எம்.ஐ.எம். முஹியத்தீன் மறைந்தும் பேசப்படும் ஆளுமையாக மக்கள் மனதில் வாழ்வார்..! - Sri Lanka Muslim

எம்.ஐ.எம். முஹியத்தீன் மறைந்தும் பேசப்படும் ஆளுமையாக மக்கள் மனதில் வாழ்வார்..!

Contributors

மாளிகைக்காடு நிருபர்

சுனாமி இழப்புகள் தொடர்பாக தகவல்கள் திரட்டி, ஆய்வு செய்து அதைப் பதிவு செய்தவர் எனும் பெருமைக் குரியவாராக மாத்திரமின்றி யுத்தகால இழப்புகளை ஆவணப்படுத்தியதுடன் நிலத் தொடர்பற்ற முஸ்லிம் மாகாணக் கோரிக்கையின் பிதாமகனாக திகழ்ந்த ஆராய்ச்சியாளர், பன்னூலாசிரியர், புள்ளி விபரவியலாளர், ஆவணக் காப்பாளர் என்ற பன்முக அடையாளங்களோடு சோர்வின்றி இயங்கி வந்த எம்.ஐ.எம். முஹியத்தீன் காலமானார் எனும் செய்தி இலங்கை வரலாற்றினதும், ஆராய்ச்சிகளினதும் தொய்வை ஆரம்பித்துள்ளதாக நோக்குகிறோம் என அல்- மீஸான் பௌண்டஷன், ஸ்ரீலங்கா விடுத்துள்ள அனுதாப செய்தியில் குறிப்பிட்டுள்ளனர்.

அந்த அனுதாப செய்தியில் மேலும், முஸ்லிம் ஐக்கிய விடுதலை முன்னணி எனும் அரசியல் கட்சியை நிறுவி, அதன் செயலாளர் நாயகமாக இருந்து சளைக்காமல் செயற்பட்டார். கிழக்கிலங்கை முஸ்லிம் முன்னணியின் ஸ்தாபகர். முஸ்லிம் செய்தி பத்திரிகையின் ஆசிரியர். என்ற பல்வேறு தளங்களில் இயங்கிய அவர் தொடரான சமூக சேவைகளில் ஈடுபாடு கொண்டவர். தன் சொந்த நிதியைச் செலவிட்டு பல பெறுமதியான நூல்களையும் ஆவணங்களையும் அச்சிட்டு இலக்கிய உலகுக்கு தந்தவராக உள்ளார். முன்னாள் அமைச்சர் பதியுதீன் மஹ்மூத் தலைமையில், தமிழீழ விடுதலை புலிகளோடு சென்னையில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டவர் என்பதெல்லாம் அவரின் ஆளுமையின் வெளிப்பாடாகவே பார்க்கவேண்டியுள்ளது.

தென்கிழக்கின் அக்கரைப்பற்றைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் தன் வீட்டையே ஒரு ஆவணக் காப்பகமாக ஒழுங்கமைத்திருந்தார். என்பதையெல்லாம் அறிகின்ற போது இந்த சமூகத்தின் மீதும் இலங்கை தேசத்தின் மீதும் அவருக்கிருந்த பற்றையும் எழுத்துக்களின் மீது அவருக்கிருந்த காதலையும் அறிய முடிகிறது. ஆராய்ச்சியாளர், பன்னூலாசிரியர், புள்ளிவிபரவியலாளர், ஆவணக் காப்பாளர் என்ற பன்முக அடையாளங்களோடு வாழ்ந்து மறைந்த அவர் மறைந்தும் பேசப்படும் சிலரில் முக்கிய இடத்தை பெறுவார் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Web Design by Srilanka Muslims Web Team