ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை வழங்கப்பட்டால் பாராளுமன்ற உறுப்புரிமை வறிதாகுமா? - வை.எல்.எஸ்.ஹமீட்! - Sri Lanka Muslim

ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை வழங்கப்பட்டால் பாராளுமன்ற உறுப்புரிமை வறிதாகுமா? – வை.எல்.எஸ்.ஹமீட்!

Contributors

நீதி மன்றத்தினால் தண்டனை பெற்ற ஒருவர் பிரதானமாக பாராளுமன்ற உறுப்புமையை இழக்கும் முறையை அறிந்தால் அத்தண்டனை ஒத்திவைக்கப்பட்ட தண்டனையாக வழங்கப்படும்போது பாராளுமன்ற உறுப்புரிமைக்கு என்ன நடக்கும் என்பதை புரிந்துகொள்வது இலகுவாகும்.
இவ்விடயம் அரசியலமைப்பின் சரத்து 89 இல் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்பிரகாரம் பாராளுமன்ற உறுப்பினர் பதவியிழக்கும் பிரதான முறைகள்.
முதலாவது:
1. ஒருவருக்கு ஆகக்குறைந்தது ஆறுமாதங்களுக்கு குறைவில்லாத சிறைத்தண்டனை வழங்கப்பட்டிருத்தல் வேண்டும்.
2. அந்த குற்றத்திற்கான அதிகபட்சமாக வழங்கக்கூடிய தண்டனை இரண்டு வருடத்திற்கு குறையாமல் இருக்கவேண்டும். உதாரணமாக சில குற்றங்களுக்கு அதிகபட்ச தண்டனை ஒரு வருடமாக இருக்கும். அதாவது penal code s 434 இன் படி ஒருவர் இன்னொருவருடைய வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்தால் அதிகூடிய சிறைத்தண்டனை ஒரு வருடமாகும்.
ஒருவர் ஒரு பாராளுமன்ற உறுப்பினராக இருந்து மேற்சொன்ன குற்றத்தைப் புரிந்து ( s 434) ஆறுமாதமோ அல்லது ஒருவருடமோ சிறைத்தண்டனை அனுபவிக்கின்றார். இவரது பாராளுமன்ற ஆசனம் வறிதாகாது. காரணம் இவர் செய்த குற்றத்திற்கான அதிகூடிய தண்டனை இரண்டு வருடங்களுக்கும் குறைவானது. அதாவது ஒரு வருடம்.
அவர் செய்த குற்றம் அதிக பட்சமாக இரண்டு வருடங்களுக்கு குறையாத தண்டனை வழங்கக்கூடியது. அந்தக் குற்றத்திற்காக அவருக்கு 6 மாதம் அல்லது 8 மாதம் அல்லது ஒரு வருடம் தண்டனை வழங்கப்பட்டுள்ளது என்றால் அவர் சிறைத்தண்டனை அனுபவிக்க ஆரம்பித்த நாளே அவருடைய எம் பி பதவி பறி போய்விடும் அதற்குரிய நடவடிக்கையை சபாநாயகர் எடுத்தால்.
அவர் ஆறு மாதம் சிறைத்தண்டனை அனுபவித்து முடித்திருக்க வேண்டிய அவசியமில்லை. தேர்தல் ஆணையாளர் நாயகம் ஆறு மாதங்கள் சிறைத்தண்டனை அனுபவித்து முடித்திருக்க வேண்டுமெனத் தெரிவித்ததாக ஓர் ஆங்கில இணையத்தளம் தெரிவித்திருந்தது. அது உண்மையாயின் அது பிழையான கருத்தாகும்.
இரண்டாவது: ஒருவர் இரண்டு வருடங்களுக்கு குறையாத சிறைத்தண்டனை வழங்கக்கூடிய ஓர் குற்றத்தைப்புரிந்து, அவர் அதற்காக ஆறுமாதங்களுக்கு குறையாத தண்டனை கடந்த ஏழு வருடத்திற்குள் அனுபவித்திருந்தால் அவரது பாராளுமன்ற உறுப்பினர் பதவி பறிபோகும்.
இங்கு ஒரு கேள்வி எழலாம். முதலாவது வகையில் ‘சிறைத்தண்டனை ஆரம்பித்த உடனே’ என்றும் இரண்டாவது வகையில் ‘ஆறு மாதத்திற்கு குறையாத தண்டனையை அனுபவித்திருந்தால்’ என்றும் இருப்பது ஏன்?
இதற்கான காரணம்: இரண்டு வகையிலும் ஆறு மாதங்களுக்கு குறைவில்லாத தண்டனை அனுபவிக்க வேண்டும். ஆனால் முதலாவது வகையைப் பொறுத்தவரை அவர் ஆறுமாதத்திற்கு குறைவில்லாத தண்டனையை அனுபவித்தே ஆகவேண்டும். ஏனெனில் அதுதான் அவருக்குரிய தண்டனை.
இரண்டாவது வகையைப் பொறுத்தவரை அவர் இப்போது மறியலில் இல்லை. அவர் தண்டனையை ஏற்கனவே அனுபவித்து முடித்துவிட்டார். இங்கு கேள்வி, அவர் எவ்வளவு காலம் தண்டனையை அனுபவித்தார்? என்பதுதான். ‘அனுபவிப்பார்’ என்ற ஒன்று இந்த இரண்டாவது வகையில் இல்லை. அதனால்தான் ‘ஆறுமாதத்திற்கு குறைவில்லாத தண்டனையை அனுபவித்திருக்க வேண்டும்; என்று குறிப்பிடப்பட்டிருக்கின்றது.
முதலாவது வகையில் அவர் அனுபவிப்பார்; என்பது தெரியும்.
மூன்றாவது, மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தால் அல்லது அந்த மரண தண்டனைக்கு பதிலாக ஆறு மாதங்களுக்கு குறைவில்லாத சிறைத்தண்டனை வழங்கப்பட்டு அதனை தற்போது அனுபவித்துக் கொண்டிருந்தால் ( அது அத்தண்டனையின் முதல் நாளாகக்கூட இருக்கலாம்) அல்லது மரண தண்டனைக்குப் பதிலாக வழங்கப்பட்டு அனுபவித்து முடித்த சிறைத்தண்டனை ஆறு மாதங்களுக்கு குறைவில்லாததாக இருந்தால், அவ்வாறு அனுபவித்தது அப்பொழுதிலிருந்து ஏழு வருடங்களுக்குள்ளாக இருந்தால் அவரது பா உ பதவி வறிதாகும்.
அதாவது ஒருவர் ஏற்கனவே ஆறுமாதங்களுக்கு குறைவில்லாத மேலே சொல்லப்பட்ட இருவகைகளி்ல் ஒரு வகையில் அனுபவித்து ( அனுபவித்த நாட்கள் உள்ளடங்கலாக) ஏழு வருடம் முடிந்து இன்று எட்டாம் வருடத்தின் முதல்நாள். இன்று அவர் தேசியப்பட்டியலில் எம் பி யாக நியமிக்கப்படுகிறார். இவரது பதவி வறிதாகும்.
மாறாக, இன்று எட்டாம் வருடத்தின் இரண்டாம் நாள். அவர் எம் பியாக நியமிக்கப்படுகிறார். அவரது பதவி வறிதாகாது.
அதேநேரம், ஜனாதிபதியினால் மன்னிப்பு வழங்கப்பட்டால் அந்த நாளிலிருந்து அந்த தகைமையீனம் நீங்கிவிடும்.
இப்பொழுது ஒத்திவைக்கப்பட்ட தண்டனையைப் பார்ப்போம்.
——————————————————————
ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை என்றால், அந்தக் குற்றவாளி ஒத்திவைக்கப்பட்ட காலத்தில் ( operational period- இயங்கு காலம்) ( ஆகக்குறைந்தது ஐந்து வருடங்கள்) எந்தத் தண்டனையும் அனுபவிப்பதில்லை. எந்தத் தண்டனையையையும் அனுபவிக்காதவர் சரத்து 89 இல் குறிப்பிடப்பட்ட தகைமையீனத்திற்குள் வரமாட்டார். எனவே, அவரது எம் பி பதவி ரத்தாகாது.
அதேநேரம், அந்த இயங்கு காலத்திற்குள் (ஐந்து வருடங்களுக்குள்) ஏதாவது குற்றமொன்றை அவர் இழைத்து குற்றவாளியாக காணப்பட்டால் அவருக்கு ஏற்கனவே ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனையை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ அனுபவிக்க நேரிடலாம். அவ்வாறு ஆறு மாதத்திற்கு குறைவுல்லாமல் அனுபவிக்க நேர்ந்தால் எம் பிப் பதவி பறிபோகும்.
சாதரண பொதுமக்களைப் பொறுத்தவரை இந்தளவு புரிதல் போதுமானது. சட்ட மாணவர்களைப் பொறுத்தவரை இந்தப்புரிதல் போதாது.
1999ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட 47ம் இலக்க திருத்தத்திற்குமுன் அந்த இயங்கு காலத்தில் எந்தக் குற்றமும் புரியாவிட்டால் ‘அவர் அந்தக் குற்றத்திற்கு குற்றவாளியாக காணப்படாத, தண்டனை எதுவும் விதிக்கப்படாத ஒருவர்போல் காணப்படுவார்.
குறித்த திருத்தத்தின்பின் அந்த இயங்கு காலத்தில் எந்தக் குற்றமும் புரியாவிட்டாலும் அதன்காரணமாக ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை அனுபவிக்காவிட்டாலும் அது சிறைத்தண்டனையாகவே கருதப்படும். S 303 (😎 of CPC
ஒரேயொரு விதிவிலக்கு: அவ்வாறு தண்டனை அனுபவித்ததாக கருதப்பட்டாலும் அது பதவிகள் பறிபோவதற்கான தகைமையீனமாக கொள்ளப்படாது. s 303(😎 of CPC
மறுபுறம், தண்டப்பணத்தைப் பொறுத்தவரை, அது தொடர்பாக சரத்து 89 இல் எதுவும் குறிப்பிடப்படவில்லை. எனவே, தண்டப்பணம் கட்டினாலும் அது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை வறிதாக்காது.
எனவே, குறித்த அமைச்சர் விடயத்தில்:
அவரது தண்டனை ஒத்திவைக்கப்பட்ட தண்டனை. அது பதவியிழப்பு தகைமையீனத்தை ஏற்படுத்தாது. அதாவது எம் பி பதவி பறிபோகாது.
தண்டப்பணம் தகைமையீனத்திற்குரியதல்ல. எனவே, தண்டப்பணம் கட்டினாலும் பதவி பறிபோகாது.
குறித்த ஐந்து வருடங்களுக்குள் இன்னுமொரு குற்றம் இழைத்து ஒத்திவைக்கப்பட்ட தண்டனையை முழுமையாகவோ, பகுதியாகவோ ( ஆறு மாதத்திற்கு குறைவில்லாமல்) அனுபவித்தால் ( அதாவது அனுபவிக்க ஆரம்பித்தால்) எம் பிப் பதவி பறிபோகும்.

Web Design by Srilanka Muslims Web Team