எல்லையில் உச்சகட்ட பதற்றத்தால் வீடுகளில் முடங்கினர் மக்கள்... - Sri Lanka Muslim

எல்லையில் உச்சகட்ட பதற்றத்தால் வீடுகளில் முடங்கினர் மக்கள்…

Contributors

ஜம்மு-காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் நடத்திய பீரங்கி தாக்குதலில் 2 குழந்தைகள் உட்பட 8 பேர் காயமடைந்தனர்.

இதனால் அங்கு உச்சகட்ட பதற்றம் ஏற்பட்டுள்ளது. சண்டை நிறுத்த ஒப்பந்தத்தை தொடர்ந்து மீறி வரும் பாகிஸ்தான், புதன் கிழமை இரவு முதல் காஷ்மீர் எல்லையில் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. நேற்று மாலை கஞ்சாக், அக்னூர் பகுதிகளிலுள்ள ராணுவ முகாம்கள் மற்றும் குடியிருப்புகள் மீது பாகிஸ்தானால் நடத்தப்பட்ட பீரங்கி தாக்குதலில், ஏராளமான வீடுகள் சேதமடைந்தன.

இதில் 2 குழந்தைகள் உட்பட அப்பாவி மக்கள் 8 பேர் படுகாயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து பாகிஸ்தான் ராணுவத்திற்கு இந்திய வீரர்கள் உரிய பதிலடி கொடுத்ததாக ராணுவ தரப்பு தகவல் தெரிவித்துள்ளது. இரு தரப்பிலும் கடுமையான துப்பாக்கிச் சண்டை நடப்பதால் எல்லையோர கிராமங்களில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. மக்கள் அச்சத்துடன் வீடுகளில் முடங்கியுள்ளனர். சமீப காலமாக பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தொடர் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது.

பின்னர் உள்துறை அமைச்சர் ஷிண்டே பாகிஸ்தான் ராணுவத்திற்கு உரிய பதிலடி கொடுக்கப்படும் என்று எச்சரித்தார். இதனையடுத்து எல்லை பாதுகாப்பு படையினர் கூடுதலாக பதற்றம் நிறைந்த பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த நிலையில் பாகிஸ்தான் ராணுவம் இது வரை இல்லாத அளவுக்கு பீரங்கி தாக்குதலை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Web Design by Srilanka Muslims Web Team