ஒரு தலைப்பட்ச விளம்பரம் வெற்றிபெறாது..! - Sri Lanka Muslim

ஒரு தலைப்பட்ச விளம்பரம் வெற்றிபெறாது..!

Contributors

வை எல் எஸ் ஹமீட்

அ இ ம க கட்சியின் சில பா உ க்கள் தங்களது அரச ஆதரவை நியாயப்படுத்த, “அவ்வாதரவு சமூகத்திற்கானதே”, என்பதை நிறுவ அவர்களது கட்சித் தலைமையுடன் ஓர் ஊடகப்போரை பிரகடனப்படுத்தியிருப்பதுபோல் தெரிகிறது.

“என்னைப் பொறுத்தவரை கட்சியா? சமூகமா? என்று கேட்டால் சமூகம்தான், என்று சொல்வேன். கட்சி என்பது மார்க்கமல்ல” என்று அவர்களது கட்சித்தலைமை ஒரு தொலைக்காட்சி நேர்காணலில் பேசியதை இப்போது அவர்கள் முகநூலில் மீண்டும் உலாவர விட்டிருப்பதை காணக்கிடைத்தது.

எதிர்வரும் நாட்களில் இவ்வூடகப்போர் மேலும் உக்கிரமடையலாம். ஆரோக்கியமான கருத்துக்கள் மோதுவதில் தவறில்லை. அது ஜனநாயகமும்கூட. ஆனால் அவர்கள் ஆரோக்கியமான கருத்து மோதலைச்செய்ய விரும்பினால் அதை நியாமாகச் செய்யவேண்டும். அதில் யதார்த்தம், logic என்பன இருக்கவேண்டும்.

அவ்வாறு இருப்பதற்கு இரண்டு விடயங்கள் உள்வாங்கப்பட வேண்டும். ஒன்று, அவர்களது இன்றைய நிலைப்பாடு சமூகத்திற்கானது; என்று வெறுமனே கூறுவது சரிவராது. மாறாக, அது எந்த வகையில் சமூகத்திற்கானது; என்பது தெளிவு படுத்தப்பட வேண்டும்.

அடுத்தது, தேர்தலுக்குமுன் இப்பாராளுமன்ற உறுப்பினர்கள் தற்போதைய அவர்களது நிலைப்பாட்டிற்கு முற்றிலும் மாறான கருத்துக்களை மிகவும் மூர்கத்தனமாக முன்வைத்திருக்கிறார்கள்.

எனவே, அவர்கள் அவ்வாறு பேசியவற்றின் முக்கிய பாகங்களை மீண்டும் அவர்கள் அதே முகநூலுக்கு கொண்டுவரவேண்டும். அவ்வாறு அன்று பேசியதற்கு முரணான நிலைப்பாட்டை இன்று ஏன் எடுத்தார்கள்; என்பதற்குரிய காரணங்களை அவர்கள் பகுத்தறிவு ரீதியாக முன்வைக்க வேண்டும்.

அத்தோடு, அவர்களது கட்சித்தரப்பிலுள்ளவர்களோடு இப்பாராளுமன்ற உறுப்பினர்கள் தொலைக்காட்சி விவாதங்களில் ஈடுபட்டு, இவர்களது நிலைப்பாடே சரியானது. கட்சியினுடைய அல்லது அவர்களது கட்சித் தலைமையினுடைய நிலைப்பாடு பிழை; என நிறுவ வேண்டும்.

அதுவே ஓர் ஆரோக்கிய கருத்து மோதலாகும். அதுவே மக்களுக்கும் தெளிவினை வழங்கும். மாறாக, கடந்த காலங்களில் பேசியவற்றில் இருந்து அங்கொரு துண்டு, இங்கொரு துண்டு, முகநூலில் உலாவர விடுவதால் தங்களது நிலைப்பாடு சரியானது; என்று நிறுவி விட முடியாது.

எனவே, எல்லோரும் செய்கின்ற அர்த்தமற்ற மாமூல் ஊடக விளம்பரங்களைத் தவிர்த்து, அறிவுபூர்வமான ஓர் போட்டியைச்செய்ய முன்வரவேண்டும். அல்லது மற்ற சில பா உ க்கள் போல் எதை வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள். மக்களை மடையர்களாக நினைத்து ஒருதலைப்பட்ச விளம்பரங்களுக்குள் மூழ்குவதை தவிர்ந்து கொள்ளுங்கள். அதில் வெற்றி கிடைக்காது.

Web Design by Srilanka Muslims Web Team