ஐ.தே.கவை எங்களிடம் ஒப்படையுங்கள்; ரணில் விக்கிரமசிங்கஅவர் கேட்கும் எந்த உதவியையும் வழங்க தயார் - Sri Lanka Muslim

ஐ.தே.கவை எங்களிடம் ஒப்படையுங்கள்; ரணில் விக்கிரமசிங்கஅவர் கேட்கும் எந்த உதவியையும் வழங்க தயார்

Contributors

ஐக்கிய தேசியக் கட்சியை எங்களிடம் ஒப்படைத்தால் எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எந்தவித அச்சுறுத்தல்களும் ஏற்படாதவாறு நாங்கள் பாதுகாப்போம் ஏனெனில், அவருக்கு ஐ.தே.க.வுக்குள்ளேதான் அச்சுறுத்தல்கள் அதிகளவில் உள்ளன என்று ஆளும் கட்சியின் பிரதம கொறடா அமைச்சர் தினேஷ் குணவர்தன நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

எதிர்க் கட்சித் தலைவருக்கு பாதுகாப்பு மாத்திரமன்றி அவர் கேட்கும் எந்த உதவியையும் வழங்க ஜனாதிபதியும், அரசாங்கமும் தயாராகவுள்ளது என்று அவர் மேலும் தெரிவித்தார். வரவு – செலவுத் திட்டத்தில் ஜனாதிபதி உட்பட அவருக்கு கீழுள்ள 27 நிறுவனங்களுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான குழு நிலை விவாதத்தில் பங்குகொண்டு உரையாற்றிய அமைச்சர் தினேஷ் குணவர்தன மேலும் குறிப்பிடுகையில்,

பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளாது பகிஷ்கரித்ததன் மூலம் எதிர்க் கட்சித் தலைவர் தனது பதவிக்குரிய பொறுப்பை நிறைவேற்றுவதிலிருந்து தவறிவிட்டார்.

எனவே ரணில் விக்ரமசிங்கவுக்கு புத்திமதிகள் கூறி அவரை நல்வழிப்படுத்துவதற்கு ஐக்கிய தேசியக் கட்சியினர் ஒன்றுபட்டு செயற்பட முன்வர வேண்டும் என்று நான் இந்த சபையில் வேண்டுகோள் விடுக்கின்றேன். இதற்கான எந்தவொரு உதவியையும் வழங்க ஜனாதிபதி தயாராக உள்ளார் என்பதை நான் கூறிக்கொள்ள விரும்புகிறேன் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

செனல் – 4 கூலிக்காக செய்யும வேலைத்திட்டங்களுக்கு ஐக்கிய தேசியக் கட்சி துணைபோயுள்ளமை கவலைக்குரிய விடயமாகும். இந்த நாட்டின் ஒட்டுமொத்த மக்களும் வெறுக்கும் செனல் 4 வினரை எதிர்க் கட்சியினர் ஸ்ரீகொத்தாவுக்கு அழைத்துச் சென்றது பாரிய விடயமாகும். பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்களின் உச்சிமாநாடு இலங்கையில் நடைபெற்றமை தொடர்பில் எதிர்க் கட்சிகள் பல கருத்துக்களை முன்வைத்தன.

இந்த உச்சிமாநாடு இலங்கையில் நடைபெற்றமையை ஐக்கிய தேசியக் கட்சி எதிர்க்கின்றதா என்று நான் கேள்வி கேட்க விரும்புகின்றேன். இதன் செலவுகள் தொடர்பில் குற்றஞ்சுமத்துகின்றனர். உலக நாட்டின் அரச தலைவர்களை முச்சக்கர வண்டியிலா அழைத்துச் செல்வது என்றும் கேட்கின்றேன் என்றார்.

Web Design by Srilanka Muslims Web Team