“கப்புட்டு காக் காக்” என ஒலி எழுப்பியதற்காக கைது செய்யப்பட்ட சட்டத்தரணி விடுவிப்பு! - Sri Lanka Muslim

“கப்புட்டு காக் காக்” என ஒலி எழுப்பியதற்காக கைது செய்யப்பட்ட சட்டத்தரணி விடுவிப்பு!

Contributors

மக்கள் போராட்டத்தின் போது உயிர்நீத்த மற்றும் காயமடைந்த போராட்டக்காரர்களை நினைவுகூரும் வகையில், காலி முகத்திடலில் இடம்பெற்ற நினைவேந்தல் நிகழ்வின் போது, வாகனத்தில் “கப்புட்டு காக் காக்” என்ற ஒலியை எழுப்பியதாகக் குற்றம் சுமத்தி தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கின் சந்தேகநபரான சட்டத்தரணியை விடுதலை செய்யுமாறு கொழும்பு மேலதிக நீதவான் பிரபாகரன் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.

எவருக்கேனும் எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்வதற்கு முன்னதாக சட்டம் தொடர்பில் ஆராய்ந்து அதன் பின்னர் வழக்கு தாக்கல் செய்யுமாறு பொலிஸாருக்கு அறிவுறுத்தல் விடுத்த மேலதிக நீதவான், சட்டத்தரணி துஷ்மந்த வீரரத்னவை விடுதலை செய்துள்ளார்.

போராட்டக்காரர்களை கைது செய்து, பொலிஸார் மேற்கொண்ட முறையற்ற செயற்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காகவே சந்தேகநபரான சட்டத்தரணி காலி முகத்திடலில் தமது காரிலிருந்து ஒலி எழுப்பியதாகவும் , அரசாங்கத்திற்கு எதிராக எதிர்ப்பு தெரிவிப்பதற்கான உரிமை அரசியலமைப்பின் ஊடாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ், ஜனாதிபதி சட்டத்தரணி சரத் ஜயமான்ன உள்ளிட்ட சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் முன்வைத்த வாதங்களை அடுத்து நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

தற்போதைய ஜனாதிபதி போன்றே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவும் எதிர்க்கட்சியில் இருந்தபோது அரசாங்கங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக சுட்டிக்காட்டிய சட்டத்தரணிகள், சந்தேகநபரான சட்டத்தரணிக்கு எதிராக ஒலி எழுப்பி இடையூறு விளைவித்ததாக தெரிவித்து வழக்கு தாக்கல் செய்ததன் ஊடாக உயர் நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்டுள்ள மக்களின் அடிப்படை உரிமையை பொலிஸார் மீறியுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளனர்.

Web Design by Srilanka Muslims Web Team