ஐ. நா. பாதுகாப்புச் சபையின் அங்கத்துவ ஆசனத்தை ஏற்க சவூதி அரேபியா மறுப்பு - Sri Lanka Muslim

ஐ. நா. பாதுகாப்புச் சபையின் அங்கத்துவ ஆசனத்தை ஏற்க சவூதி அரேபியா மறுப்பு

Contributors

ஐ. நா. பாதுகாப்புச் சபையின் அங்கத்துவ ஆசனத்தை ஏற்க சவூதி அரேபியா மறுத்துள்ளது. யுத்தங்கள் மற்றும் மோதல்களை முடிவுக்கு கொண்டுவர பாதுகாப்புச் சபை தவறியதாக குற்றம் சாட்டியே சவூதி இந்த முடிவை எடுத்துள்ளது.
சவூதி அரேபியா தனது வரலாற்றில் முதல் முறையாக ஐ. நா. பாதுகாப்புச் சபையின் நிரந்தரமற்ற அங்கத்துவ அந்தஸ்த்தை கடந்த வியாழக்கிழமை பெற்றது. ஆனால் சவூதி இந்த வாய்ப்பை நேற்று வெள்ளிக்கிழமை நிராகரித்தது.
இது குறித்து அந்நாட்டு வெளியுறவு அமைச்சின் அறிக்கையை சவூதி தேசிய செய்தி ஊடகம் வெளியிட்டது. அதில், ‘சர்வதேச அமைதியை நிலைநாட்டும் பொறுப்பை பாதுகாப்புச் சபை சரியாக நிறைவேற்ற அதன் பொறிமுறை மற்றும் இரட்டை நிலைப்பாடு தடங்கலாக இருப்பதாக சவூதி அரசு பார்க்கிறது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் பாதுகாப்புச் சபையில் சீர்திருத்தங்கள் கொண்டு வரப்படும் வரை அதன் அங்கத்துவத்தை பெற முடியாது என சவூதி அரேபியா வலியுறுத்தியுள்ளது. ஆனால் அந்த சீர்திருத்தம் பற்றி சவூதியின் அறிக்கையில் எதுவும் விபரிக்கப்படவில்லை.
இரண்டு ஆண்டுகளுக்கு மேல் நீடிக்கும் சிரிய உள்நாட்டு யுத்தத்திற்கு தீர்வுகாண்பதில் ஐ. நா. பாதுகாப்புச் சபை பிளவுபட்டு காணப்படுகிறது. சிரிய ஜனாதிபதி பஷர் அல் அஸாத்திற்கு எதிராக பாதுகாப்புச் சபையில் கடும் நடவடிக்கையை எடுக்க மேற்குலக நாடுகள் தீர்மானங்களைக் கொண்டுவந்த போதும், ரஷ்யா மற்றும் சீனா அதற்கு எதிராக வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி நிராகரித்து வருகின்றன. சிரிய யுத்தத்தில் சவூதி அரேபியா, அரசுக்கு எதிரான கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவளித்து வருகிறது.
ஐ. நா. பாதுகாப்புச் சபையில் அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன், சீனா மற்றும் பிரான்ஸ் நாடுகள் வீட்டோ அதிகாரத்துடன் நிரந்தர அங்கத்துவத்தை பெற்றுள்ளன. ஏனைய 10 ஆசனங்களுக்கும் சுழற்சி முறையில் நாடுகள் தேர்வு செய்யப்பட்டு வருகிறது.
இதன் அடிப்படையில் சவூதி அரேபியா, சாட் மற்றும் நைஜீரியா நாடுகள் பாதுகாப்புச் சபையின் இரண்டு ஆண்டு புதிய தவணைக்காக கடந்த வியாழக்கிழமை ஐ. நா. பொதுச் சபையில் தேர்வு செய்யப்பட்டன. எனினும் தேர்வு செய்யப்பட்ட மூன்று நாடுகளும் தனது மனித உரிமை பதிவுகளை மேம்படுத்த வேண்டும் என மனித உரிமை அமைப்புகள் அழுத்தம் கொடுத்துள்ளன.
தவிர ஐ. நா. பாதுகாப்புச் சபையின் 15 அங்கத்துவ நாடுகளில் சிலி மற்றும் லிதுவேனியா ஆகிய நாடுகளும் ஆசனங்களை வென்றன. அஸர்பைஜான், குவன்தமாலா, பாகிஸ்தான், மொரோக்கோ மற்றும் டோகோ ஆகிய நாடுகளின் இரண்டு ஆண்டு தவணை எதிர்வரும் 2014 ஜனவரி முதலாம் திகதியுடன் முடிவடையும் நிலையில் இந்த நாடுகளுக்கு பதிலாகவே புதிதாக 5 நாடுகள் தேர்வு செய்யப்பட்டன.
மேற்படி 5 நாடுகளும் எந்த எதிர்ப்பும் இன்றி தேர்வு செய்யப்பட்ட போதும், அதற்கு அங்கீகாரம் பெற இந்த நாடுகள் 193 அங்கத்துவ நாடுகளைக் கொண்ட ஐ. நா. பொதுச் சபையின் மூன்றில் இரண்டு நாடுகளின் ஆதரவை பெற வேண்டி இருந்தது.
இதன்படி லிதுவேனியாவுக்கு 191 உறுப்பு நாடுகள் ஆதரவளித்தன. சிலி மற்றும் நைஜீரியா 186 நாடுகளினதும் சாட் 184 நாடுகளினதும், சவுதி அரேபியா 176 நாடுகளினதும் ஆதரவை பெற்றன. ‘பாதுகாப்புச் சபை அங்கத்துவ நாடுகளிடம் மனித உரிமை மற்றும் மனிதாபிமான விவகாரம் குறித்து சுழற்சி முறையில் விளக்கம் கோரப்படும்’ என்று ஜெனிவாவை தளமாகக் கொண்டு இயங்கும் ஐ. நா. கண்காணிப்பகத்தின் நிறைவேற்று இயக்குனர் ஹில்பல் நியுர் குறிப்பிட்டார்.
‘சவூதி அரேபியா மற்றும் சாட் நாடுகள் மனித உரிமை விவகாரத்தில் மோசமான பதிவை கொண்டுள்ளன’ என்றும் அவர் கூறினார்.
பெண்ணுரிமை விவகாரம் குறித்து சவூதி அரேபியா மீது தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டு வருகின்றன. பெண்கள் வாகனமோட்ட தடை விதித்திருக்கும் ஒரே நாடு சவூதி அரேபியாவாகும். ஐ. நா.வின் முக்கியமான பொறுப்பை ஏற்கும் சவூதி தனது செயற்பாடுகளில் சுத்தத்தை பேண வேண்டும் என மனித உரிமை கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது.

Web Design by Srilanka Muslims Web Team