எமக்கு அவசியம் பொதுவேட்பாளரா? பொருத்தமான வேட்பாளரா? - Sri Lanka Muslim

எமக்கு அவசியம் பொதுவேட்பாளரா? பொருத்தமான வேட்பாளரா?

Contributors

-அஹ்மத் ஜம்ஷாத் (அல் அஸ்ஹரி BA,Hons ) Cairo,Egypt-

இலங்கையில் மட்டும் அல்ல எந்த ஒரு நாட்டிலும் எந்த ஒரு தனிமனிதனோ கட்சியோ ஆட்சியில் கால் ஊன்றிய நிலையில் அதிகார துஸ்பிரயோகத்தில் ஈடுபடுவது என்பது அரசியல் கலாசாரமாக ஆகிவிட்டது.இந்த துஸ்பிரயோக ஊழல்களை மறைக்க இவர்கள் சிறுபான்மையினர் மீதோ அப்பாவிகள் மீதோ வன்முறையை தூண்டி தம்மீது உள்ள கரைகளை துடைக்க முற்படுவர்.

பலமான எதிர்க்கட்சி இல்லாமல் இருப்பது இவர்களுக்கு இன்னும் சுதந்திரமான ஆர்தலான நிலையாக அமைந்துவிடுகிறது.எனவே இலங்கை ஜனாதிபதி தேர்தலை பொறுத்தவரை எதிர்கட்சிகள் ஒன்று சேர்ந்து பொதுவான வேட்பாளர் ஒருவரை தெரிவு செய்வது என்பதை தாண்டி பொருத்தமான வேட்பாளரை தெரிவு செய்வதே பொருத்தமாக இருக்கும்.

இலங்கையில் அடுத்த ஜனாதபதி தேர்தலுக்கான கட்டங்களில் ஆட்டம் ஆயத்தம் ஆகிய நிலையில் எதிர்கட்சியின் பொதுவேட்பாளராக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா அம்மையார் முன்மொழியப்பட்டதாக தகவல்கள் கசிகின்றன.இது ஆளும்கட்சிக்கு பலமான போட்டியாக அமையும் என்பதோடு ஆளும்கட்சி உட்பட பல அரசியல் தளங்களில் முடுக்கிவிடப்பட்ட மர்மமுடிச்சுக்கள் அவிழ்க்கப்பட ஏதுவாக அமையும் என்பதை உணர முடிகிறது.

ஆளும் தரப்பு ஜனாதிபதி வேட்பாளரரோடு ஒப்பிடும்போது  இதுவரை தமது ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட ரணிலோ பொன்சேகாவோ பலமான அரசியல் பின்னணியை கொண்டவர்கள் அல்ல என்பதை ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும்.அந்த வரிசையில் ஆழமான அரசியல் செல்வாக்கு குடும்ப பின்னணி கொண்ட சந்திரிகா அம்மையார் பலமான போட்டியாக ஆளும் கட்சிக்கு இருப்பார் என்பதை மறுக்க முடியாது.இந்த இரு முனை போட்டி முன்னைய தேர்தல் முடிவுகள் போன்று அல்லாமல் வித்தியாசமான முடிவை ஏற்படுத்தி நிற்கும் என்பதை யூகிக்க முடிகிறது.

அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை நிரந்தர எதிரியும் இல்லை என்ற பொது வாய்ப்பாட்டில் இருந்து இலங்கை அரசியலில் ஏற்பட இருக்கும் மாற்றம் மாபெரும் புரட்சியை உந்துதலாக முன்வைத்தே ஆரம்பிக்கும் என்பதை ஆளும் கட்சியின் பொது எதிர்தரப்பின் சமிக்கைகள் சொல்லி நிற்கின்றனர்.

மேல்மாகாணம் எப்போதும் தேர்தல் காலங்களில் ஒரேவிதமான காலநிலையை அறிவித்துகொண்டே இருப்பதால் தெற்கில் ஏகப்பட்ட ஆதரவை எதிர்பார்க்கும் அரசுக்கு சந்திரிக்கா,சஜித்,கரு,ரணில்,பொன்சேகா கூட்டணியில் சுதந்திரக்கட்சியில் ஏற்பட இருக்கும் திடீர் பிளவுகளும் சந்திரிக்காவின் அரசியல் பிரவேசத்தில் பல உடன்பாடான பிரசவங்களை உண்டுபண்ணும் நிலை இல்லாமல் இல்லை.

வடக்கும் கிழக்கும் கைகோர்த்து ஒரே இலக்கை சுட்டும் நேரம் பாரிய அரசியல் மாற்றம் ஒன்று நிகழும் என்பதை கடந்தகால சிரும்பான்மையினர் மீதான அத்துமீர்கல்கள் சம்பவமும் அதற்கு அரசு மேற்கொண்ட பொடுபோக்கு தனமும் எடுத்துக்காட்டுகளாகும்.

வடக்கும் அதுசார்ந்த அரசியலும் ஒருபோதும் ஆளும்கட்சியை ஆதரிக்கபோவதில்லை என்பதை இருபெரும்கட்சிகளும் அறிந்திருக்கும்.கிழக்கில் முஸ்லிம்களை பிரதிநித்தித்துவம் செய்யும் கட்சி மிகவும் நிதானமாக இதில் காய்நகர்த்தும் என்பதை தற்போதைய அரசியல் நிலவரம் சொல்லி நிற்கிறது.

எதிர்கட்சியின் பொதுவேட்பாளர் அறுதியிட்டு தெரிவிக்கப்பட்டால் பல பேரம் பேசல் கலாசாரத்துக்குள் அரசியல்வாதிகள் உள்வாங்கப்படும் நிலை உருவாகும்.இதில் மிகப்பெரும் துரும்புச்சீட்டாக பயன்படுத்தப்படும் தரப்பு சிறுபான்மை சமூகமாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

அடுத்த தேர்தல் நாட்களில் முஸ்லிம்களின் பொதுவான உணர்வுகளுக்கு சில முட்டுகட்டைகள் வரும்.அவர்கள் உணர்வுகள் பதவிகள் மூலமோ சில கண்கொள்ளா காட்சிகள் மூலமோ திசைமாற்றப்படும்.

இலங்கை முஸ்லிம்களை பிரநிதித்துவம் செய்யும் ஜமிய்யதுள் உலமா பல அழுத்தங்களுக்கு உட்படும் என்பது தெளிவு.இந்நேரத்தில் ஜமிய்யதுள் உளமா வழக்கம் போல பொதுவான அறிக்கை ஒன்றை வெளியிட்டு நடுநிலை காக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

இனவாத அரசியலை சகிக்க முடியாத முஸ்லிம்கள் தாம் அசைபோட்டுகொண்டிருந்த வெறுப்பு உணர்வுகளுக்கு தீர்வு என்பது மாற்றத்தில் உள்ளது என்பதை அறிவார்கள்.அவர்களை பிரநிதித்துவம் செய்யும் சில முஸ்லிம் அரசியல்வாதிகளின் சந்தர்ப்ப விசையில் அவர்களில் சிலர் விழுந்துவிடுவர் என்பதும் திண்ணம்.

இலங்கயின் வடக்கு கிழக்கு மேற்கு தெற்கு ஆகிய நான்கு திசையில் இருந்துவரும் அசைவுகள் ஆளும்கட்சியின் வெற்றியில் சந்தேகத்தை ஏற்படுத்தும் நிலையில் இரு தரப்பும் தமிழர்கள் முஸ்லிம்கள் கொண்ட சிறுபான்மை உதவியை நாடும் என்பதையும் மறுக்க முடியாது.வடக்கும் வடக்கு சார்ந்த கிழக்கும் ஆளும்கட்சிக்கு கைகொடுக்க போவதில்லை என்பதை அரசு அறிந்தாலும் அதற்கு பக்கபலமாக இருக்கும் முஸ்லிம்கள் அரசுக்கு எதிராக நிட்காதவண்ணம் தனது நகர்வை அரசு முடுக்கிவிடும்.

தமிழ்-முஸ்லிம் கூட்டணியின் ஆதரவே அடுத்த அரசியல் மாற்றத்தை நிர்ணயிக்க ஏதுவாக அமையும் என்பதை அரசு அறிந்தே இருக்கும்.எதிர்கட்சியின் பலம் பலயீனம் அறிந்தே முஸ்லிம்கள் பேரம்பேசுதலை முன்னெடுக்க வேண்டும்.

முஸ்லிம் சிங்கள ஓட்டுகளை பொருக்கி கொள்ள அமைச்சரவை கலைக்கப்படும்.திடீர் பாராளுமன்ற தேர்தல் ஒன்று அறிவிக்கப்படும்.பேரம் பேசலுக்கான அமர்வுகளாக தேர்தல் பிரகடனம் மாற்றப்படும்.வழக்கம் போல் முஸ்லிம் அமைச்சர்கள் பலர் நிபந்தனை அற்ற ஆதரவை கொடுக்கும் கட்டாய நிலை ஏற்படும்.

புதிய அமைச்சரவையில் எச்சரிக்கை மணியாக பல புதிய முகங்கள் முன்மொழியப்பட்டு அந்த நிலையில் சிரேஷ்ட அமைச்சர்கள் நிபந்தனை அற்ற அரச ஆதரவு வழியில் புதிய அமைச்சரவையில் உள்வாங்கப்படுவார்கள்.நன்றிக்கடனுக்காக ஜனாதிபதி தேர்தலுக்கு தமது ஆதரவை முஸ்லிம் அமைச்சர்கள் கொடுக்க நேரிடும்.

எது எப்படியோ அடுத்த ஜனாதிபதி தேர்தலில் ஆளும் கட்சி வேட்பாளருக்கு எதிராக எதிர்கட்சியின் பொதுவேட்பாளர் யார் என்பதை உறுதியாக அறிந்து அவ்வேட்பாளர் மூலம் ஆளும் கட்சியில் ஏற்பட இருக்கும் அதிரடி மாற்றங்கள் உறுதியான பின்பே முஸ்லிம்கள் தமது பேரம்பேசல்களில் அதிகம் வெளிப்படையாக இருக்க வேண்டும் என்பது சிறுபான்மை மக்களுக்கு பொருத்தமாக இருக்கும் என்பதையே உணர முடிகிறது.

எதிர்கட்சியின் பொதுவேட்பாளர் தேர்தலில் வெற்றிபெறுகிறாரோ இல்லையோ அவரது பலமான போட்டி ஆளும் கட்சியின் அடித்தளத்தில் சிறு அதிர்வை ஏற்படுத்தும் என்பதை மறுப்பதற்கு இல்லை.

Web Design by Srilanka Muslims Web Team