கத்தாரில் உள்ள சகோதரர்களுக்கு எச்சரிக்கை : புகைப்படம் எடுத்தால் 02 வருட சிறை - Sri Lanka Muslim

கத்தாரில் உள்ள சகோதரர்களுக்கு எச்சரிக்கை : புகைப்படம் எடுத்தால் 02 வருட சிறை

Contributors
author image

Editorial Team

தனி ஒரு நபரையோ, குழுவையோ அல்லது விபத்து சம்பவங்களையோ தனது கையடக்கத் தொலைபேசியில் புகைப்படம், வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றினால் இரு வருட சிறைத் தண்டனையும் 10 ஆயிரம் ரியால்கள் அபராதமும் விதிக்கப்படும் என அந்நாட்டில் புதிய சட்டம் ஒன்று கடந்த 8ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் கத்தாரில் பணிபுரியும் இலங்கையர்கள் உட்பட அனைவரும் அவதானமாக இருக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

கையடக்கத் தொலைபேசி மூலம் பொதுவில் புகைப்படம், வீடியோ எடுப்பது தொடர்பான புதிய சட்டம் கத்தாரில் கடந்த 8 ஆம் திகதி நிறைவேற்றப்பட்டுள்ளது.

கத்தாரின் குற்றவியல் சட்டக்கோவையின் 333 சரத்தின் படி இன்படி, தனி ஒரு நபரையோ அல்லது குழுவையோ அவர்கள் அறியாத வேளையில் அவர்களின் கடிதத்தை திறந்து பார்த்தல், தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக்கேட்டல், தனிப்பிட்ட கலந்துரையாடல்களை ஒலிப்பதிவாகவோ அல்லது காணொளியாகவோ பதிவு செய்தல் போன்ற சட்டத்தின் பிரகாரம் குற்றமாகும்.

இதேபோன்று வீதி விபத்துக்களையும் விபத்தில் பாதிக்கப்பட்ட நபர்களின் புகைப்படங்களையும் அவர்களின் அனுமதியின்றி கையடக்கதொலைபேசியில் புகைப்படமாகவோ வீடியோவாகவோ எடுத்து சமூகவலைத்தளங்கள் மற்றும் இணையத்தளங்களில் பதிவேற்றினால் இருவருட சிறைத் தண்டனையும் 10 ஆயிரம் ரியால்கள் அபராதமும் விதிக்கப்படும்.

கடந்த இரு வருடங்களாக மேற்படி சட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பாக அந்நாட்டு அமைச்சரவையில் கலந்துரையாடப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை கடந்த 2015 ஆம் ஆண்டு கத்தாரில் இடம்பெற்ற இரு விபத்து சம்பவங்களையடுத்தே இந்த சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த 2015 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் இடம்பெற்ற கோர விபத்தொன்றில் இருவர் கொல்லப்பட்டனர். இச்சம்பவத்தை புகைப்படமாக பதிவேற்றிய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

இதேவேளை கடந்த 2015 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தோஹாவில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றை இளைஞர் ஒருவர் அடித்து நொறுக்குவதை வீடியோவாக பதிவு செய்து பதிவேற்றிய இரு நபர்களை பொலிஸார் கைது செய்தனர்.

இந்த சம்பவங்களை அடிப்படையாக வைத்து மேற்கொள்ளப்பட்டு வந்த கலந்துரையாடல்கள் மற்றும் சட்ட சீர்திருத்தங்களையடுத்தே இந்த புதிய சட்டம் அமுலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

Web Design by Srilanka Muslims Web Team