளை வைத்துக் கொண்டு இங்கு எதையும் பேச முடியாது. கட்சியின் தீர்மானத்தில் அனைவரும் உறுதியாக இருப்பதே அவசியம்.

நிச்சயம் அவர் ராஜினாமா செய்தாக வேண்டும். அதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. அவர் ராஜினாமா செய்யா விட்டால் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பதை கட்சி பார்த்துக் கொள்ளும்.

கல்முனை மாநகர சபை உறுப்பினர்கள் அனைவரும் தலைமைத்துவத்திற்கு கட்டுப்பட்டு கட்சியின் தீர்மானத்தை அமுல்படுத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்” என்று அமைச்சர் ஹக்கீம் கேட்டுக் கொண்டார்.

கல்முனை மேயர் பதவியிலிருந்து சிராஸ் மீராசாஹிப் இராஜினாமா செய்ய வேண்டும் என்கின்ற கட்சியின் தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கு கட்சித் தலைமைத்துவத்திற்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம் என்று கல்முனை மாநகர சபை மு.கா. உறுப்பினர்கள் இதன்போது உறுதியளித்தனர்.

இச்சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ரீ.ஹசன் அலி, பைசால் காசீம், எம்.எஸ்.தௌபீக் ஆகியோரும் கலந்து கொண்டனர். கல்முனையை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எச்.எம்.ஹரீஸ் இதில் பங்கு பற்றவில்லை.

கல்முனை மாநகர சபை பிரதி மேயர் நிசாம் காரியப்பர், உறுப்பினர்களான பிர்தௌஸ், பஷீர், நிசார்தீன், பரக்கத்துல்லாஹ், முஸ்தபா, உமர் அலி, அமீர் ஆகியோர் பங்குபற்றி தமது கருத்துகளை தெரிவித்தனர்.

உறுப்பினர்கள் ஏ.எம்.றகீப் மற்றும் எம்.சாலிதீன் ஆகியோர் சமூகமளிக்க முடியாமைக்கான காரணத்தை அறிவித்து இச்சந்திப்பில் கலந்து கொள்ளவில்லை என்று உறுப்பினர் ஒருவர் மெட்ரோ மிரருக்கு தெரிவித்தார்.

Web Design by Srilanka Muslims Web Team