கடலாளுகைக்குள் கட்டுப்படும் கடல்கடந்த கடப்பாடுகள்..! - சுஐப் எம்.காசிம்- Sri Lanka Muslim

கடலாளுகைக்குள் கட்டுப்படும் கடல்கடந்த கடப்பாடுகள்..! – சுஐப் எம்.காசிம்-

Contributors

கப்பல் போக்குவரத்துக்களை கட்டுப்பாடுக்குள் வைத்து, பிராந்திய ஏகாதிபத்தியத்தை வளர்த்துக்கொள்ளும் வியூகங்கள் உலக அரசியலில்  விஸ்வரூபமெடுக்கின்றன. பாரசீகக் கடல்பரப்பை கட்டுப்படுத்த ஈரான் முனைகிறது, இந்து சமுத்திர கடல் வழியை கட்டுப்படுத்த சீனா விரும்புகிறது, தாய்வான் கடற்பிராந்தியத்தை வளைத்தெடுக்க அமெரிக்கா நாடுகிறது. எல்லாம் ஆளும் ஆசையால் வரும் ஆபத்துக்கள்தான். தனக்குத் தேவையானதை கொண்டுசெல்ல, எடுத்துவர கடல்வழிதானே கை கொடுக்கிறது. இந்த சர்வதேச கடலாளுகைக்குள் இலங்கையை கொண்டுவரும் பிரயத்தனங்களே இப்போது பிராந்தியத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளன.

சீனாவின் யுவான்யாங் -05 கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்குள் வரவிருந்த திகதி தாமதமாகுமளவுக்கு இராஜதந்திர நெருக்கடிகள் உச்சத்தை தொட்டன. இப்போது இம்மாதம் 17 முதல் 22 வரை தங்குவதற்கு இலங்கை வந்துள்ளது இக்கப்பல். இது வருவதற்கு ஒரு தினத்துக்கு முன்னர் கடல்காணிப்பு விமானத்தை இந்தியா வழங்கி ஆறுதலடைந்தது. இந்த கண்காணிப்பு (ட்ரொய்னர்) விமானம் வழங்கப்படும் வரைக்கும்தான் சீனக்கப்பலின் வருகை தாமதப்படுத்தப்பட்டிருக்கலாம்.

இலங்கை அரசியலில் நிலைப்படும் நோக்கில் ராஜபக்ஷக்கள் முன்னெடுத்த அபிவிருத்தி மற்றும் பிரச்சாரங்கள் பிழைத்துப்போனமைக்கு ஜனாதிபதி ஒருவரின் பதவி விலகலும், கப்பல் வருகையால் எழுந்த பதற்றமும் பிரதான சான்றுகள்தான். ஆட்சிக்கு வந்த எந்த அரசாங்கமும் செய்யாத அபிவிருத்திகள் மற்றும் தென்னிலங்கை எழுச்சிகள் என்பன இவர்களின் நிர்வாகத்தில்தான் ஏற்பட்டன. பாரியளவில் கடன் பெறப்பட்டும், நாட்டின் சொத்துக்கள் சிலவை குத்தகைக்கு விடப்பட்டும்தான் இந்தச் சாதனைகள் நிகழ்த்தப்பட்டன. இந்தக் கடன்படுகைகளை மீளச் செலுத்த முடியாதுள்ள இலங்கை, சீனாவின் சில கட்டளைகளுக்கு கட்டுப்படாமல் இருக்க முடியாது. சீனாவில் தங்கியுள்ள நிதியியல் நிலைப்பாடு இது.

மறுபுறம் இந்தியாவுடனும் ஒரு நிலைப்பாட்டில் நெருங்க வேண்டியும் நிரப்பந்தம் இருக்கிறது. அரசியல் ரீதியான இந்தியாவின் அழுத்தங்களைச் சமாளிக்காது சுயமாக இயங்கும் நிலையில் நாமில்லையே! இதனால்தான் இந்த நிர்ப்பந்தம். இருதலைக்கொள்ளி எறும்பாக எத்தனை நாட்களுக்கு தவிப்பது? ஒரு நிலைப்பாட்டுக்கே வர வேண்டும் என்கின்றனர் சிலர்.

கொழும்பில் நிர்மாணிக்கப்பட்டு வரும் துறைமுக நகரின் பாரிய முகத்தோற்றம் இந்தியாவை எச்சரித்துக்கொண்டே இருக்கிறது. வெறும் பொருளாதார அபிவிருத்தி மையமாக இது வர்ணிக்கப்பட்டாலும் இந்தியா இதை நம்பத்தயாராக இல்லை. இந்த அச்சம்தான் இந்தியாவின் இலங்கை மீதான சந்தேகத்துக்கு அடித்தளமானது. எனவே, இவ்விரு நாடுகளதும் போட்டி வியூகங்களுக்குள் சிக்கிக்கொள்ளும் நிலையே நமது நாட்டுக்கு ஏற்பட்டுள்ளது. இல்லாவிடின் கப்பலைக் கண்காணிக்க கடல் விமானம் வருமா?

நாட்டின் உற்பத்தியும் அந்நியச்செலாவணி வருமானமும் சுகதேகிகளாக நம்மை வாழவைக்கும் வரை இதுதான் நிலைப்பாடாகப் போகிறதோ? இவ்வளவு சர்வதேச முக்கியம் வாய்ந்த கடற்பரப்பின் எல்லையில் இருக்கும் இலங்கை கப்பல்களின் வருமானத்தால் மட்டுமே அந்நியச்செலாவணியை உழைக்கலாமே! ஏன் இது நடக்கவில்லை? நடப்பதற்கு கடந்தகால அரசியல் வியூகங்கள் இடம்வைக்கவில்லை என்பதே பொருளியல் நிபுணர்களின் கருத்து.

எங்கோவிருந்துகொண்டு இன்னொரு நாட்டில் நடப்பதை கண்காணிக்கும் நவீன கருவிகளைக் கொண்டுதான் எதிரிகள் அழிக்கப்படும் நிலையில், எந்த நாடுகளும் பாதுகாப்பில் கரிசனையின்யி்ன்றி இருக்கமுடியாதுதான். இந்தியாவின் இந்த நியாயங்கள் இலங்கைக்கு சங்கடத்தை ஏற்படுத்துவதையே பொறிக்குள் அகப்படும் அரசியல் என்கிறோம். கடல்வளங்களைச் சுரண்டல், அயல்நாடுகளை கண்காணித்தல், ஆட்கடத்தல், உளவுப்பரிமாற்றம் மற்றும் ஒலி அலைகளை ஒற்றுக்கேட்டல் போன்ற நோக்கங்கள் சீனாவின் தற்போதைய தேவையென ஐரோப்பா உட்பட அமெரிக்கா கருதுகிறது.

அணு உலைகளி்ல் செயற்படும் கடல்மூழ்கிக் கப்பலைக் கண்காணிக்கவே, சீனாவின் இந்தக் கப்பல் வந்துள்ளதாகவும் நம்பப்படுகிறது. அவுஸ்திரேலியா, பிரான்ஸ் மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் அண்மையில் செய்துகொண்ட கடல் பாதுகாப்பு ஒப்பந்தம் சீனாவின் கடலாளுகைக்கு விடுக்கப்பட்ட சவாலாகக் கருதப்படுவதுதான் இந்தப் பிராந்தியப் பதற்றத்துக்கான காரணமாகும்.

 

சுஐப் எம்.காசிம்-

Web Design by Srilanka Muslims Web Team