கசினோவுக்கு எதிராக கொழும்பில் ஆர்ப்பாட்டத்துக்கு ஏற்பாடு; பொது பல சேனாவிற்கும் அழைப்பு! - Sri Lanka Muslim

கசினோவுக்கு எதிராக கொழும்பில் ஆர்ப்பாட்டத்துக்கு ஏற்பாடு; பொது பல சேனாவிற்கும் அழைப்பு!

Contributors

(எஸ்.என்.எம்.ஸுஹைல்)

(vidivelli)

உபாய மார்க்க அபிவிருத்தி திட்டத்தின் பேரில் கொழும்பில் கசினோ நிலையம் அமைப்பதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சிகளை எதிர்த்து கொழும்பில்  பாரிய ஆர்ப்பாட்டமொன்றை நடத்த கொம்பனித்தெரு மக்கள் முன்னணி ஏற்பாடு செய்துள்ளது.

நாளைமறுதினம் செவ்வாய் கிழமை பிற்பகல் 3.00 மணிக்கு கொம்பனித் தெரு சந்தியில் நடத்தப்படவிருக்கும் இவ்வார்ப்பாட்டத்தில் கலந்துகொள்ளுமாறு நாட்டுப்பற்றுள்ள அனைவருக்கும் அழைப்பு விடுப்பதாக தெரிவித்த மேல்மாகாண சபை உறுப்பினரும் கொம்பனித்  தெரு மக்கள் முன்னணியின் அமைப்பாளர்களுள் ஒருவருமான முஜிபுர் ரஹ்மான் பொது பல சேனாவினருக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.

நாம் நாளை மறு தினம் தினம் இலங்கையை நாசமாக்க கொண்டுவரப்படவிருக்கும் கசினோவிற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்த ஏற்பாடு செய்திருக்கின்ற நிலையில், அதே தினத்தில்  ஹலாலுக்கு எதிர்ப்பு தெரிவித்து  கொழும்பில்  பொது பல சேனாவினர் பேரணியொன்றை நடத்த தயாராகின்றனர். இவ்வாறு அவர்கள் மக்களை ஹலாலுக்கு எதிராக திசை திருப்ப முயற்சிப்பதானது கசினோவிற்கு ஆதரவளிப்பதாகவே அமைந்து விடும். மாறாக அவர்கள் நாட்டையும் பௌத்தத்தையும் நேசிப்பதாக இருந்தால் எம்மோடு இணைந்து எதிர்ப்பு ஆர்பாட்டப் பேரணியில் பங்குகொள்ள வேண்டும் .

அரசாங்கம் கொழும்பு விஜே வர்தன மாவத்தையில் மட்டும் கசினோ நிலையத்தை நிறுவவுள்ளதாக கூறியது. எனினும் தற்போது கொம்பனித் தெரு, ஜஸ்டிக் அக்பர் வீதி பகுதியிலும் கெசினோவிற்கான சூதாட்ட நிலையங்களையும் மதுபான நிலையங்கள் விபச்சார விடுதிகளையும் அமைக்க திட்டமிட்டுள்ளது.

கொம்பனித் தெரு பகுதியில் அப்பாவி மக்களை வெளியேற்றி அவர்களின் காணிகளை சுவீகரிப்பதானது அவற்றை வெளிநாட்டு சூதாட்ட கம்பனிகளுக்கு விற்பனை செய்வதே என்பது தற்போது அம்பலமாகியுள்ளது.

இவ்வாறு மக்களை அங்கிருந்து வெ ளியேற்றி விட்டு நாட்டை அழிவிற்கு இட்டுச்செல்லும் கசினோ நிலையங்கள் கொண்டு வருவதானது சர்வ மதங்களையும் இலங்கை கலாசாரத்தையும் சீரழிக்கும் செயலாகும்.

கொம்பனித் தெரு பகுதியில்தான் பௌத்தர்களின் முக்கியத்துவம் வாய்ந்த கங்காராம விகாரை இருக்கின்றது. அவ்விகாரை உட்பட மூன்று பௌத்தவிகாரைகள் அங்கு காணப்படுகின்றன. அத்தோடு அங்கு 10 பள்ளிவாசல்கள் காணப்படுகின்றன. மூன்று இந்து கோயில்களும் இரு கிறிஸ்தவ தேவாலயங்களும் அமையப்பெற்றுள்ளன. இவ்வாறு நான்கு மதங்களினதும் வணக்கஸ்தலங்கள் இருக்கும் பகுதியில் கசினோவிற்கான திட்டங்கள் முன்னெடுக்கின்றமை மதங்களை இழிவு படுத்தும் அரசாங்கத்தின் செயலாக கருத வேண்டியிருக்கிறது.

எதிர்கால சந்ததியினரை ஆபத்தான உலகிற்கு இட்டுச் செல்லும் என்பதை மறந்து அரசாங்கம் செயற்படுகிறது. இளைஞர்களின் வாழ்வை நாசமாக்க முன்னெடுக்கப்படும் இத்திட்டத்தை எதிர்ப்பதற்கு அனைவரும் முன்வர வேண்டும்.

நாட்டை அழிவிற்கு இட்டுச்செல்லும் அரசின் கண்மூடித்தனமான இத்திட்டத்தை நாட்டை நேசிக்கும் மக்கள் இன மத பேதமின்றி நாளை மறு தினம் கம்பணித் தெருவிற்கு வந்து அரசின் இச்சட்டத்தை எதிர்க்க வேண்டும்.

அத்தோடு கசினோ நிலையம் அமைப்பது தொடர்பிலான சட்ட மூலம் எதிர்வரும் 24 ஆம் 25 ஆம் திகதிகளில் பாராளு மன்றத்திற்கு கொண்டு வரப்படவுள்ளது. இதன் போது அதற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என தெரிவித்து கொம்பனித் தெரு மக்கள் முன்னணி பாராளு மன்ற உறுப்பினர்களுக்கு கடிதம் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளது என முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

 

Web Design by Srilanka Muslims Web Team