'ஒழுக்காற்று நடவடிக்கை என்பது முஸ்லிம் கட்சிகளால் வேடிக்கையாக மாற்றப்பட்டுள்ளது' - இம்ரான்! - Sri Lanka Muslim

‘ஒழுக்காற்று நடவடிக்கை என்பது முஸ்லிம் கட்சிகளால் வேடிக்கையாக மாற்றப்பட்டுள்ளது’ – இம்ரான்!

Contributors

ஒழுக்காற்று நடவடிக்கை முஸ்லிம் கட்சிகளால் வேடிக்கையாக மாற்றப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்தார்.

ஞாயிற்றுகிழமை (17) கிண்ணியாவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், ஒழுக்காற்று நடவடிக்கை என்பது முஸ்லிம் கட்சிகளால் வேடிக்கையாக மாற்றப்பட்டுள்ளது. இருபதாம் திருத்தச் சட்டத்தின் பின் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்கள்.

ஆனால் வழங்கப்பட்டதோ தேசிய அமைப்பாளர் போன்ற பதவிகள். மீண்டும் நிதி சட்டமூலம், வரவுசெலவு திட்டம் போன்றவற்றில் அரசுக்கு ஆதரவாக வாக்களித்தார்கள். இதன்போது மீண்டும் ஒழுக்காற்று நடவடிக்கை என்றார்கள். நான்கு மாதங்களாக ஒன்றுமில்லை. ஆனால் இன்று அவர்கள் பசில் ராஜபக்ஷவுடன் அமைச்சுக்களுக்காக பேரம் பேசிக்கொண்டிருக்கின்றனர்.

முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் பிரதி சபாநாயகர் வாக்களிப்பில் எதிர்க்கட்சிகளுடன் சேர்ந்து வாக்களிக்காவிட்டால் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்கிறார்

வரவு செலவு திட்டத்தின் பின்னர் கூறிய ஒழுக்காற்று நடவடிக்கையையே இன்னும் காணவில்லை. இதில் தற்போது புதிதாக ஒன்று அமைச்சு பதவிகளுக்கு பேரம் பேசிக்கொண்டிருப்பவர்கள் எவ்வாறு எதிர்க்கட்சிகளுடன் இணைந்து வாக்களிப்பார்கள்.

இது ஒன்றும் ஹக்கீமுக்கு தெரியாமலில்லை.மக்களை ஒழுக்காற்று நடவடிக்கை என்னும் பெயரில் அவரும் ஏமாற்றி வருகிறார். என்பதே உண்மை. ராஜபக்ஷக்கள் எவ்வாறு சிங்கள மக்களை ஏமாற்றி வந்தனரோ அதேபோன்றே முஸ்லிம்களை இந்த முஸ்லிம் கட்சி தலைவர்கள் ஏமாற்றி வருகின்றனர் என தெரிவித்தார்.

 

ஹஸ்பர்

Web Design by Srilanka Muslims Web Team