(Update) ஒய்வு பெறுகிறாறா பானுக்க ராஜபக்ஷ? ஓய்வினை உறுதி செய்த இலங்கை கிரிக்கெட் சபை! - Sri Lanka Muslim

(Update) ஒய்வு பெறுகிறாறா பானுக்க ராஜபக்ஷ? ஓய்வினை உறுதி செய்த இலங்கை கிரிக்கெட் சபை!

Contributors

இலங்கை கிரிக்கெட் அணியின் வீரரான பானுக்க ராஜபக்ஷ சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பானுக்க ராஜபக்ஷ, தமது ஓய்வு கடிதத்தை கடந்த திங்கட்கிழமையன்று இலங்கை கிரிக்கெட் சபைக்கு  (SLC) கையளித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை கிரிக்கெட் அறிமுகப்படுத்தியுள்ள புதிய உடற்தகுதி பரிசோதனைகளின் சிக்கல் தன்மையினை கருத்திற் கொண்டிருக்கும் பானுக்க ராஜபக்ஷ தனது வேண்டுகோள்கள் பூர்த்தி செய்யப்படாதபட்சத்தில் ஓய்வு பெறுவது குறித்து தீர்மானம் மேற்கொள்ளவுள்ளதாக நம்பப்படுகின்றது.

அதன்படி தான் வழங்கியுள்ள கடிதத்தில் இம்மாதம் 7ஆம் திகதி இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்காக ஒழுங்கு செய்யப்பட்டிருக்கும் உடற்தகுதி பரிசோதனையில் இருந்து கடந்த ஆறு மாதகாலமாக இடம்பெற்ற தொடர் கிரிக்கெட் தொடர்கள் கருதி தனக்கு விடுகை தருமாறு பானுக்க ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதோடு பானுக்க ராஜபக்ஷ தனக்கான உடற்தகுதிப் பரிசோதனையினை ஜிம்பாப்வே, இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கு எதிரான மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் தொடர்களின் பின்னர் எதிர்வரும் மார்ச் மாதத்தில் மேற்கொள்ளுமாறு இலங்கை கிரிக்கெட் சபைக்கு வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இம்மாதம் 16ஆம் திகதி இலங்கை – ஜிம்பாப்வே அணிகள் இடையிலான ஒருநாள் தொடர் பல்லேகலேயில் ஆரம்பமாகவுள்ள நிலையில், இந்த தொடரில் பங்கெடுக்கும் இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்கள் உடற்தகுதி பரிசோதனையாக 2 கிலோ மீட்டர் துாரத்தினை 8 நிமிடம் 10 செக்கன்களில் ஓடி முடிக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டிருப்பதோடு, ஏனைய உடற்தகுதி பரிசோதனையான Skin Fold சோதனையில் 70 இற்கு குறைவான பெறுபேறுகளை எடுக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

பானுக்க ராஜபக்ஷ ஓய்வு பெறுவதாக முன்னர் தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில், இந்த விடயம் தொடர்பில் ஊடக அறிக்கை ஒன்றினை இலங்கை கிரிக்கெட் சபை சற்று முன்னர் வெளியிட்டிருக்கின்றது.

குறித்த ஊடக அறிக்கையில் பானுக்க ராஜபக்ஷ தனது குடும்ப விடயங்களினைக் கருத்திற் கொண்டு, தனது ஓய்வுக்கான கடிதத்தினை இலங்கை கிரிக்கெட் சபையிடம் வழங்கியிருந்ததாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

கடந்த 2019ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான T20I போட்டி மூலம் சர்வதேச கிரிக்கெட்டுக்கு அறிமுகமாகிய 30 வயதான பானுக்க ராஜபக்ஷ இலங்கை அணிக்காக 5 ஒருநாள் மற்றும் 18 T20I போட்டிகளி குறிப்பிட்ட போட்டிகளில் 400 இற்கு அதிகமான ஓட்டங்களை குவித்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Web Design by Srilanka Muslims Web Team