ஓய்வூதியர் கொடுப்பனவு இழுத்தடிப்பு - வழக்கு ஒத்திவைப்பு! - Sri Lanka Muslim

ஓய்வூதியர் கொடுப்பனவு இழுத்தடிப்பு – வழக்கு ஒத்திவைப்பு!

Contributors

2016ஆம் ஆண்டு தொடக்கம் 2019ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் ஓய்வுபெற்ற அரசாங்க ஊழியர்களுக்கு அதிகரிக்கப்பட்ட ஓய்வூதியத்தை வழங்காமல் இழுத்தடிப்பு செய்யப்பட்டு வருவது தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பிலான பதில் மனுவை இனியும் தாமதியாமல் தாக்கல் செய்யுமாறு, மேன்முறையீடு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கு, மேன்முறையீடு நீதிமன்றில் நேற்று முன்தினம் (13) பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோதே, நீதியரசர்கள் இவ்வாறு உத்தரவிட்டு, எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 25ஆம் திகதிக்கு வழக்கை ஒத்திவைத்துள்ளனர் என ஓய்வூதியர்களின் உரிமைகளை பாதுகாக்கும் தேசிய இயக்கத்தின் உப தலைவர் ஏ.எல்.எம்.முக்தார் தெரிவித்தார்.

இவ்வழக்கு தொடர்பில் 18 தவணைகள் வழங்கப்பட்டுள்ள போதிலும் அரச தரப்பினர் இதுவரை வழக்கிற்கான பதில் மனுவைத் தாக்கல் செய்யவில்லை எனவும் இந்த வழக்கை தொடர்ந்தும் நீடித்துச் செல்ல முடியாது எனவும் வழக்கை விரைவாக முடிக்க வேண்டும் எனவும் இதன்போது நீதியரசர்கள் அரச தரப்பு சட்டத்தரணியை அறிவுறுத்தியுள்ளனர்.

எதிர்வரும் 25.10.2022 ஆம் திகதிக்கு முன்னர் பதில் மனுவை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் இல்லா விட்டால் பதில் மனுவை கருத்தில் கொள்ளாமல் விசாரணைகளை ஆரம்பித்து, தீர்ப்பு வழங்க வேண்டிய நிலை ஏற்படும் எனவும் நீதியரசர்கள் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளனர் என அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த வழக்கு தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாகவும் இதுவரை 2,000 ஓய்வூதியர்கள் பல்வேறு காரணங்களால் மரணமாகியுள்ளனர் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

Web Design by Srilanka Muslims Web Team